சித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”

Author: தோழி / Labels:

தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அமைந்திருக்கிறது. தற்போது நகரம் சூழ்ந்த பகுதியாகிவிட்ட விராலி மலை முற்காலத்தில் அடர் வனப் பகுதியாக விளங்கியது.

இந்த மலையில் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டதாக கருதப் படும் புகழ் பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது “திருப்புகழ்” என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில் ஆராதிப்பதன் மூலம் இந்த திருக்கோவிலின் சிறப்பினை அறியலாம்.

இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதாக ”அகத்தியர் 12000” என்ற நூலில் பாடல் ஒன்று காணக் கிடைக்கிறது. ஆச்சர்யகரமாய் தற்போதிருக்கும் முருகன் கோவிலைப் பற்றிய விவரங்கள் அந்த பாடலில் இல்லை.

பூணவேயின்னமொரு மார்க்கங்கேளு
புகழான புலஸ்தியனே சொல்வேன்பாரு
தோணவே விராலியென்ற மலைதானுண்டு
தொல்லுலகில் சித்தர்முனி குடியிருப்பு
காணவே விராலியென்ற மலையிலப்பா
கண்காணா சுனையுண்டு வுதகமுண்டு
நாணவே வெகுகோடிகாலமப்பா
நாதாக்கள் வாசமதுசெய்வார்பாரெ.
பாரெதான் விராலிமலை யுச்சியப்பா
பாங்கான கணேசரென்ற கோவிலுண்டு
நேரெதான் வடக்குமுந் தன்னிலப்பா
நிலையான கல்லாலை மரமுமுமண்டு
சீரெதா னோட்டை மணடபந்தானப்பா
சிறப்புடனே புலியுறங்கும் வாயக்கால்தான்
கூரேதா னாயக்கால் மண்டபத்தில்
குறிப்பான கருநெல்லி யிருக்குதானே.

-அகத்தியர் 12000 -

விராலி என்றொரு மலை இருக்கிறது. அங்கே சித்தர்கள், முனிவர்கள் பலகோடி காலம் வசிப்பார்கள். இந்த மலையில் ஒரு சுனை இருக்கிறது அந்த சுனையை மிக இலகுவாக யாராலும் காணமுடியாது அத்துடன் அங்கு உதக நீர் நிலையும் இந்த மலையில் இருக்கின்றது என்கிறார்.

விராலிமலையின் உச்சியில் ஒரு கணேசர் கோவில் இருக்கின்றது. அந்த கோவிலுக்கு வடக்குப்பக்கமாக கல்லால மரம் ஒன்று உள்ளது என்றும் அந்த மரத்தருகில் சிரோதன நொட்டை மண்டபமும், அதை தொடர்ந்து புளியிறங்கு வாய்க்காலும் காணப்படுகிறது.அந்த வாய்க்காலை ஒட்டி உள்ள மண்டபத்தில் குறிப்பாக ஒரு கரு நெல்லி மரம் உள்ளதென்றும் அந்தமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவம் செய்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

தவம் செய்த முனிவர் பின்னர் ”ஞான நூல்” என்னும் பெருநூலைப் பாடி வைத்தார். அந்த நூல் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும், அவ்வாறு கிடைத்தால் பூவுலகில் சித்துக்கள் அதிகமாகி மக்கள் வருந்துவர் என்று பக்கத்தில் இருக்கும் கற் குகையில் வைத்து சாபமிட்டார் என்கிறார்

குருவருள் துணையுடன் இந்த மலைக்கு வருபவர்களுக்கு அந்த நூல் கிடைக்குமானால் அவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

நாளைய பதிவில் ”அஞ்சன மலை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

Anonymous said...

Very well-researched and interesting article. Looking forward to read more posts.

Anonymous said...

Very well-researched and interesting article.

Anonymous said...

நல்ல தகவல் தோழி . தங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள.

அகோரி said...

நல்ல தகவல் தோழி

Post a comment