சித்தர்களின் உலோகவியல் - வெண்கலம்

Author: தோழி / Labels: ,

இன்றைய பதிவில் சித்தர்கள் பகுத்தளித்த மற்றொரு உலோகமான வெண்கலத்தைப் பற்றி பார்ப்போம்.போகரின் “போகர் நிகண்டு” என்கிற நூலில் வெண்கலத்தின் பல்வேறு பெயர்களைப் பற்றி போகர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"வெங்கலத்தின் பெயர்தனையே விளம்பக்கேளு
மிரளுகின்ற தோசமாங் கஞ்சமாகும்
பங்கலத்தின் ஓடையாங் கலங்கிண்ணியாகும்
பார்க்கின்ற கண்ணாட்டி மணியுமாகும்
மங்கலத்தி மாருதமாம் பிரகாசமாகும்
வலிக்கஞ்சம் வாசகப் பீனிசமுமாகும்
செங்கலதின் செப்பு ரெண்டு வெள்ளீயம் ஒன்று
சேர்ந்திடவே வெங்கலத்தின் செயலுமாமே"

- போகர் நிகண்டு -

மிரளும் தோசம், கஞ்சம், மங்கல ஓசை, கலங்கிண்ணி, கண்ணாட்டி மணி, மங்கல மாருதம், கஞ்ச வாசகம், பீனிசம் போன்ற பெயர்களால் வெண்கலம் அழைக்கப் பட்டிருக்கிறது. தற்காலத்தில் இதை வெங்கலம் என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட வ்கிதத்தில் செம்பும், வெள்ளீயமும் சேர்த்து உருக்க வெண்கலம் உருவாகும் என்கிறார் போகர்.வெண்கலத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகக் குறிப்பிடும் போகர் அது குறித்து பின்வருமாறு கூறுகிறார்.


"வேக்கியுமே வெங்கலந்தான் னிரண்டு பேதம்
மிக்கது வோர் புசங்கமென்ற வெங்க லந்தான்
சவுராட்டி ரநாட்டில்தான் தோற்றமாச்சு
மிக்கியுமே ரசகர்மம் தனக்குத் தானும்
மிகுதியுமே உத்தமமெற்றிந்து கொள்ளே"

- போகர் 7000 -

"அரிந்துமே கிரித்தும வெங்கலந்தான்
அடைவுதானே செம்போடு வெள்ளீயம்ரெண்டு
குரித்துமேதான் குகையிலிட்டு உருக்கிச் சாய்க்க
கிரித்தும மென்ற வெங்க லமுமே ஆச்சே
ஆக்கியுமேதான் சகலருமே உண்ணத்தக்க
அனேகவித பாத்திரங்கள் உண்டாக்கினார்கள்"

- போகர் 7000 -

இயற்கையாகத் தோன்றிய வெங்கலமே உத்தமமானது.இதை புசவங்க வெண்கலம் என்கிறார்.மேலும் இத்தகைய வெண்கலம் சவுராட்டிர நாட்டில் கிடைப்பதாகவும் கூறுகிறார். செம்புடன் இரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து குகையிட்டு உருக்கினால் கிடைப்பது மற்றொரு வகையான வெண்க்லம். இதை கிரித்தும வெண்கலம் என்கிறார் போகர். இந்த செயற்கை வெண்கலத்தையே நாம் தற்போது புழக்கத்தில் வைத்திருக்கிறோம்.


"சாப்பிட்டால் பாத்திரத்தில் சுகமுமாமே
சுகமாகும் நெய்புளிப்புச் சரக்கு கள்தான்
சேர்த்துவைத்தி துகளிலே புசிக்கலாகா
மகமாகும் மற்றமற்ற பதார்த்தமெல்லாம்
மருவவேஇ தில்வைத்து புசித்திட்டாக்கால்
அகமாகும் தேவாமிர் தத்திற்கு மேலாம்
அறிந்திருந்த வெங்கலத்தை தெரிந்தெடு"

- போகர் 7000 -

வெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால் பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர்.ஆனால் நெய் மற்றும் புளிப்புச் சரக்குகளை வெண்கலப் பாதிரங்களில் உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். மற்ற எல்லா உணவுப் பதார்த்தங்களையும் இதில் உண்பதால் அவை தேவாமிர்தத்திற்க்கும் மேலான பொருளாகும் என்கிறார்.இதற்கு சரியான வெண்கலப் பாத்திரத்தை தெரிந்தெடுக்க வேண்டும் என்கிறார்.தூய வெண்கல பாத்திரத்தை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பற்றி போகர் பின்வருமாறு கூறுகிறார்.

"தனைப் போக்கும் வெங்கலந்தான் உரத்த சத்தம்
கறிந்துமதே கனமிகுதி யாயி ருக்கும்
காச்சினால்தான் சிவந்த நிறமாகும் பாரே"

- போகர் 7000 -

வெண்கலமானது நிலத்தில் விழும் போது உரத்த சத்தத்தை உண்டு பண்னுவதோடு அதிக கனமாக இருக்கும். அத்துடன் காய்ச்சினால் சிவந்த நிறத்தில் இருக்கும். இதுவே தரமான வெண்கலம். தரமற்ற வெண்கலத்தை கண்டறியும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"மிகுந்து தான் சிறிது மஞ்சள் நிறமாய்க் காணும்
தேரென்று சிவக்கவுமே காச்சி னாக்கால்
செம்பு நிறமாகியுமே மிக ஊறலாகி
காரென்ற கனமில்லை தொனிமத் திபந்தான்
கருப்பாக மாசடைந்தால் இதை வாங்காதே"

இத்தகைய வெண்கலம் சற்று மஞ்சள் நிறமாகக் காட்சிதரும்.உருக்கினால் செப்பு நிறமாகி, மிகவும் ஊறல் போல கனம் குறைவாகவும் இருக்கும். அத்துடன் நிலத்தில் விழும் போது அதிக சத்தத்தை உண்டு பண்ணாது என்றும் கறுப்பாகி மாசடைந்து காணப்பட்டால் அதை வாங்காதே என்று நேரடியாகவே சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே...நாளைய பதிவுடன் உலோகவியல் தொடரை இடை நிறுத்திக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Guruvadi Saranam said...

nice

Unknown said...

thanks

robinson said...

thanks

tamilvirumbi said...

Thozi,
The information given about bronze is an outstanding one.In the verses, you have cited from Bogar7000, some of it,I did not know.In the mean time,some of the information told in the verses is not at all invented also.I am sharing it from my experience.If anyone knows anything new apart from the verses told in Bogar7000,Please share in this blog.It will be notonly useful to me but also for others.

Anonymous said...

Graet article! thank you!

Post a comment