உடலை விட்டு வெளியேறி மீண்டும் அதே உடல் அல்லது வேறு உடலோடு இணையும் பரகாய பிரவேசக் கலையானது, ”கூடு விடா நிலை”, “கூடு விட்டு கூடு பாய்தல்” என இரண்டு படி நிலைகளை கொண்டது என்பதை நேற்று பார்த்தோம். முதல் நிலையில் தேறியவர்களுக்கு மட்டுமே இரண்டாவது நிலை சாத்தியமாகும்.
கூடு விடா நிலையில் உடலின் இயக்கம் யாவும் மட்டுப் பட்டு மிகமெலிதான சுவாசம் மட்டுமே இருக்குமாம். இத்தகைய நிலைக்கு உடலை பக்குவப் படுத்திட மிகக் கடுமையான பயிற்சிகள் அவசியமாகிறது. அவற்றை இரண்டு வகைகளாக கூறியிருக்கின்றனர். காய கற்பங்களை உண்பதன் மூலம் “காய சித்தி” நிலையை எட்டுவது. மற்றது யோகப் பயிற்சிகளின் மூலம் உயர் நிலையான யோக சித்தி அடைவது. இவ்விரண்டு பயிற்சிகளின் மூலமே கூடு விடா நிலையினை அடைய முடியுமாம். தற்போதைய நவீன அறிவியலோ இதன் சாத்தியங்களை முற்றாக நிராகரிக்கிறது.
ஆக, உடலை தகுதிப் படுத்துவதே இந்த கலையின் முதற்படி நிலை. ஏனெனில் உடலை விட்டு வெளியேறி மீண்டும் இணையும் வரை அந்த உடலானது அழியாமல் இருப்பது அவசியமாகிறது. இதன் பொருட்டே தங்களின் உடலை காடுகளிலும், மரபொந்துகளிலும், குகைகளிலும் மறைத்து வைத்ததாக தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இப்படி மறைத்து வைத்த உடல் ஒரு வேளை அழிந்து விட்டால் புதிதாக இணைந்த உடலுக்குத் தேவையான கற்பங்களை உண்டு அந்த உடம்பினை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்தச் செய்தி கருவூரார் அருளிய கருவூரார் வாத காவியம் என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
வழக்கத்தைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வகையுள்ள சித்தநாதர்கள் மாறிமாறிப்
பழக்கமுள்ள கூடுவிட்டுக் கூடுபாய்வார்
பார்த்தவருங் காலமட்டு மிருந்து வாழ்வார்.
முழக்கமுடன் பின்புவந்து தன்சரீரம்
முழைந்து கொள்வார் தன்சரீரத் தப்பிப்போனால்
இளக்கமுள கற்பமதை சாப்பிட்டேன்தான்
இனிமையுடன் செடமலதைப் பெலஞ் செய்வாரே
பெலஞ் செய்வா ரதைவிட்டு மறுகூடேகிப்
பின்புமொரு கூடதனிற் பாய்ந்து வாழ்வார்
நலமுடனே அவர்கள் செய்யுந் தொழிலையேதான்
நானெடுத்துச் சொல்ல வென்றால் நாவோயில்லை.
பலமுடனே பரகாயஞ் செய்யும் பொழுது
பார்த்தாக்கால் வெகுசுருக்கு அதீதம் மெத்த
தலமுடனே தன்சரீர மொளித்து வைக்கத்
தான்செய்து வைத்துவைக்குங் குகையைப்பாரே.
மேலும் யோக சித்தி மற்றும் காயசித்தி அடைந்த நிலையில் உள்ள உடலை அழிப்பதும் கடினம் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. திருமூலர் தன்னுடைய உடலில் இருந்து சமுத்திர ராஜன் உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்ந்து குடும்பம் நடத்தி வருகையில், மனைவியிடம் கொண்ட மோகத்தினால் தன் பூர்வ கதையையும், தன் உடல் இருக்கும் இடத்தையும் கூறிவிடுகிறார். மனைவி அந்த உடல் தன் இல்லற வாழ்க்கைக்கு ஆபத்து என கருதி அதை அழிக்கும் வகையினைக் கேட்க மனைவி மீதிருந்த அன்பினால் அந்த வகையினையும் சொல்கிறார். மனைவி தன் ஆட்களை அனுப்பி குகையில் இருந்த உடலைக் கண்டறிந்து திருமூலர் சொன்னபடி மருந்து பூட்டி எரித்த தகவல்கள் கருவூராரின் பின் வரும் பாடல்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
மற்றோருற் றோரும் மகிழ்ந்திருக்க இந்த
மாப்பிள்ளை பெண்ணும் பஞ்சணையில்
சற்றே படுத்துச்சந் தோஷமுற்றுப் பின்பு
தானிருந் தார்வெகு காலமட்டும்.
தாகம தாக யிருபேரு மொன்றாகச்
சந்தோஷ மாக யிருக்கையிலே
மோகத்தி னாலேமுன் வந்த சரிதையை
முற்றிலு மங்கே மொழிந்து விட்டார்.
என்றைக் கிருந்தாலும் மோசம் வருமென்று
எண்ணியே மாது இவரிடத்தில்
நன்றான வார்த்தைகள் பலது பேசியே
நன்மையுள்ள சன மெங்கேயென
கேட்ட வுடனே குகையிலிருப்ப தாய்க்
கெம்பீர மாகவுஞ் சொல்லி விட்டுத்
தேட்ட முடனதை யாருஞ் சுடாரென்றும்
தீயிடுஞ் சேதியுஞ் சொல்லி விட்டார்.
இந்த வகையெலாங் கண்டுகொண்டு அந்த
ஏந்திழை யாளும் புலையர்களை
விந்தை யுடனங்கு தானனுப் பிச்சடம்
விபரங் கூறியே வாக்களித்தாள்
மலையீனிற் சென்று குகையிற் பார்க்கையில்
மாது சொன்ன சடந்தானிருக்கப்
புலையர் கூடிச் சடத்தை மருந்துகள்
பூட்டியே மாட்டினார் தீயதனை
வெந்துநீ றாகியே போனபின்பு அதில்
மிக்க அஸ்திகளைத் தானெடுத்துச்
சந்தோஷ மாகவே ராஜாத்தி தன்னிடம்
தான் காட்டிப் போயினா ரேபுலையர்.
இப்படியாக இது முடிந்த தென
யாருக்குந் தோணாம லேயிருக்கச்
செப்பமுள்ள திரு மூல ராஜனும்
சிறப்பாய் வேட்டைக்குந் தானெழுந்து
வேட்டைக ளாடி முடித்தபின்பு மலை
மீதிலிருக்குங் குகையினிற் போய்
தாட்டிக மான சடத்தையுங் காணாமல்
தவித்து மயங்கியங் கேயிருந்து
வச்சிரந் தேகமதுஞ் சுட்டுக் கிடப்பதை
மனதாரக் கண்ணாலே தான்பார்த்து
உச்சித மாகத் தெரிந்து கொண்டு பின்பு
ஊரினி லேவந்து சேர்ந் திருந்தார்.
இந்தப் படியிவர் தானிருக்க இவர்க்
கினிமை யாகிய சீஷனுந்தான்
விந்தையுட னெங்குத் தான்தேடி இங்கு
விருப்ப மாகவே தேடிவர
சீஷன் வருவதைக் கண்டு திருமூலர்
செய்திகள் யாவு மவரிடத்தில்
நேசமுடன் சொல்லச் சீஷனுங் கண்டு
நெடுஞ்சாண் கடையாக வேதானும்.
பாதத்தில் வீழ்ந்து குருவென் றறிருந்துபின்
பத்தி யொடுசில வார்த்தை சொல்லி
நீத முடனேதான் தேடின சங்கதி
நேர்த்தியாய்ச் சொல்லி முடித்துவிட்டு
அன்றங்கு ராத்திரி தானிருந்து பின்
அருமையுள்ள மனை யாள் தனக்கும்
சென்றங்கு ஓர்சேதி சொல்லா மலிவர்
சேர்ந்தங் கிருவருந் தானேகி
காடு மலைகள் கடந்து குகைதனைக்
கண்டு யிருவரு மங்கிருந்து
தேடியே கற்பங்கள் சாப்பிட்டுப் பின்பவர்
தேகசித்தி செய்து கொண்டிருந்தார்.
ஆக கூடு விடா நிலை என்பது ஒரு வகையில் உடலினை உறுதி செய்து, உடல் இயக்கத்தை ஒரு ஒழுங்கில் கொண்டு அதன் இயக்கத்தை தேவைப் படும் போது நிறுத்தி வைக்கவும், செயல்படுத்தவுமான ஒரு கலை என்பது மட்டும் புரிகிறது. இந்த நிலையில் தேறினால் அழியாத உடலும் ஆரோக்கியமும் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது. இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நமக்கு உடற்கூறியல், மனித ஆயுட் காலம் பற்றிய பல புதிரான பக்கங்களை தெளிவு படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பாக முயற்சிக்கலாமே!
சித்தர் பெருமக்கள் கூடு விட்டு கூடு பாய்ந்த தகவல்களையும் அவற்றின் பின் புலத்தினையும் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.