சித்தர்கள் அருளிய சோதிடம் குறித்த தெளிவுகளை முந்தைய பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். தவற விட்டவர்கள் இந்த இனைப்பில் சென்று வாசிக்கலாம். அந்த பதிவுகளின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் ”நாக தோஷம்” அல்லது ”சர்ப்ப தோஷம்” பற்றி பார்ப்போம்.
சோதிடத்தில், ராகு-கேது கிரகங்களின் பார்வையினால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விளைவுகளையுமே நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கின்றனர். சோதிடவியலில் நாகதோஷம் கடுமையானது அல்லது துயரம் மிகுந்த ஒன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடும் உத்திகளைத்தான் பொதுவில் பரிகாரம் என்கின்றனர்.
போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....
பிறப்பினால் ஒருவரின் ஜாதக அமைப்பில் ராகு, கேது கிரகங்கள், சில இடங்களில் அமைவதால் நாகதோஷம் ஏற்படுவது ஒருவகை என்றும், பாம்பு புற்றினை இடித்தல் அல்லது பாம்புகளை கொல்வது போன்ற பாவச் செயல்களினால் நாகதோஷம் ஏற்படுவது இன்னொரு வகை என்கிறார்.
போகர் பாம்புகளை “உயிர் விழுங்கிகள்” என்கிறார். உறுப்புகளற்ற இந்த உயிரினம், ஒன்றுதான் இரையினை உயிருடன் விழுங்குவதாகவும், தினம் தினம் இவற்றில் உயிர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இருளுக்குள் அடைந்துவாழும் பாம்பின் பிறப்பு என்பது ஒரு வகையான சாபம் பெற்ற பிறப்பு என்றும், இவற்றைக் கொல்வதால் அந்த சாபம் கொல்பவரை தொற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறார்.
பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார். கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.
இத்தகைய நாக தோஷம் உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாரிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் உருவாகும். முறையான பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தடைகள் நீங்கி சுக வாழ்வு வாழலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதென்ன பரிகாரம்? விவரங்கள் நாளைய பதிவில்.....!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


