சித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

சித்த ரகசியம் தொடரில் இனி வரும் பதிவுகளில் சாபநிவர்த்தி பற்றி பார்ப்போம். இது பற்றி ஏற்கனவே முந்தைய சில பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.

சித்தரியலில் சாப நிவர்த்தி என்பதை குறைகளை களைதல் அல்லது தேவைகளுக்கேற்ப முன் தயாரிப்பு என்று அர்த்தப் படுத்தலாம். சித்தர்கள் பார்வையில் குருநாதரைத் தவிர குறையற்றவை என்று எதுவும் இல்லை.எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடன் இருப்பதாகவே கருதினர். அவற்றை மேம்படுத்தி பயன் படுத்துவதையே சாப நிவர்த்தி என்கிற தனிப் பிரிவாக வகுத்திருந்தனர்.

அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் சாப நிவர்த்தி பற்றி விரிவாக கூறியிருக்கிறார். சாப நிவர்த்தி செய்யப் படாத உடலோ, மூலிகையோ, தின்மமோ பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்கிறார்.

செய்யவே விட்டகுறை இருக்கும்போது
தீர்க்கமுடன் உடல்சாபம் நிவர்த்தி செய்தால்
ஐயமுள்ள மூலிகைகள் கண்ணிற்காணும்
அப்போது ரசவாதம் பலிதமாகும்
பொய்யல்ல உடற்சாபந் தீராமற்றான்
போய்த்தேடித் திரிந்தாலுங் கண்ணிற்காணா
மெய்யாகக் கண்டிட்டோ மென்று சொல்வார்
வீணிலவர் பேச்சைநம்பி அலைந்திடாதே.

- அகத்தியர் -

மனிதர்கள் தங்கள் உடல் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்வதால் வெற்றிகளைத் தரக்கூடிய அரிய மூலிகைகள் எல்லாம் கண்ணில் தெரியும் என்கிறார்.இதனால் இரசவாதம் பலில்லும், உடல்சாபத்தை நிவர்த்திக்காது எது செய்தாலும் அது கைகூடாது என்கிறார். மேலும்...


பாரப்பா சாபமது தீர்க்க வேணும்
பரிவான மூலிகையின் சாபம் தீரும்
காரப்பா சுண்ணசெந் தூரபற்பம்
கற்பமுறை செய்யவென்றால் சாபந்தீரும்
நேரப்பா வாதவித்தை வைத்தியங்கள்
நேர்மையுடன் செய்யவென்றால் சாபந்தீரும்
சீரப்பா கற்பகங்கள் தைலம் ஜாலம்
தீட்சைகளுஞ் செய்யவென்றால் சாபந்தீரே.

- அகத்தியர் -

பரிவான மூலிகைகளின் சாபத்தை தீர்க்கவேண்டும், சுண்ணம், செந்தூரம், பற்பம் செய்ய வேண்டும் என்றால் அவற்றின் சாபத்தை நீக்கவேண்டும், இரசவாத வித்தைகள், வைத்தியங்கள் சரியாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கும் சாபத்தை தீர்க்கவேண்டும், மேலும் தைலங்கள், கற்பங்கள் செய்யவேண்டும் என்றாலும் சாபம் தீர்க்க வேண்டும் என்கிறார்.

"தீரேநீ ஜாலமுடன் மாந்திரீகம்
செய்வதற்கு சித்தமுனிசாபந் தீரவேணும்
நேரேநீ யோகஞா னங்கள்செய்ய
நேர்மையுடன் சாபமது தீர்க்க வேணும்
கண்மணியே சாபமதை நிவர்த்திசெய்யே"

- அகத்தியர் -

ஜாலங்களும் மாந்திரீகமும் செய்யவேண்டுமாயின் சித்தர்கள், முனிவர்கள் சாபந்தீர்க்க வேண்டும், யோக ஞானங்கள் செய்யவேண்டுமாயினும் சாபங்கள் தீர்க்க வேண்டும். எனவே முதலில் சாபங்களை நிவர்த்தி செய்து கொள் என்கிறார். இதன் மூலம் சாப நிவர்த்தியின் முக்கியத்துவத்தை உணரலாம்.

சாப நிவர்த்தி குறித்த எனது புரிதல்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

yeshraja said...

padaippukku nanri..aavaludan katthirukkiren..

Tamil Siddhar Padalgal said...

om agathiesaya namaga.
Guruvin paripoorana aasikalal ungal pani melum thodara valthukkal.

அகோரி said...

அருமை தோழி

ram said...

my id is rmkr89@gmail.com

why you didnt reply

Post a comment