சித்தர்களின் மலை - நாகமலை

Author: தோழி / Labels:

தமிழகத்தில் நாகமலை என்ற பெயரில் பல மலைகள் இருக்கின்றது. சேலம் அருகே இருக்கும் ஒரு மலை, மதுரையை அடுத்திருக்கும் ஒரு மலை, திருச்செங்கோட்டிலிருக்கு ஒரு மலை என, இவை எல்லாமே நாக மலை என்றே அழைக்கப் படுகிறது.

இந்த பதிவில் நான் குறிப்பிடும் சித்தர்களின் நாகமலையானது பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தை அண்டியுள்ள சிறியதொரு மலை.இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

முறையான இன்னமொரு பாகஞ்சொல்வேன்
மூதுலகில் கீர்த்தியுள்ள புலஸ்தியாகேள்
நிறையான தென்பொதிகை கிழக்கேயப்பா
நீடான நாகமலை என்றொன்றுண்டு
திறையான பூமிவளஞ் சொல்வேன்பாரு
திகழான சவுட்டுமண் பூமியப்பா
பறையான பூமிதனிற் கல்லுமுண்டு
பாங்கான அண்டக்கல் லென்னலாமே.
என்னவே அண்டக்கல் சுண்ணமாகும்
எழிலான அடியொன்றும் முடியொன்றும்
பன்னவே அளர்பூமி என்னலாகும்
நன்னயமாய் நாகமலை அடிவாரத்தில்
நாதாக்கள் குடியிருப்பு மெத்தவுண்டு
சொன்னபடி மலையடி வாரந்தன்னில்
சடரான குகையுண்டு வழிதானுண்டு.
உண்டான குகையருகே மாண்பரப்பா
உத்தமனே நாதாக்கள் என்னைக் காண
கண்டிடவே குகையருகே போவாரங்கே
காணவந்த மாண்பர்களை சித்தர்தாமும்
திண்மையுடன் மாண்பார்களை உள்ளேசென்று
தீரமுடன் குகைவழியே செல்லும்போது
நன்மையுடன் காயகற்பந்தான் கொடுத்து
நாதாக்கள் தன்வசமாய்க் கொள்ளுவாரே.

- அகத்தியர் 12000 -

இந்த மலையானது சிறப்பான சவிட்டு மண்ணைக் கொண்ட வளமான பூமி , இங்கே கற்களும் காணப்படுகிறது, சிறப்பான அண்டக்கல் என்னும் ஒருவகை கற்கள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது. சுண்ணம் தயாரிக்க இந்த வகை கற்களே பயன்படுகிறது என்றும் சொல்கிறார்.. இந்த வகைப் பூமியை ”அளர்பூமி” என்று அழைப்பார்கள் என்கிறார்.

இந்த நாக மலையின் அடிவாரத்தில் பல சித்தர்கள் குடியிருப்புக்கள் நிறைந்திருக்கும் என்றும், மேலும் மலையடிவாரத்தில் குகைகள் பலவும் இருக்கிறது என்றும், அதற்கான வழிகளும் இருக்கிறது என்கிறார்.

சித்தர்களை தரிசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குகையை தேடி வருவார்கள் என்றும், அந்த குகைக்குள் செல்லும் பொது அவர்களுக்கு காயகல்ப்பம் கொடுத்து சித்தர்கள் அருள் புரிந்து தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

நாளைய பதிவில் “புவனகிரி” என்கிற மலையினைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

Anonymous said...

நன்றி தோழி

பாவா ஷரீப் said...

அன்புள்ள தோழி

கவரிமான் பிச்செடுத்து அதன் ஈரலுடன் தைலம் வாங்கி முன்சொன்ன பிச்சை போட்டு நாதமுடன்

1.பிச்செடுத்து
2.நாதமுடன்

இதில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை

--
Shareef

Post a comment