சித்தர்களின் உலோகவியல் - துத்தநாகம்

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் பயன்படும் உலோகம் ஒன்றினைப் பற்றி இன்று பார்ப்போம்.நற்சோரம், போகத்தின் பொருமல், பொங்குவோன், அஞ்சுவர்ணநிறத்தோன், மஞ்சளானோன், தாம்பர வேதை, வாத இரும்பு என சித்தர்களால் குறிப்பிடப் படும் இந்த உலோகம் துத்தநாகம் ஆகும்.இதனை போகர் பின்வருமாறு விளக்குகிறார்.

"நாகத்தின் பேர்தனையே நவிலக் கேளு
நற்சோரம் வெண்ணாகஞ் சீறலாகும்
போகத்தின் பொருமலமாம் பொங்கற்றானாம்
புகையான அஞ்சுவர்ண நிறத்தோனாகும்
நீகத்தின்னிரைச் சலோடு மஞ்சளானோன்
நெளிசானத் தாம்பரத்தின் வேதையானோன்
பாடியதோர் பேரெல்லாம் நாகத்தின் நாமமே"

- போகர் நிகண்டு -

துத்தநாகம் இயல்பில் கறுத்த நிறத்தைக் கொண்டது. மிக இலகுவாக உருகும் தன்மை கொண்டது, மேலும் இதனை தேய்த்து நுகர்ந்து பார்த்தால் கெட்ட நற்றமாக இருக்கும் என்கிறார். மிருதுவான தன்மையைக் கொண்ட இந்த உலோகம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதிக பாரமாக இருக்குமாம்.இதனை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

"காணவுமே நாகத்தின் குணத்தைக் கேளு
கருத்தொரு குணமுண்டாய்த் தான் இருக்கும்
சீணமாக சீக்கிரத்தில் உருகிப்போகும்
தேய்த்திதை முகர்ந்தாக்கால் நாற்றம் காணும்
மூணவுமே மிருதுவுமாய் தானிருக்கும்
மேனிகொஞ்சமாயிருந்து நிறுத்துப்பார்த்தால்
பாணவுமே பாரம் மெத்தவா யிருக்கும் பாரே"

- போகர் 7000 -

துத்தநாகம் சித்த மருத்துவத்திலும், இரசவாதத்திலும் பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.செந்தூரம், களங்கு வகைகளை தயாரிப்பதில் நாகத்தின் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.இத்தகைய செந்தூரத்தை உண்டால் இளம் கதிர் போல் உடல் பளபளப்பாகும் என்றும் எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலி ஏற்படாது. என்றும் பதினாறு வயது தோற்றதுடன் இருக்கலாம்.மேலும் இவர் முதிய உடல் இளைஞனைப் போல ஆகிவிடும் என்கிறார்.துத்தநாகம் சிறந்த காயகற்பமாய் விளங்குவதாகவும் போகர் தனது பாடலில் கூறுகிறார்.

"செந்தூரம் செய்துதான் உண்பாயானால்
சிறுகதிர்போல் மேனியாம் ஆயிரத்திற்கு ஓடும்
எந்தூரம் போனாலும் கால்நோகாது
பந்தூரம் வயதுபதி னாறு மாகும்
பழுத்தவுடல் இளைஞனைப்போலாகுங் காணே"

- போகர் 7000 -

சித்தர்களின் உலோகவியல் என்ப்து பரந்துபட்ட அறிவியல் தொகுப்பு. இதன் அடிப்படை நிலைகளை மட்டுமே இந்த வாரத்தில் ஆவண்ப் படுத்தி இருக்கிறேன்.நம்மிடையே இருக்கும் தகவல்களைக் கொண்டு இதன் நீள,அகலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல பேருண்மைகளை வெளிக் கொணர இயலும்.குருவருள் சித்திக்குமானால் எதிர்காலத்தில் இது தொடர்பாய் விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

1 comments:

tamilvirumbi said...

Thozi,
The concise exposition about various metals in aspects of siththars is rendered superbly.I don't find sufficient words to express my gratitude.Please keep up in giving more collections of siththars.

Post a comment