சித்தர்களின் மலை - புவனகிரி மலை

Author: தோழி / Labels:

அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட பிரார்த்திக்கிறேன்.


சித்தர்களின் மலைகள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் காண இருப்பது புவனகிரி மலையைப் பற்றியது. முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகத்தியர் மலைக்கு தென்மேற்காய் இந்த மலை அமைந்திருக்கிறது.

இந்த மலையின் சிறப்பினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறர்


தூய்மையாய் புவனகிரி வளப்பஞ்சொல்வேன்
துப்புரவாய் புலத்தியனே சுகுணமாரா
வாய்மையாய் தென்காயற் பதிக்குமேற்கே
வளம்பெரிய நாதாககள் கூட்டமப்பா
மாய்மைகள் அதிகமுண்டு மன்னாகேண்மா
மகாபெரிய புவனகிரி மலைதானப்பா
சாய்மையா ரிஷிமுதலோர் சித்தர்கூட்டம்
தவமிருந்து சமாதிமிகக் கொண்டகாடே
காடான காடதுவும் நாதர் காடு
கடுவனமாம் குகையுண்டு சுனையுண்டு
தாடாண்மை கொண்டதொரு கிரிகள்கூட்டம்
தகமையுள்ள புவனகிரி அடிவாரத்தில்
மேடமையாம் வாசலது திட்டுவாகல்
மேன்மையுள்ள சுரங்கம்போல் வழிதான்காணும்
கூடாமை யாரேனும் முட்செல்வார்கள்
குருபரனே அசுவனியார் சொன்னவாக்கே
வாக்கான படியல்லோ நீயுமப்பா
நோக்கமுடன் எந்தனுக்கு தான்கொடுத்த
நுணுக்கமுள்ள சூக்குமம் தானப்பா
பொங்கமுடன் அசுவினியார் தமைநினைத்து
ஆக்கமுடன் செல்கையில் வாசல்காண்பாய்
அப்பனே உத்தமர்க்கு செர்வையாமே
செர்வையாய் குகைக்குள்ளே சுரங்கத்துள்ளே
செங்கமலக் கண்ணானே சென்றபோது
பார்வையா யங்கிருக்கும் காவலாளர்
பார்த்திபனே உமைக்கண்ட போதேவண்ணம்
தேர்வையாம் யாரென்று வினவிக்கேட்பார்
அகத்தியனான் சீடனென்று சொல்வாயே
ஆறவே உனையழைத்து வாசிர் மித்து
அப்பனே உட்காவல் கொள்ளுவாரே

- அகத்தியர் 12000 -

புலத்தியனே!, என் மாணவனே!, புவனகிரி மலையின் வளம் சொல்கிறேன் கேள் என்று துவங்குகிறார் அகத்தியர்..

இந்த மலை மிகவும் அடர்ந்த பெரிய காடுகளுடன் கூடியது. இங்கே பல குகைகளும், சுனைகளும் இருக்கின்றன. இந்த மலையில் பல சித்தர்கள் தவமியற்றி ஜீவ சமாதியடைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு மேடை உள்ளதாகவும், அந்த மேடையை ஒட்டி ஒரு சுரங்கம் இருக்கிறதென்றும், அதன் உள்ளே போகும் வழியின் சூட்சுமம் பற்றி அசுவினி தனக்கு கூறியதாகவும் கூறுகிறார்.

அசுவினி கூறியது நுணுக்கமான சூத்திரமாகும். நீ அங்கு சென்றால் அந்த சுரங்கப் பாதை ஒரு குகைக்கு இட்டுச் செல்லும், அங்கே அந்த குகையின் காவல் தெய்வம் உன்னை யாரென கேட்டால், ‘நான் அகத்தியரின் சீடன்’ எனச் சொன்னால் அந்த தெய்வம் உன்னை உள்ளே அழைத்து உபசரித்து அனுப்பும் என்கிறார்.

மேலும் அந்த குகையின் ரகசியங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார். அந்த விவரங்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

இத்துடன் சித்தர்களின் மலைகளைப் பற்றிய தொடரை இடை நிறுத்திக் கொள்ள்கிறேன். சதுரகிரி மலை பற்றி எழுதவில்லை என பலரும் கேட்டிருந்தனர். “சித்தர்கள் பூமி” என கருதப் படும் அந்த மலையின் சிறப்பினை ஒரு பதிவில் நிறைக்க இயலாது. எனவே விரைவில் தனியே அந்த மலையினைப் பற்றி எழுதுகிறேன்.

வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

மீண்டுமொரு முறை அனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல் வழியே வாழ்த்து செய்திகளை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

Annamalai said...

nandri thozhi,ungalukkum theepavali vazhthukkal

Anonymous said...

தோழிக்கு என் இனிய தீபத் ஒளி திருநாள் நல்வாழ்த்துகள். மேலும் சதுரகிரி பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

Post a comment