சித்தர்களின் மலை - அஞ்சன மலை

Author: தோழி / Labels:

கம்பராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில்...ராவணனுடன் போரிட்டு மாண்ட சடாயுவின் உடலைப் பார்த்து இராமன் வருந்தி அழுவதை கம்பர் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.

துள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய,
தள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான்.

- கம்பர்

”இராமன் சடாயுவின் உடல் மீது வீழ்ந்து அழுதான்” என்கிற உவமையில் சிறப்பிக்கப் பட்டிருக்கும் அஞ்சன மலை பற்றியதே இந்த பதிவு.

நீல நிறத்தவன் என கருதப் படும் இராமனை உவமையாக்கி இருப்பதன் மூலம் இந்த மலை நீல நிறமாகவோ அல்லது கருநீல நிறமாகவோ இருந்திருக்க வேண்டும். நான் முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த அஞ்சன கற்கள் நிறைந்த மலையாக கூட இது இருந்திருக்கலாம். இவை இரண்டும் முழுக்க முழுக்க என்னுடைய அனுமானமே, இது குறித்து விவரமறிந்தவர்கள் விளக்கினால் நானும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

இத்தகைய சிறப்பான அஞ்சன மலை பற்றி அகத்தியர் தனது ”அகத்தியர்12000” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"தாமான யின்னமொரு மார்க்கங்கேள்
தகைமையுள்ள மேற்குமுகம் வடபாகத்தில்
ஆமான மஞ்சனமாங் கிரிதானப்பா
அழகான நடுமையந் தன்னில்தானும்
வேமான மண்டபந்தான் குண்ணுக்கல்லாம்
வெளியான குகையுண்டு தடாகமுண்டு
சாமான மாகவல்லோ ரிடிகள்தாமும்
சாங்கமுடன் மலைசுத்தி யிருப்பார்காணே
காணவே புலத்தியனே யின்னங்கேளு
கருவான கோட்டைக்கு நான்குபக்கம்
தோணவே பாறைகொண்டு சாத்திருக்கும்
துலைதூரம் பார்த்தாலும் தடமுங்காணார்
தாணான தூண்மறைவில் பாறையப்பா
சட்டமுடன் அமைந்திருக்கும் ரிடிகள் கோட்டை
மானான கோட்டைக்கு வழியுங்காணார்
மகத்தான சித்தர்முனி கண்பார்பாரு
பழியான ரிடியினது சாபத்தாலே
பாங்கான கோட்டையது மண்மேடாச்சு
அழியாத வாஸ்தான மண்டபங்கள்
அவனிதனில் பிரளயத்தால் மூடலாச்சு
குழியான கோட்டைதனை சுத்தியல்லோ
கொடிதான கானாறு ஓடையுண்டே"

- அகத்தியர் 12000 -

புலத்தியனே! இன்னுமொரு மலை வளம் சொல்கிறேன் கேள் என அஞ்சன மலையைப் பற்றி சொல்கிறார்..

மேற்குப் பக்கத்தில் வடபாகமாக அஞ்சன மலை இருப்பதாகவும் அதன் நடுவில் வேமன மண்டபமும், அதை அடுத்து குண்ணுக் கல்லும், அதனை தொடர்ந்து ஒரு குகை இருப்பதாகவும், அந்த குகையின் முடிவில் இருக்கும் தடாகத்தினை சூழ்ந்து சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பார்கள் என்கிறார்.

இன்னும் கேளு!, அந்த அஞ்சன மலை உச்சியில் ஒரு கோட்டை ஒன்று பாறைகள் சூழ இருப்பதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது என்றும், அந்த கோட்டையின் தூன் மறைவில் இருக்கும் குகையினை ரிஷிக்கள் கோட்டை என்பர் என்கிறார். மறைவாக இருக்கும் அந்த குகையின் வாயிலை சித்தர்களே அறிவர் என்கிறார். அவர்களின் ஆசி உள்ளவர்களுக்கும் வாயில் தெரியும் என்கிறார்.

ஒரு ரிஷியின் சாபத்தால் அந்த அழகான கோட்டை மண்ணால் மூடி மண் மேடாகியது என்றும் மீதமாக இருக்கும் பகுதிகள் காலமாற்றங்களால் அழிவடைந்ததாகவும் குறிப்பிடும் அவர் அந்த மண்ணால் மூடப்பட்ட கோட்டையை சுற்றி தற்போது ஒரு ஆறு ஊற்றெடுத்து உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

நாளைய பதிவில் ”நாகமலை” பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

Prakash said...

vannakkam tholi

Anjana malail engu ullathu?

by
Prakash

Anonymous said...

நன்றி தோழி .

tablasundar said...

vanakkam
nalla payan ulla padipu,
vazga valarga
natppudan
sundar

Post a comment