ஓர் வேண்டுகோள்!

Author: தோழி /

ஏதோ ஒரு வேகத்தில் இலக்கில்லாமல் துவங்கிய இந்த வலைமனையின் வளர்ச்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது.மிக நிச்சயமாக இதெல்லாம் குருவருளினால் மட்டுமே சாத்தியமாயிற்று.சித்தர்களைப் பற்றி பெரியவர்கள் பலர் இங்கே விரிவாகவும், தெளிவாகவும் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் ,வயதில் மிக இளையவளான எனது பதிவுகள் கவனிக்கப் படுமா என்கிற கவலைகள் நிச்சயமாக இருந்தது. திட்டமில்லாமல் எழுதிக் கொண்டிருந்த என்னை நெறிப்படுத்திய பெருமை இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களையே சேரும்.

தினமும் ஒரு பதிவு எழுதுவதன் சாத்தியம் குறித்து பல நண்பர்கள் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.எனது படிப்பின் ஊடே தினசரி பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று.சனிக் கிழமைகளில் அடுத்த வாரத்திற்கு என்ன எழுதுவது என தீர்மானித்து, புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.

அழிந்து கொண்டிருக்கும் தகவல்களை அனைவருக்கும் பொதுவாய் பகிர்வதன் பலனாய்,நாடு கடந்து கிடைத்த பல நல்ல நட்புகளும்,பெரியவர்களின் மனமார்ந்த ஆசிகளும்,தமிழகத்து பத்திரிக்கை ஒன்றில் எனது கட்டுரைகள் இடம் பிடித்ததும், பதிப்பகம் ஒன்றில் இருந்து வந்திருக்கும் விசாரணை என இந்த வலை மனையின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, பெரிதான வெளியுலக தொடர்பில்லாத சாமான்ய தமிழ் பெண்ணுக்கு மிகப் பெரிய வெகுமானம்.

கடந்த ஒன்பது மாதங்களில் இந்த வலைமனையின் வளர்ச்சியினை கீழே உள்ள படம் விளக்கிடும். தற்போது இந்த வலை மனையினை தினசரி அறுநூறு பேர் வரையில் பார்வையிடுகின்றனர்.


இந்த தகவல் பகிர்வை இன்னமும் முனைப்பாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது முன்னோர்களின் அருமையினை அனைவரும் உணரச் செய்திட இயலும். சித்தர்கள் அருளிய தகவல்களின் மீது மேலதிக ஆய்வுகள், விவாதங்கள் நடத்துவதன் மூலம் பல அரிய பேருண்மைகளை நாம் வாழும் சமூகத்திற்கு தந்திட இயலும்.

சுயநலமில்லாத பொது நலமே ஒரு சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். என்னுடைய சிறுமுயற்சினால் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை தினசரி அறுநூறு பேருக்கு கொண்டு சேர்க்க முடிகிறதென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த தகவல்களை இன்னும் பல ஆயிரம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்திட இயலும்.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுவே...இந்த வலைமனையின் விவரங்களை இயன்றவரையில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்திடுங்கள்.நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிறவாமை!

Author: தோழி / Labels: ,

மனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.

பணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.

சித்தரியலில் " மெய்யுணர்வு " அல்லது " மெய்யறிவு " என்பதன் ஆதியும் அந்தமுமான குறிக்கோள் மீண்டும் பிறவாமையே என்பதாக கருதப் படுகிறது.மனிதன் தன் அகத்தை மறந்து புறவாழ்வில் காட்டிடும் நாட்டமே இந்த கர்ம வினைகளுக்கு காரணம். நமது எண்ணம், செயல்,சிந்தனைகளின் விளைவாகவே கர்ம வினைகள் உருவாகிறது. இத்தகைய கர்ம வினைகளின் பலன்களின் காரணமாகவே இந்த பிறப்பு நேர்ந்திருக்கிறது என்று சித்தர்கள் நம்பினர்.

இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் இந்த கர்ம வினைகளே காரணம் எனவும் கருதினர்.இதனை பிள்ளையை பெறுவது பெற்றோர் வினை என்றால் அவர்களுக்கு பிள்ளையாய் பிறப்பது பிள்ளையின் வினை என்றனர்.

பட்டினத்து பிள்ளையார் என அறியப்பட்ட பட்டினத்தார் இந்த பிற்வாமையை வலியுறுத்தி அநேக பாடல்களை அருளியிருக்கிறார்.பட்டினத்தார் பாடல்கள் பெரும்பாலும் மன தத்துவத்தை அடிப்படையாக கொண்டவையே. புறவாழ்வை வெறுத்து அகவாழ்வில் எல்லாம் வல்ல பரம்பொருளை மனதில் இருத்தி பேரின்ப பெருவாழ்வு வாழ்தல் பற்றியதாகவே அவரது பாடல்கள் இருக்கின்ற்து.

"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே!"

- பட்டினத்தார் -

நம்முடைய முன்வினைகள் அதாவது கரும வினைகளின் பலனை அனுபவித்திடவே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். இந்த கரும வினைகள்தான் நாம் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கும் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. "அரிது அரிது மானிடராதல் அரிது" என்ற முது மொழிக்கு ஏற்ப கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பைப் பெற்ற நாம் இந்தப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்தி நற்சிந்தனைகளை பெருக்கி நல்ல செயல்களைப் புரிந்து, முன்வினைகளான கர்மவினைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

திருவள்ளுவர் கூட பிறவாமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குறள் ஒன்றினை அருளியிருக்கிறார்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

-திருவள்ளுவர்-

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் உலோகவியல் - துத்தநாகம்

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் பயன்படும் உலோகம் ஒன்றினைப் பற்றி இன்று பார்ப்போம்.நற்சோரம், போகத்தின் பொருமல், பொங்குவோன், அஞ்சுவர்ணநிறத்தோன், மஞ்சளானோன், தாம்பர வேதை, வாத இரும்பு என சித்தர்களால் குறிப்பிடப் படும் இந்த உலோகம் துத்தநாகம் ஆகும்.இதனை போகர் பின்வருமாறு விளக்குகிறார்.

"நாகத்தின் பேர்தனையே நவிலக் கேளு
நற்சோரம் வெண்ணாகஞ் சீறலாகும்
போகத்தின் பொருமலமாம் பொங்கற்றானாம்
புகையான அஞ்சுவர்ண நிறத்தோனாகும்
நீகத்தின்னிரைச் சலோடு மஞ்சளானோன்
நெளிசானத் தாம்பரத்தின் வேதையானோன்
பாடியதோர் பேரெல்லாம் நாகத்தின் நாமமே"

- போகர் நிகண்டு -

துத்தநாகம் இயல்பில் கறுத்த நிறத்தைக் கொண்டது. மிக இலகுவாக உருகும் தன்மை கொண்டது, மேலும் இதனை தேய்த்து நுகர்ந்து பார்த்தால் கெட்ட நற்றமாக இருக்கும் என்கிறார். மிருதுவான தன்மையைக் கொண்ட இந்த உலோகம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதிக பாரமாக இருக்குமாம்.இதனை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

"காணவுமே நாகத்தின் குணத்தைக் கேளு
கருத்தொரு குணமுண்டாய்த் தான் இருக்கும்
சீணமாக சீக்கிரத்தில் உருகிப்போகும்
தேய்த்திதை முகர்ந்தாக்கால் நாற்றம் காணும்
மூணவுமே மிருதுவுமாய் தானிருக்கும்
மேனிகொஞ்சமாயிருந்து நிறுத்துப்பார்த்தால்
பாணவுமே பாரம் மெத்தவா யிருக்கும் பாரே"

- போகர் 7000 -

துத்தநாகம் சித்த மருத்துவத்திலும், இரசவாதத்திலும் பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.செந்தூரம், களங்கு வகைகளை தயாரிப்பதில் நாகத்தின் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.இத்தகைய செந்தூரத்தை உண்டால் இளம் கதிர் போல் உடல் பளபளப்பாகும் என்றும் எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலி ஏற்படாது. என்றும் பதினாறு வயது தோற்றதுடன் இருக்கலாம்.மேலும் இவர் முதிய உடல் இளைஞனைப் போல ஆகிவிடும் என்கிறார்.துத்தநாகம் சிறந்த காயகற்பமாய் விளங்குவதாகவும் போகர் தனது பாடலில் கூறுகிறார்.

"செந்தூரம் செய்துதான் உண்பாயானால்
சிறுகதிர்போல் மேனியாம் ஆயிரத்திற்கு ஓடும்
எந்தூரம் போனாலும் கால்நோகாது
பந்தூரம் வயதுபதி னாறு மாகும்
பழுத்தவுடல் இளைஞனைப்போலாகுங் காணே"

- போகர் 7000 -

சித்தர்களின் உலோகவியல் என்ப்து பரந்துபட்ட அறிவியல் தொகுப்பு. இதன் அடிப்படை நிலைகளை மட்டுமே இந்த வாரத்தில் ஆவண்ப் படுத்தி இருக்கிறேன்.நம்மிடையே இருக்கும் தகவல்களைக் கொண்டு இதன் நீள,அகலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல பேருண்மைகளை வெளிக் கொணர இயலும்.குருவருள் சித்திக்குமானால் எதிர்காலத்தில் இது தொடர்பாய் விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் உலோகவியல் - வெண்கலம்

Author: தோழி / Labels: ,

இன்றைய பதிவில் சித்தர்கள் பகுத்தளித்த மற்றொரு உலோகமான வெண்கலத்தைப் பற்றி பார்ப்போம்.போகரின் “போகர் நிகண்டு” என்கிற நூலில் வெண்கலத்தின் பல்வேறு பெயர்களைப் பற்றி போகர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"வெங்கலத்தின் பெயர்தனையே விளம்பக்கேளு
மிரளுகின்ற தோசமாங் கஞ்சமாகும்
பங்கலத்தின் ஓடையாங் கலங்கிண்ணியாகும்
பார்க்கின்ற கண்ணாட்டி மணியுமாகும்
மங்கலத்தி மாருதமாம் பிரகாசமாகும்
வலிக்கஞ்சம் வாசகப் பீனிசமுமாகும்
செங்கலதின் செப்பு ரெண்டு வெள்ளீயம் ஒன்று
சேர்ந்திடவே வெங்கலத்தின் செயலுமாமே"

- போகர் நிகண்டு -

மிரளும் தோசம், கஞ்சம், மங்கல ஓசை, கலங்கிண்ணி, கண்ணாட்டி மணி, மங்கல மாருதம், கஞ்ச வாசகம், பீனிசம் போன்ற பெயர்களால் வெண்கலம் அழைக்கப் பட்டிருக்கிறது. தற்காலத்தில் இதை வெங்கலம் என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட வ்கிதத்தில் செம்பும், வெள்ளீயமும் சேர்த்து உருக்க வெண்கலம் உருவாகும் என்கிறார் போகர்.வெண்கலத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகக் குறிப்பிடும் போகர் அது குறித்து பின்வருமாறு கூறுகிறார்.


"வேக்கியுமே வெங்கலந்தான் னிரண்டு பேதம்
மிக்கது வோர் புசங்கமென்ற வெங்க லந்தான்
சவுராட்டி ரநாட்டில்தான் தோற்றமாச்சு
மிக்கியுமே ரசகர்மம் தனக்குத் தானும்
மிகுதியுமே உத்தமமெற்றிந்து கொள்ளே"

- போகர் 7000 -

"அரிந்துமே கிரித்தும வெங்கலந்தான்
அடைவுதானே செம்போடு வெள்ளீயம்ரெண்டு
குரித்துமேதான் குகையிலிட்டு உருக்கிச் சாய்க்க
கிரித்தும மென்ற வெங்க லமுமே ஆச்சே
ஆக்கியுமேதான் சகலருமே உண்ணத்தக்க
அனேகவித பாத்திரங்கள் உண்டாக்கினார்கள்"

- போகர் 7000 -

இயற்கையாகத் தோன்றிய வெங்கலமே உத்தமமானது.இதை புசவங்க வெண்கலம் என்கிறார்.மேலும் இத்தகைய வெண்கலம் சவுராட்டிர நாட்டில் கிடைப்பதாகவும் கூறுகிறார். செம்புடன் இரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து குகையிட்டு உருக்கினால் கிடைப்பது மற்றொரு வகையான வெண்க்லம். இதை கிரித்தும வெண்கலம் என்கிறார் போகர். இந்த செயற்கை வெண்கலத்தையே நாம் தற்போது புழக்கத்தில் வைத்திருக்கிறோம்.


"சாப்பிட்டால் பாத்திரத்தில் சுகமுமாமே
சுகமாகும் நெய்புளிப்புச் சரக்கு கள்தான்
சேர்த்துவைத்தி துகளிலே புசிக்கலாகா
மகமாகும் மற்றமற்ற பதார்த்தமெல்லாம்
மருவவேஇ தில்வைத்து புசித்திட்டாக்கால்
அகமாகும் தேவாமிர் தத்திற்கு மேலாம்
அறிந்திருந்த வெங்கலத்தை தெரிந்தெடு"

- போகர் 7000 -

வெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால் பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர்.ஆனால் நெய் மற்றும் புளிப்புச் சரக்குகளை வெண்கலப் பாதிரங்களில் உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். மற்ற எல்லா உணவுப் பதார்த்தங்களையும் இதில் உண்பதால் அவை தேவாமிர்தத்திற்க்கும் மேலான பொருளாகும் என்கிறார்.இதற்கு சரியான வெண்கலப் பாத்திரத்தை தெரிந்தெடுக்க வேண்டும் என்கிறார்.தூய வெண்கல பாத்திரத்தை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பற்றி போகர் பின்வருமாறு கூறுகிறார்.

"தனைப் போக்கும் வெங்கலந்தான் உரத்த சத்தம்
கறிந்துமதே கனமிகுதி யாயி ருக்கும்
காச்சினால்தான் சிவந்த நிறமாகும் பாரே"

- போகர் 7000 -

வெண்கலமானது நிலத்தில் விழும் போது உரத்த சத்தத்தை உண்டு பண்னுவதோடு அதிக கனமாக இருக்கும். அத்துடன் காய்ச்சினால் சிவந்த நிறத்தில் இருக்கும். இதுவே தரமான வெண்கலம். தரமற்ற வெண்கலத்தை கண்டறியும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"மிகுந்து தான் சிறிது மஞ்சள் நிறமாய்க் காணும்
தேரென்று சிவக்கவுமே காச்சி னாக்கால்
செம்பு நிறமாகியுமே மிக ஊறலாகி
காரென்ற கனமில்லை தொனிமத் திபந்தான்
கருப்பாக மாசடைந்தால் இதை வாங்காதே"

இத்தகைய வெண்கலம் சற்று மஞ்சள் நிறமாகக் காட்சிதரும்.உருக்கினால் செப்பு நிறமாகி, மிகவும் ஊறல் போல கனம் குறைவாகவும் இருக்கும். அத்துடன் நிலத்தில் விழும் போது அதிக சத்தத்தை உண்டு பண்ணாது என்றும் கறுப்பாகி மாசடைந்து காணப்பட்டால் அதை வாங்காதே என்று நேரடியாகவே சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே...நாளைய பதிவுடன் உலோகவியல் தொடரை இடை நிறுத்திக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் உலோகவியல் - பித்தளை

Author: தோழி / Labels: ,

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட உலோகங்களை சரியான விகிதத்தில் ஒன்றோடு ஒன்று கலப்பதன் மூலம் , புதிய மூன்றாவது வகை உலோகத்தினை உருவாக்கிட இயலும். இவ்வாறு உருவாக்கப் படும் பொருட்களை அலோகம் என்கின்றனர். இணைக்கப் பட்ட உலோகங்களின் தன்மைகளை தன்னகத்தே கொண்டு புதிய மேம்படுத்தப் பட்ட ஒன்றாக இந்த அலோகங்கள் இருக்கும்.

முறையான கலவை விகிதம், சரியான இணைப்பு தொழில் நுட்பம் இருந்தால் மட்டுமே இத்தகைய சிறந்த அலோகங்களை தயாரிக்க முடியும். நவீன அறிவியல் மிகுந்த ஆய்வுகளுக்குப் பின்னரே இத்தகைய அலோகங்களை உருவாக்கி பயன் படுத்துகிறது. நமது சித்தர்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தொழில் நுட்பத்தை உணர்ந்து பயன் படுத்தி சிறந்திருந்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் நம்மிடையே இருக்கிறது.

இந்த வகையில் இன்றும் வெகுசன பயன்பாட்டில் இருக்கும் அலோகம் ஒன்றினைப் பற்றிய சித்தர்களின் தெளிவுகளை பார்ப்போம்.துத்த நாகம் எனப் படும் நாகமும்,நேற்றைய பதிவில் பார்த்த செம்பும் இணைத்து உருவாக்கப் படுவதுதான் பித்தளை. இது கூத்தோடி, ஊத்தபரி, முழுக்கு, குடவன், காளிக்கம், நற்றப்பொன், சேரு என பவேறு பெயர்களாள் சித்தர் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.இந்த பித்தளையின் வகைகள், அதன் கலவை விகிதம், தன்மை, பண்புகளைக் குறித்து போகர் விரிவாக தனது ”போகர்7000”, ”போகர் நிகண்டு” நூல்களில் கூறியிருக்கிறார்.

"கண்மையான காகதுண்ட மாகி ஒன்று
கடுந்தார பித்தளைதான் ரெண்டுமாச்சு
இரெண்டிலே முன்சொன்ன காகதுண்டந்தான்
ஏற்றமான பூமியில் உற்பத்தி யாச்சு
பின்னது நாகம் ரெண் டெட்டு செம்பு
கூடித்தான் பித்தளையும் ஆச்சு ஆச்சு"

- போகர் 7000 -

இதன்படி “காகதுண்டம்”, ”கடுந்தாரம்” என இரண்டு வகை பித்தளைகள் இருப்பதாக போகர் கூறுகிறார். இதில் காகதுண்டம் என்பது இயற்கையாகவே கிடைக்கும் பித்தளை என்கிறார். இரண்டு பங்கு துத்த நாகமும், எட்டு பங்கு செம்பும் சேர்த்து உருக்குவதால் கிடைப்பது கடுந்தார பித்தளை என்கிறார். பித்தளையின் குணாதிசயங்களை பின்வருமாறு விளக்குகிறார்.

"தானான நாகம் ரெண்டு செம்போ எட்டு
தனிக் கூட்டுப் பித்தளையின் குணமுந்தானும்
கனமாக் குடிலமாகி வெப்பமாகி
வெளுப்பாகி விரிசலாகி மஞ்சளாகி
தேனான விருதி மிகவாயிருக்கும்"


- போகர் 7000 -

நாகமும் செம்பும் செர்த்து உருவாக்கும் பித்தளையானது இயல்பில் கனமானதாகவும்,அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும் இருக்கும். வெளுறிய மஞ்சள் நிறத்தைகொண்டதாகவும் நாகமும் செம்பும் கலவையாகக் கலந்ததும் அதிக செறிமானமுள்ளதாகவும் இருக்கும் என்கிறார். இவை தவிர பித்தளையின் பயன்பாடுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிய விவரங்களை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

நாளைய பதிவில் உலோகவியல் குறித்த மேலதிக விவரங்களுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் உலோகவியல் - செம்பு

Author: தோழி / Labels: ,

செம்பொன்,செப்பு,தாமிரம் என சித்தர்களின் பாடல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் செம்பு பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். இரசவாதத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் அருளப் பட்டிருக்கிறது.

தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும்,வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார்.அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கமும்,வெள்ளியும் பய்ன்படுத்த முடியும் என்கிறார்.

போகர் தனது “போகர்7000” என்கிற நூலில் செம்பின் இரு வகைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"ஆச்சென்ற செம்புதனில் இரண்டு பேதம்
அதன் விரிவு எதெண்றாக்கால் சொல்லக் கேளு
ஓச்சென்ற நேர்பாளம் என்னும் செம்பு
உத்தமந்தான் மிகுதியுமென் றறிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் ற்றிந்து கொள்ளு
மேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு
மிகுதியுந்தான் மத்திபமென் றறிந்து கொள்ளே"

செம்பில் இரண்டு வகை இருப்பதாகவும்,அவற்றில் நோபாளம் என்பது உத்தம வ்கையைச் சேர்ந்தது என்றும், மிலேச்சன் என்பது மத்திம வகையை சேர்ந்தது என குறிப்பிடுகிறார். மேலும் அவற்றின் குணாதிசயங்களை பின்வருமாறு கூறுகிறார்.


"அறிந்துமேதான் உத்தமத்தின் குணத்தைக் கேளு
அழுத்தமான மழுங்கலாக பார மாகி
செறிந்துமேதான் சிவப்பாகி அடிக்க அடிக்க
தீர்க்கமாக மிருதுவாய்த்தான் காய்ச்சினாக்கால்
வெறிந்துமேதான் விகாரகுண மில்லா தானால்
மிகுதியுமே உத்தமந்தான் இந்தச் செம்பு
மறிந்துமேதான் மத்திபத்தின் குணத்தைக் கேளு
மகாவெளுப்பு கருப்போடு சிவப்பு மாமே"

உத்தம வகை செம்பானது அழுத்தமாகவும், மழுங்கலாகவும், பாரமாகவும் இருக்கும்.இவை நன்கு செறிவான சிவப்பு நிறத்தைக் கொண்டது. நன்கு அடிக்க அடிக்க மிகவும் மென்மையாகும் தன்மை கொண்டது. மேலும் இதனை உருக்கினால் விகாரமடையாது. இதுவே நேர்பாளம் என்னும் உத்தம செம்பாகும் என்கிறார் போகர். என்று அறிந்து கொள் என்கிறார்.

"சிவப்பாகி கடினமாகி உத்தமத் துக்குச்
சிதைந்து மேதான் பெரிதாகி இருப்பதாகி
சிவப்பாகி கழுவவேக ழுவவே தானும்
ஏற்றமான கருப்பதாக இருப்பதானால்
மிவப்பாகி மிலேச்சமென்ற செம்ப தாகும்
மிகுதியுமே மத்திபந்தான் இன்னங் கேளு
துவர்ப்பாகி சுரோணிதவண் ணமிக வெளுப்பு
சுத்தமான கருங் கருப்பு கனமில் லாதே"

மத்திம வகை செம்பானது வெளிர் சிவப்பு நிறமும், கருமையும் கலந்த நிறத்துடன் காணப்படும். இவை உத்தம வகை செம்பினைப் போல உறுதியாக இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் என்கிறார். மேலும் இதனை உருக்க வெளிர் நிறம் நீங்கி கருமையடையும் என்றும் கூறுகிறார். இந்த வகை செம்பானது கனமில்லாமல் இருக்கும் என்கிறார்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் உலோகவியல் - இரும்பு

Author: தோழி / Labels: ,

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்ததன் ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.தமிழில் இதனை ”இரும்பொன்”, ”அயம்” என்று அழைத்திருக்கின்றனர். இரசவாதத்தில் இரும்பு தாழ்ந்த உலோகமாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.

போகர் தனது "போகர்7000" என்கிற நூலில் இரும்பின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"உண்டான தீட்சணமாம் இரும்பு தானும்
உற்றதோர் ஆவிதம் ஏதுஎன் றாக்கால்
கண்டான கரமென்றும் கரஞ்ச மென்றும்
கடியதோர் ஓநாளம் தாரா பட்டம்
பண்டான பரவுந்தான் காள லோகம்
பாங்கான கரலோகக் குணத்தைக் கேளு"

- போகர் 7000 -

இரும்பில் ஆறு வகை உள்ளதாகவும், அவை முறையே கர லோகம், கரஞ்ச லோகம், ஒநாள லோகம், தாராபட்ட லோகம், பசார லோகம், காள லோகம் என்கிறார் போகர்.இவை ஒவ்வொன்றையும் பகுத்து அவற்றின் பண்புகளையும் பயன்களையும் பின்வருமாறு போகர் விளக்குகிறார்.

கரலோகம்

"பாங்கான கரலோகக் குணத்தைக் கேளு
முண்டான பெருறையக் கனமாய்க் காணும்
மொத்தமாய்த்தான் தகடாகும் உடைந்தால் கேளே
கேளுமேதான் சூதம்பொல் மினுப்புங் காணல்
கெட்டியாக வளைத்தால்தான் வளையா தொடியும்
ஏளுமேதான் இக்குண முண்டான இரும்பு
இசைந்ததோர் கரலோக மென்று பேராம்"

கர லோகம் என்பது அதிக கனமானது, இதை தகடாக அடிக்கலாம்,ஆனால் வளைக்க முடியாது. வளைத்தால் ஒடிந்து விடும்,இவ்வாறு உடைந்த துகள்கள் பாதரசம் போல பளபளப்பாக இருக்கும் என்கிறார்.

கரஞ்சலோகம்

"வேளுமேதான் வெளுப்பாகி அழுக்க டைந்தால்
வங்கமிக்க கனம்போலேபூமி யில்தான்
நாளுமேதான் பூமாதே வியின்நா தத்தில்
நலத்துமேதான் தோற்றமதே யாகுந் தானே.
உற்பத்தி யதைஒடித்தால் சீக்கி ரத்தில்
உடையும்தன் பேர்கரஞ்ச மென்ப தென்க"

கரஞ்சலோகம் என்பது வெளுப்பு நிறமும், அழுக்கு நிறமும் கலந்த ஒரு கலவையான நிறத்தில் இருக்கும். இந்த வகை இரும்பினை கையில் தூக்கிப் பார்க்கும் போது வித்தியாசமான ஒரு கனத்தை உணர முடியும் என்றும், ஒடித்தால் சீக்கிரத்தில் ஒடிந்து விடும் தன்மை உடையது என்கிறார் போகர்.

ஒநாள லோகம்

"விற்பத்தி வெளுப்போடு கருப்பு மாகி
மிகவளைச்சல் ஈயம்போல் வளைத லாகி
கற்பத்தி மெத்தவுமே கனமாய்க் காணல்
காய்ச்சினால் குண்டுமணி நிறம்போ லாதல்
தற்பத்தி ஓநாள மென்ற லோகம்
தாராபட்ட டமென்கின்ற லோகந் தானே."

ஓநாள லோகம் என்பது வெளுப்பு நிறமும், கருப்பு நிறமும்ம் கலந்த ஒரு கலவையான நிறமாக காட்சிதரும். அதிகமாக வளையும் அதாவது ஈயம் போல தன்மை கொண்டது. கையில் தூக்கிப் பார்த்தால் மிக அதிகமான கணம் கொண்டதாக தோன்றும். இதை உருக்கினால் குண்டுமணி நிறம் போன்ற ஒரு நிறத்தைக் கொடுக்கும் என்கிறார் போகர்.

தாரபட்ட லோகம்

"தாராபட்ட டமென்கின்ற லோகந் தானே
கெழ்கவுமெ ஓநாளக் குணமுமாகும்
கனத்து மேதான் மெழுகூந்து சூட்ச மாகி
அனமுமான அக்கினிதான் தோற்ற மாகி
அதிகவெப்பம் சீதளமு மாகக் காணும்"

தாரா பட்டம் என்பது ஓநாள லோகத்தின் குணங்களைக் கொண்டதாக இருக்கும், ஆனால் இது பூமியில் மிக ஆழத்தில் உருக்கு நிலையிலேயே கிடைக்கும் என்கிறார். இது பூமிக்கு வெளியில் வந்துதான் கடினமாகும் என்கிறார் போகர்.

பசார லோகம்

"கெட்டியான பாசரமென் றலோகந் தானும்
வாழ்க்கவுமே வச்சிரத்தின் சமனாய்க் காணும்
மயிர்போலே கிற்றுவிழும் மெழுகூர்ந் ததாகும்
பாழ்க்கவுமே பச்சைநிற மாயி ருக்கும்"

பசார லோகம் என்பது வச்சிரத்துக்கு சமனாக உறுதியுடன் இருக்கும்.மிகவும் கடினமானது.இதை உருக்கி மெல்லிய கம்பி கூட தயாரிக்கலாம்.பார்ப்பதற்கு பச்சை நிறமாக தோன்றும் என்கிறார் போகர்.

பார லோகம்

"பாரமான காளமென்று லோகந் தானும்
காழ்கவுமே கருப்புமாக நீல வர்ணம்
காய்ச்சினாலே மழமழப்பாய்க் கனமு மாமே"

பாரலோகம் என்பது கருமையும்,நீலமும் கலந்த நிறமாக இருக்கும்.இதை உருக்கினால் மழ மழபபாக கனமாக இருக்கும் என்கிறார் போகர்.

இந்த ஆறு வகையான இரும்பொன்னைக் கொண்டு பலவிதமான செந்தூரம்,களங்கு போன்றவைகளை தயாரிக்கும் முறைகளையும் தனது நூலில் விளக்கி இருக்கிறார்.பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உலோகவியலும், சித்தர்களும்!

Author: தோழி / Labels: ,

உலோகங்கள் பற்றிய நம் முன்னோர்களின் அறிவு மற்றும் நுட்பங்கள் இன்றைக்கும் நமக்கும் ஆச்சர்யம் தரக்கூடியவை.அவர்கள் உருவாக்கிய தரத்தில் இன்றைக்கும் நம்மால் உருவாக்கிட இயலவில்லை என்பதே அவர்களின் அறிவின் பெருமைக்கு சாட்சி.உலோகம் என்பது தமிழ் வார்த்தை இல்லை. பழந்தமிழர்கள் உலோகத்தை ”பொன்” என்றே அழைத்தனர்.

இரசவாதத்தில் உலோகவியலின் பங்களிப்பு பற்றி விரிவாக கூறப் பட்டிருக்கிறது.இந்த உலோகங்களை மூலப் பொருளில் இருந்து தனியே பிரித்தெடுக்கும் முறைகளும், அவற்றை உருக்கி பிரித்தெடுக்கும் உருக்குலை,வார்ப்புலை, கற்களன்கள் அமைப்பது பற்றிய விவரங்கள், இந்த உலைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பக்குவங்கள் என ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

உலோகங்களின் தன்மைகள், பன்புகள், பயன்கள்,வகைகள் என உலோகவியலின் கூறுகளை விவரிக்கும் சித்தர்கள், உலோகங்களை ஒன்றோடொன்று இனைப்பதன் மூலம் உருவாகிடும் அலோகங்களைப் பற்றி கூறிடும் தகவல்கள் மிகவும் ஆச்சர்யமானவை. ஒரு உலோகத்தை வேதி வினைகளின் மூலம் மற்றொரு உலோகமாய் மாற்றிடும் முறையும், உயர் உலோகத்தை தாழ்ந்த உலோகமாய் தரமிறக்கும் அல்லது தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் தரம் உயர்த்தும் முறைகள் சித்தர்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கிறது.

ஓர் உதாரணத்திற்கு சொல்வதென்றால் பஞ்சலோக சிலைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த சரியான உலோக கலவை விகிதம் இன்னதென வரையறுப்பதில் இன்று வரை நம்மிடையே குழப்பங்கள் நீடிக்கிறது.இன்று நாம் உருவாக்கிடும் பஞ்சலோக சிலைகள் நிச்சயமாக பழந்தமிழர்கள் உருவாக்கிய சிலைகளின் தரத்தில் இல்லை என்பதே நிஜம்.

போகர் தனது ”போகர்7000” என்கிற நூலில் உலோகங்களின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சொலென்று பூமாது தானும் கேட்க
சுருதிமகா விட்டுணுவும் சொல்லலுற்றார்
புல்லென்ற பூருவத்தில் பொன்வெள் ளிசெம்பு
பேரான காரீயம் வெள்ளீயந் தானும்
துல்லென்ற த்துதநாகத் தினோடு தான்
துளுவான நல்லிரும்பு கருப்பி ரும்பு
ஏல்லென்ற எக்குவாகும் திராவுந்தானும்
ஏற்றமான வெங்கலமும் பித்தளை யுந்தானே"


பூதேவிக்கு, மஹா விஷ்ணு உலோகங்களைப் பற்றி உரைப்பதாக இந்த பாடலை அமைத்திருக்கிறார். இதன் படி பொன், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம், துத்த நாகம், நல்லிரும்பு, கருப்பிரும்பு, எக்கு எனப்படும் திரா, வெங்கலம், பித்தளை. என்று பதினொரு வகை உலோகங்கள் உள்ளதாக சொல்லியிருப்பதாக சொல்கிறார்.

மற்றொரு பாடலில்...

"தானான பதினோன்று லோகந்தானும்
தனித் தனியே உற்பத்திக் குணா குணமே
வேனான லட்சணங்கள் குருச்செந் தூரம்
மிக்கன சத்து வகை களங்கு தானும்
பேனான பிரித்துமே தான் ஒவ்வொன்றாக
பிசமாக சொல்லுகிறேன் பின்பு கேளு
பானான பூரூவத்தில் சிவபிரான் தானும்
பார்வதியும் இருவருமாய் பகன்றார் காணே"

தனிமங்களான பதினோரு உலோகங்களை உற்பத்தி செய்வதில் துவங்கி அவற்றின் குணாதிசயங்கள்,பன்புகள், பயண்கள் உட்பட, இவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் செந்தூரம், களங்கு போன்றவைகளைப் பற்றிய விவரங்களை கயிலாய மலையில் சிவனும்,பார்வதியும் கூறியதை தெளிவாக கூறுகிறேன், கேள் என்கிறார்.

நவீன உலோகவியலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத சித்தர்களின் உலோகவியல் பற்றிய மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனையடி சாத்திரமும் கிணறும்!

Author: தோழி / Labels:

மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனையடி சாத்திரமும், தோஷ நிவர்த்தியும்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் அவதானிப்பில் எல்லா பொருட்களும் ஏதேனும் ஒரு வகையில் குறைகளை கொண்டவை என்பதாகவே கருதியிருக்கின்றனர். அந்த குறைகளை கண்டுணர்ந்து களைவதன் மூலம் அவற்றை மேன்மையான ஒன்றாக உயர்த்திட முடியும் என தீவிரமாக நம்பினர். அதற்கான உபாயங்களை தேடித் தெளிந்து அவற்றை தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர்.

ஒருவர் புதிதாக நிலம் வாங்கினால், அதை நன்கு உழுது தானியங்களை பயிர் செய்ய வேண்டும்.பயிர் விளைந்த நிலையில் அந்த நிலத்தில் பசுக்களை விட்டு பயிர்களை மேய விட வேண்டும். அவ்வாறு பசுக்கள் பயிர்களை மேய்வதால் அவற்றின் சிறு நீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து சிந்து நுரைகள் போன்றவை அந்த பூமியில் கலக்கும்.இதனால் அந்த நிலத்தின் சகல தோஷங்களும் நீங்கும் என்கின்றனர்.

உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இன்றைக்கு பிரபலமாகி வரும் இயற்கை விவசாயம் மேலே சொன்னதைத்தான் சொல்கிறது.இயற்கை உரங்களான பசுவின் எரு, சிறு நீர் போன்றவைகளை நிலத்தில் மக்க விடுவதால் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தினை வளப் படுத்துவதுடன் விளைச்சலையும் பெருக்குகிறது. சித்தர்கள் வலியுறுத்திய இந்த தோஷம் நீக்குதல் இத்தகைய அறிவியல் சார்ந்தது.

மயானம், பள்ளமான நிலம் அதாவது வெள்ளம் தேங்கும் இடம். யுத்தம் செய்த இடம், கோவில், புற்று இருக்கும் அல்லது இருந்த இடங்களில் வீடுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.இது போலவே கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் போன்றவைகளின் நிழல் வீடுகளில் படக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.

இது போல மேலும் பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. இவைகள் முறையாக தொகுக்கப் பட்டு அதன் மீது ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் நடத்தப் படுமாயின் இந்த தகவல்கள் தொடர்பான பல அரிய பேருண்மைகளை வெளிக்கொணர இயலும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மனையடி சாத்திரம்

Author: தோழி / Labels:

சித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தியவர்கள். தங்களின் நுட்பங்கள், தெளிவுகள் அனைத்துமே இயற்கையின் தன்மையோடு அமைந்தவையே... மனையடி சாத்திரம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் அறிவார்ந்த தகவல்களே நமக்கு காணக் கிடைக்கிறது.

நவீன கட்டிடவியலில் கட்டிடம் கட்டத் துவங்குவதற்கு முன்னர் அந்த இடத்தின் மண்ணின் தன்மையை பரிசோதிப்பதை அறிவோம்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இதை வலியுறுத்தி இருக்கின்றனர். சித்தர்கள் நிலத்தின் தன்மையை ஐந்து கூறுகளாய் கூறியிருக்கின்றனர்.

அவையாவன...

  • நிறம்
  • மணம்
  • ஓசை
  • தொடுகை
  • தூளி

நிறம்

வெள்ளை நிறம் , பொன்னிறம், சிவப்பு நிறம், கருமை நிறம், என்று நான்குவகை நிலங்கள் உண்டு என்றும் அவற்றின் நிறத்தை கொண்டு நிலத்தின் தன்மையை அறிவது பற்றி கூறியிருக்கின்றனர்.

மணம்

பால், மலர் , கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலங்கள் பெரிய கட்டடங்கள் கட்ட பயன்படும் என்றும், புன்னை , ஜாதிமுல்லை , தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது என்றும் தயிர் , நெய், தென், எண்ணெய், இரத்தம், மீன் போன்ற மணம் வீசும் நிலங்கள் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஓசை

நிலத்தை கொத்தும் போது குதிரை, யானை, மூங்கில், வீணை, சமுத்திரம் இவைகள் எழுப்பும் ஓசை போல் கேட்குமானால் இந்த பூமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம் என்கின்றனர்.

தொடுகை

தொட்டுப் பார்த்து அறியும் முறை இது. அதாவது தொடுகையின் மூலம் பசைத் தன்மை, சொர சொரப்பு முதலியவைகளை பார்த்து பூமியை பற்றி அறிதல்.

தூளி

உலர்ந்த காலத்தில் பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து நன்கு கசக்கி கிழக்கு முகம் நோக்கி ஊதினால் அதில் பறக்கும் தூசி, மற்றும் கீழே விழும் மண்ணின் அளவு கொண்டு கொண்டு பூமியைக் தன்மையை கணிப்பது பற்றியும் கூறியிருக்கின்றனர்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!

மேலதிக தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனையடி சாத்திரம், சில உண்மைகள்!

Author: தோழி / Labels:

இன்றைய நமது சமூகத்தில் நம்பிக்கையின் பேரால் நடக்கும் வியாபாரங்களில் முதலிடம் வகிப்பது வாஸ்து சாஸ்திரம் என்றால் மிகையில்லை. ஆட்சியில் இருப்பவர்களில் இருந்து அடுத்த வீட்டில் இருப்பவர் வரை இந்த வாஸ்து சாஸ்திர நம்பிக்கை பீடித்திருக்கிறது. நமது வீட்டில் ஒருவராவது இந்த வாஸ்து சாஸ்திரத்தின் பிடியில் சிக்கி காரியமாற்றியவர்களாக இருக்கக் கூடும்.

வாஸ்து பற்றிய தகவல்கள் அதர்வண வேதத்தில் இருந்தே துவங்குகிறது. சமஸ்கிருதத்தில் பலரும் இது குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். பழங்காலத்தில் ஆலங்களில் துவங்கி, அரண்மனைகள் முதலாக மக்கள் குடியிருந்த வீடுகள் வரை இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதாக தெரிகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அதிதேவதை வாஸ்து புருஷன் ஆவார்.

இவர் கட்டிடம் எழுப்பப் படும் மனையின் வடகிழக்கே தலையும், தென்மேற்கில் காலும் உள்ளவாறு குப்புற படுத்திருப்பதாக உருவகமாய் கூறப் பட்டிருக்கிறது.இப்படி படுத்திருக்கும் மனையின் பரப்பளவை வாஸ்து மண்டலம் என குறிப்பிடுகின்றனர். இந்த வாஸ்து மண்டலத்தில் அட்ட திக்கு பாலகர்கள் ஆளுக்கொரு திசையில் காவல் காப்பதாகவும், இவர்கள் தவிர இந்த வாஸ்து மண்டலத்தில் நாற்பத்தி ஐந்து தேவர்கள் வசிப்பதாகவும் விவரிக்கப் பட்டிருக்கிறது.

இந்த வாஸ்து புருஷர் வருடத்தில் நான்கு வெவ்வேறு மாதங்களில் உறங்குபவர் என்றும், மற்ற மாதங்களில் விழித்திருப்பார் எனவும் அப்படி அவர் விழித்திருக்கும் கணங்களை கணக்கிட்டு அவரின் செயலுக்கு தக்கவாறு கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதும், முடிப்பதும் இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் என நிறையவே நிபந்தனைகளை முன்னிறுத்திக் கூறுகிறது இந்த வாஸ்து சாஸ்திரம்.

மனையடி சாத்திரம் என தலைப்பு வைத்து விட்டு வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனே என உங்களுக்குள் கேள்வி எழலாம்.... எழ வேண்டும் அதுதான் இந்த பதிவின் நோக்கமும் கூட.. காலம் காலமாக வாஸ்து சாஸ்திரம் என்பது மட்டுமே தமிழர்களின் கட்டிடக் கலையாகவே இனம் காட்டப் பட்டிருக்கிறது. நாமும் அதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் தமிழர்கென தனித்துவமான கட்டிட மற்றும் சிற்பக் கலை நுட்பங்கள் இருந்தன. இன்றைக்கும் காலம் கடந்து நிற்கும் பல கோவில்களும், கல்லணையும் இதற்கெல்லாம் காலத்தின் சாட்சிகளாய் நம் முன்னே நிற்கின்றன. வாஸ்து சாஸ்திரம் குறித்த பல நூல்கள் சேதமில்லாமல் கிடைத்திருக்கும் பொழுது மனையடி சாத்திரம் தொடர்பான தனி நூல்கள் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சித்தர்களின் பாடல்களில் மனையடி சாத்திரங்கள் பற்றிய தகவல்கள் நிறையவே விரவிக் கிடக்கிறது. அதில் எந்த தேவதையும் இல்லை, அவர் தூங்கவும் இல்லை. முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த தெளிவாகவே மனையடி சாத்திரம் விளக்கப் பட்டிருக்கிறது.

இந்த தகவல்களை தொகுத்து மனையடி சாத்திரத்திற்கு உருக் கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இதுவரை அப்படி யாரேனும் தனி நூலாக தொகுத்திருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி ஏதேனும் முயற்சிகள் இருப்பின் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

நாளைய பதிவில் மனையடி சாத்திரம் தொடர்பான மேலதிக தகவல்களுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னையறிதல் என்பது...

Author: தோழி / Labels:

தன்னை அறியும் தேடலின் படி நிலைகளை அறிமுகப் படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். தன்னையறிதலுக்கு ஆயிரத்தெட்டு விதமாக விளக்கம் சொல்லலாம். ஆனால் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் விளக்கங்களின் பின்னால் போவதில் பயனில்லை என்பதால் நானறிந்த வகையில் படிநிலைகள் சிலவற்றையே இந்த வாரத்தில் தொகுத்திருக்கிறேன்.

தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.

மனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

பதஞ்சலி அருளிய “பதஞ்சலி யோகம்” என்கிற நூல் தன்னையறிதலையும் அதன் படி நிலைகளையும் தெளிவாய் விளக்குகிறது. இதனை அடிப்படையாக கொண்டே பலரும் தன்னையறிதல் குறித்த தமது அனுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இன்றைக்கும் கூட பலரும் பல பெயரில் தன்னையறிதலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றனர். தன்னையறிதல் விலை கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல, நாலைந்து வகுப்புகளுக்குச் செல்வதால் மட்டும் கைகூடும் வித்தையும் அல்ல.

தன்னையறிதல் என்பது தொடர் அனுபவத்தில் மட்டுமே உணர்ந்து ஒழுகிட வேண்டிய தத்துவம். தன்னை ஒன்றாக்கி, ஒன்றில் கலந்து ஒன்றாய் நிற்கும் அற்புதம்...

இத்துடன் இந்த தொடரை தற்காலிகமாய் நிறைவு செய்கிறேன். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றை தனித் தனியே விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னையறிதல் @ மௌனம்

Author: தோழி / Labels:

சித்தர்களை “மௌனகுரு” என்றும் அழைப்பதுண்டு.குருவானவர் தனது சீடர்களுக்கு வழங்கும் தீக்சையை ”மௌன தீட்சை” என்பர். குருவானவர் மௌனமாக இருந்து சீடருக்கு தீக்சையை மனத்தால் உணர்த்துவது என்று பொருள் படும். மௌனம் என்பது தன்னையறிதலின் உயர் படிநிலைகளில் ஒன்று. இந்த நிலையினை சித்தர்கள் சும்மாயிருத்தல் என்கின்றனர்.

சித்தர்கள் மௌனத்தை மூன்றாக கூறியிருக்கின்றனர். உடலை எவ்வித அசைவில்லாமல் வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், வாய்மூடி மௌனமாய் இருப்பதை ஒரு நிலையாகவும்,மனதை சலனமின்றி வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், இவற்றுள் மனதின் மௌனத்தை தலை சிறந்ததாயும் கூறியிருக்கின்றனர்.

பேசாமல் வாய்மூடி இருப்பதையே மௌனம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது மௌனத்தின் ஆரம்பநிலைதான்.அகமாய் இருந்தாலும், புறமாய் இருந்தாலும் சரி,மனித வாழ்வில் சப்தங்கள் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது....சப்தங்கள் ஒரு போதும் தானே அடங்குவதில்லை, அவற்றை அடக்கிடவும் முடியாது.ஆனால் சப்த்தத்தில் இருந்து விலகி நிசப்தத்தில் இருந்திட முடியும்.இதையே மௌனம் என்கிறோம்.

புறத்தின் சப்தங்களில் இருந்து விலகிவிட தனிமையான சூழலை ஏற்படுத்தி அமைதி காணலாம்.ஆனால் இந்த மௌனத்தினால் பெரிதான பலன் ஏதும் இருக்காது.புறத்தில் அமைதி நிலவினாலும் மனம்,புத்தி ஆகியவை ஓயாத இரைச்சலுடன் இருக்கும்.

ஆனால் அகத்தின் சப்தங்களில் இருந்து விடுபடுவதில்தான் தன்னையறியும் சூட்சுமம் உள்ளடங்கியிருக்கிறது.மனம், புத்தி இவற்றை மௌனத்தால் நிறைத்திட முடியுமானால் அதுவே உயரிய ஞான சித்தி நிலையாக இருக்கும். ஆழ்ந்த மௌன நிலையில் எல்லா புதிய பரிமாணங்களும் அதன் அர்த்தங்களும் புலனாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னையறிதல் @ கவனித்தல்

Author: தோழி / Labels:

தன்னையறிதலின் படிநிலைகளில் முக்கியமானது இந்த கவனித்தல்.

கவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.

நம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.

இந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.

ஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.

தன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னையறிதல் @ மனம்

Author: தோழி / Labels:

காற்றை விட வேகமானது, கடலை விட ஆழமானது,அத்தனை உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்,ஆக்கம், அழிவு என்பவற்றை தீர்மானிப்பது என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டது மனித மனம்.“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்கிற பொது மொழியும், “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனகிற சித்தர் மொழியும் மனத்தின் மான்பினை விளக்கும்.

நவீன அறிவியலின் படி மனமானது ”உணர்வு சார் நிலை”,”அறிவுசார் நிலை” என இரண்டு முகங்களை கொண்டது. சித்தர்களைப் பொறுத்தவரையில் இதனை மூன்று நிலைகளாய் கூறியிருக்கின்றனர். நான் அவற்றை “புத்தி நிலை”,”சித்தி நிலை”,”முக்தி நிலை” என்பதாக புரிந்து கொண்டிருக்கிறேன்.

தன்னைத் தவிர, சுற்றியுள்ள அனைத்திலும் தன்னை இருத்தி அதுதான் தான் என நிலைக்கும் மனநிலைதான் புத்தி நிலை.தனக்கென வாழ்வதாக நினைத்துக் கொண்டு புற கூறுகளில் மட்டுமே வாழும் ஒரு நிலை இது. இந்த மன நிலையில் அகங்காரம்(Eg0) மட்டுமே செழித்தோங்கி இருக்கும். நாம் பெரும்பாலும் இத்தகைய மன நிலையிதான் வாழ்கிறோம்.

தான் யாரெனெ வெளியில் தேடாமல், தனக்குள்ளே தேடிடும் மன நிலைதான் சித்தி நிலை. இந்த நிலையில் அகங்காரம் அழிந்திருக்கும்.விருப்பு, வெறுப்புகளை நீக்கி எதிலும் விலகியிருந்து பார்க்கும் பக்குவமான ஒரு மன நிலை இது.

முந்தைய இரு நிலைகளின் முதிர்ந்த மூன்றாவது நிலை இது. தன்னை தான் உணர்ந்த பேரானந்தமான மன நிலையை முக்தி நிலை எனலாம். அன்பும், கருணையும் மட்டுமே ஊற்றெடுத்திடும் உயரிய நிலை இது.இதுவே தன்னையறிந்த நிலை.

உடலின் ஆரோக்கியம் மனதில்தான் இருக்கிறது. மனம் ஒழுங்கில் வந்தால் உடல் உறுதியாகும் அதனால் உயிர் நிலைக்கும். இதை உணர்ந்தால் மனதின் மகத்துவம் புரியும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னையறிதல் @ புலனடக்கம்

Author: தோழி / Labels:

“நிலையில்லா மனிதனுக்கு நிலையற்ற பொருட்களின் மேல் நிலையாய் ஆசை”

இந்த ஒரு வரி தன்னையறிதலின் படிநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றான புலனடக்கத்தினை வலியுறுத்துகிறது.

ஐம்புலன்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானவை. ஐம்புலன்களினால் உணர்ந்தவற்றை, அகத்தில் பதிந்து அவற்றை பகுத்தறிந்து செயல் படுவதால்தான் மனித இனம் உயர்வானதாக இருக்கிறது.ஆனால் இந்த ஐம்புலன்களின் செயல்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.உதாரணத்திற்கு, கண்களால் பார்க்க இயலும், ஆனால் இருளில் பார்க்க வெளிச்சம் அவசியம். இதுவே நிபந்தனை....

நிபந்தனைகள் தேவைகளை உருவாக்கும். தேவைகள் ஆசையை உருவாக்கும்... ஆசைகளே மனிதனின் அத்தனை துயருக்கும் ஆரம்பமும், முடிவுமாகிறது.இதை உணர்வதும், ஆசைகளை துறப்பதும் நம்முடைய முயற்சியிலும், பயிற்சியிலுமே இருக்கிறது. முயற்சி நம்முடையதாக இருந்தாலும், பயிற்சி?

எவ்வாறு தேர்ந்த சிற்பி ஒருவன் பாறையில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை செதுக்குவதன் மூலம் அழகிய சிலையொன்றினை உருவாக்கிறானோ, அதைப் போலவே மெய்யான குருவானவர் நம்மில் இருக்கும் குறைகளை உணர்த்தி தன்னையறிந்த பேரானந்த நிலையினை அடைய உதவுவார்.

இந்த உண்மைகளை உணர்த்தும் இடைக்காடர் பாடல்...

பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே

பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே
இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமேசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மெய்ஞானம் @ தன்னையறிதல்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் விஞ்ஞானம் பற்றி நிறையவே கதைத்தாயிற்று. இனிவரும் சில பதிவுகளில் அவர்தம் மெய்ஞானம் குறித்த எனது புரிதல்களை பகிர விரும்புகிறேன்.

குத்து விளக்கின் சுடர் சலனமில்லாத அமைதியுடன், தான் இருக்கும் சூழல் பற்றிய கவலையின்றி ஒளிர்வது அழகியல் சார்ந்த பரவச அனுபவம்.இந்த சுடர் தனக்கென எதையும் சேமித்துக் கொள்வதில்லை. சுடரின் தன்மையானது இருக்கிற வரையில் ஒளி மிகுந்ததாகவே இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப் பாருங்கள், புதிய அனுபவமாய் இருக்கும்.

சித்தர்களும் இத்தகைய ஒளிச்சுடரை போன்றவர்களே!.வற்றாத அன்பும், கருணையும் கொண்டவர்கள். நாடி வருவோருக்கு பேதமின்றி ஒளிதரும் சுடரைப் போல குருவடி பணிவோரை அவர்தம் அருளும், ஆசியும் நின்று வழி நடத்தும்.

இத்தகைய உயரிய சித்தநிலையின் ஆதாரம்தான் இன்றைய பதிவின் தலைப்பான ”தன்னையறிதல்”.

தன்னையறிதல் என்பதை நுட்பமானதாகவும்,சிக்கலான ஒன்றாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகவும் நமது சமய மையங்கள் படிமப் படுத்தி இருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் தன்னையறிதல் என்பது, ஆர்வமும், பணிவும் உள்ள எவரும் கைகொள்ளக் கூடிய ஒன்றுதான்.

இந்த தன்னையறிதலின் படி நிலைகளை சித்தர்கள் தங்கள் பாடல்களில் எளிதாய் உணரும் வண்ணம் விளக்கியிருக்கின்றனர். இனி வரும் பதிவுகளில் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

காத்திருங்கள்...


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நான்கு மின்னூல்கள்!

Author: தோழி / Labels:

நண்பர்களே!

இதுவரையில் நான் தொகுத்திருக்கும் நான்கு மின் நூல்களை அனுப்பக் கோரி பலநூறு மின்னஞ்சல்களினால் எனது அஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. நேரமின்மை காரணமாய் அனைவருக்கும் தனித்தனியே மின் நூல்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்படுவதால், விருப்பம் உள்ள எவரும் தரவிறக்கிக் கொள்ளும் நோக்கில் மின் நூல்களின் இனைப்பினை இந்த பதிவில் தருகிறேன்.

நேற்று வரையில் வந்திருந்த அத்தனை மின்னஞ்சல்களுக்கான பதிலை அனுப்பிவிட்டேன். இனிவரும் நாட்களில் புதியவர்கள் சிரமம் பாராது இங்கிருந்து தரவிரக்கி பயன் படுத்திட வேண்டுகிறேன்.


ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இனைப்பினை பகிர்வதன் மூலம் சித்தர்களின் மகத்துவத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முழுமையாய் கொண்டு போய் சேர்ப்போம்.

என்றும் நட்புடன்

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மலை - புவனகிரி மலை

Author: தோழி / Labels:

அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட பிரார்த்திக்கிறேன்.


சித்தர்களின் மலைகள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் காண இருப்பது புவனகிரி மலையைப் பற்றியது. முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகத்தியர் மலைக்கு தென்மேற்காய் இந்த மலை அமைந்திருக்கிறது.

இந்த மலையின் சிறப்பினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறர்


தூய்மையாய் புவனகிரி வளப்பஞ்சொல்வேன்
துப்புரவாய் புலத்தியனே சுகுணமாரா
வாய்மையாய் தென்காயற் பதிக்குமேற்கே
வளம்பெரிய நாதாககள் கூட்டமப்பா
மாய்மைகள் அதிகமுண்டு மன்னாகேண்மா
மகாபெரிய புவனகிரி மலைதானப்பா
சாய்மையா ரிஷிமுதலோர் சித்தர்கூட்டம்
தவமிருந்து சமாதிமிகக் கொண்டகாடே
காடான காடதுவும் நாதர் காடு
கடுவனமாம் குகையுண்டு சுனையுண்டு
தாடாண்மை கொண்டதொரு கிரிகள்கூட்டம்
தகமையுள்ள புவனகிரி அடிவாரத்தில்
மேடமையாம் வாசலது திட்டுவாகல்
மேன்மையுள்ள சுரங்கம்போல் வழிதான்காணும்
கூடாமை யாரேனும் முட்செல்வார்கள்
குருபரனே அசுவனியார் சொன்னவாக்கே
வாக்கான படியல்லோ நீயுமப்பா
நோக்கமுடன் எந்தனுக்கு தான்கொடுத்த
நுணுக்கமுள்ள சூக்குமம் தானப்பா
பொங்கமுடன் அசுவினியார் தமைநினைத்து
ஆக்கமுடன் செல்கையில் வாசல்காண்பாய்
அப்பனே உத்தமர்க்கு செர்வையாமே
செர்வையாய் குகைக்குள்ளே சுரங்கத்துள்ளே
செங்கமலக் கண்ணானே சென்றபோது
பார்வையா யங்கிருக்கும் காவலாளர்
பார்த்திபனே உமைக்கண்ட போதேவண்ணம்
தேர்வையாம் யாரென்று வினவிக்கேட்பார்
அகத்தியனான் சீடனென்று சொல்வாயே
ஆறவே உனையழைத்து வாசிர் மித்து
அப்பனே உட்காவல் கொள்ளுவாரே

- அகத்தியர் 12000 -

புலத்தியனே!, என் மாணவனே!, புவனகிரி மலையின் வளம் சொல்கிறேன் கேள் என்று துவங்குகிறார் அகத்தியர்..

இந்த மலை மிகவும் அடர்ந்த பெரிய காடுகளுடன் கூடியது. இங்கே பல குகைகளும், சுனைகளும் இருக்கின்றன. இந்த மலையில் பல சித்தர்கள் தவமியற்றி ஜீவ சமாதியடைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு மேடை உள்ளதாகவும், அந்த மேடையை ஒட்டி ஒரு சுரங்கம் இருக்கிறதென்றும், அதன் உள்ளே போகும் வழியின் சூட்சுமம் பற்றி அசுவினி தனக்கு கூறியதாகவும் கூறுகிறார்.

அசுவினி கூறியது நுணுக்கமான சூத்திரமாகும். நீ அங்கு சென்றால் அந்த சுரங்கப் பாதை ஒரு குகைக்கு இட்டுச் செல்லும், அங்கே அந்த குகையின் காவல் தெய்வம் உன்னை யாரென கேட்டால், ‘நான் அகத்தியரின் சீடன்’ எனச் சொன்னால் அந்த தெய்வம் உன்னை உள்ளே அழைத்து உபசரித்து அனுப்பும் என்கிறார்.

மேலும் அந்த குகையின் ரகசியங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார். அந்த விவரங்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

இத்துடன் சித்தர்களின் மலைகளைப் பற்றிய தொடரை இடை நிறுத்திக் கொள்ள்கிறேன். சதுரகிரி மலை பற்றி எழுதவில்லை என பலரும் கேட்டிருந்தனர். “சித்தர்கள் பூமி” என கருதப் படும் அந்த மலையின் சிறப்பினை ஒரு பதிவில் நிறைக்க இயலாது. எனவே விரைவில் தனியே அந்த மலையினைப் பற்றி எழுதுகிறேன்.

வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

மீண்டுமொரு முறை அனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல் வழியே வாழ்த்து செய்திகளை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மலை - நாகமலை

Author: தோழி / Labels:

தமிழகத்தில் நாகமலை என்ற பெயரில் பல மலைகள் இருக்கின்றது. சேலம் அருகே இருக்கும் ஒரு மலை, மதுரையை அடுத்திருக்கும் ஒரு மலை, திருச்செங்கோட்டிலிருக்கு ஒரு மலை என, இவை எல்லாமே நாக மலை என்றே அழைக்கப் படுகிறது.

இந்த பதிவில் நான் குறிப்பிடும் சித்தர்களின் நாகமலையானது பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தை அண்டியுள்ள சிறியதொரு மலை.இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

முறையான இன்னமொரு பாகஞ்சொல்வேன்
மூதுலகில் கீர்த்தியுள்ள புலஸ்தியாகேள்
நிறையான தென்பொதிகை கிழக்கேயப்பா
நீடான நாகமலை என்றொன்றுண்டு
திறையான பூமிவளஞ் சொல்வேன்பாரு
திகழான சவுட்டுமண் பூமியப்பா
பறையான பூமிதனிற் கல்லுமுண்டு
பாங்கான அண்டக்கல் லென்னலாமே.
என்னவே அண்டக்கல் சுண்ணமாகும்
எழிலான அடியொன்றும் முடியொன்றும்
பன்னவே அளர்பூமி என்னலாகும்
நன்னயமாய் நாகமலை அடிவாரத்தில்
நாதாக்கள் குடியிருப்பு மெத்தவுண்டு
சொன்னபடி மலையடி வாரந்தன்னில்
சடரான குகையுண்டு வழிதானுண்டு.
உண்டான குகையருகே மாண்பரப்பா
உத்தமனே நாதாக்கள் என்னைக் காண
கண்டிடவே குகையருகே போவாரங்கே
காணவந்த மாண்பர்களை சித்தர்தாமும்
திண்மையுடன் மாண்பார்களை உள்ளேசென்று
தீரமுடன் குகைவழியே செல்லும்போது
நன்மையுடன் காயகற்பந்தான் கொடுத்து
நாதாக்கள் தன்வசமாய்க் கொள்ளுவாரே.

- அகத்தியர் 12000 -

இந்த மலையானது சிறப்பான சவிட்டு மண்ணைக் கொண்ட வளமான பூமி , இங்கே கற்களும் காணப்படுகிறது, சிறப்பான அண்டக்கல் என்னும் ஒருவகை கற்கள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது. சுண்ணம் தயாரிக்க இந்த வகை கற்களே பயன்படுகிறது என்றும் சொல்கிறார்.. இந்த வகைப் பூமியை ”அளர்பூமி” என்று அழைப்பார்கள் என்கிறார்.

இந்த நாக மலையின் அடிவாரத்தில் பல சித்தர்கள் குடியிருப்புக்கள் நிறைந்திருக்கும் என்றும், மேலும் மலையடிவாரத்தில் குகைகள் பலவும் இருக்கிறது என்றும், அதற்கான வழிகளும் இருக்கிறது என்கிறார்.

சித்தர்களை தரிசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குகையை தேடி வருவார்கள் என்றும், அந்த குகைக்குள் செல்லும் பொது அவர்களுக்கு காயகல்ப்பம் கொடுத்து சித்தர்கள் அருள் புரிந்து தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

நாளைய பதிவில் “புவனகிரி” என்கிற மலையினைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மலை - அஞ்சன மலை

Author: தோழி / Labels:

கம்பராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில்...ராவணனுடன் போரிட்டு மாண்ட சடாயுவின் உடலைப் பார்த்து இராமன் வருந்தி அழுவதை கம்பர் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.

துள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய,
தள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான்.

- கம்பர்

”இராமன் சடாயுவின் உடல் மீது வீழ்ந்து அழுதான்” என்கிற உவமையில் சிறப்பிக்கப் பட்டிருக்கும் அஞ்சன மலை பற்றியதே இந்த பதிவு.

நீல நிறத்தவன் என கருதப் படும் இராமனை உவமையாக்கி இருப்பதன் மூலம் இந்த மலை நீல நிறமாகவோ அல்லது கருநீல நிறமாகவோ இருந்திருக்க வேண்டும். நான் முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த அஞ்சன கற்கள் நிறைந்த மலையாக கூட இது இருந்திருக்கலாம். இவை இரண்டும் முழுக்க முழுக்க என்னுடைய அனுமானமே, இது குறித்து விவரமறிந்தவர்கள் விளக்கினால் நானும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

இத்தகைய சிறப்பான அஞ்சன மலை பற்றி அகத்தியர் தனது ”அகத்தியர்12000” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"தாமான யின்னமொரு மார்க்கங்கேள்
தகைமையுள்ள மேற்குமுகம் வடபாகத்தில்
ஆமான மஞ்சனமாங் கிரிதானப்பா
அழகான நடுமையந் தன்னில்தானும்
வேமான மண்டபந்தான் குண்ணுக்கல்லாம்
வெளியான குகையுண்டு தடாகமுண்டு
சாமான மாகவல்லோ ரிடிகள்தாமும்
சாங்கமுடன் மலைசுத்தி யிருப்பார்காணே
காணவே புலத்தியனே யின்னங்கேளு
கருவான கோட்டைக்கு நான்குபக்கம்
தோணவே பாறைகொண்டு சாத்திருக்கும்
துலைதூரம் பார்த்தாலும் தடமுங்காணார்
தாணான தூண்மறைவில் பாறையப்பா
சட்டமுடன் அமைந்திருக்கும் ரிடிகள் கோட்டை
மானான கோட்டைக்கு வழியுங்காணார்
மகத்தான சித்தர்முனி கண்பார்பாரு
பழியான ரிடியினது சாபத்தாலே
பாங்கான கோட்டையது மண்மேடாச்சு
அழியாத வாஸ்தான மண்டபங்கள்
அவனிதனில் பிரளயத்தால் மூடலாச்சு
குழியான கோட்டைதனை சுத்தியல்லோ
கொடிதான கானாறு ஓடையுண்டே"

- அகத்தியர் 12000 -

புலத்தியனே! இன்னுமொரு மலை வளம் சொல்கிறேன் கேள் என அஞ்சன மலையைப் பற்றி சொல்கிறார்..

மேற்குப் பக்கத்தில் வடபாகமாக அஞ்சன மலை இருப்பதாகவும் அதன் நடுவில் வேமன மண்டபமும், அதை அடுத்து குண்ணுக் கல்லும், அதனை தொடர்ந்து ஒரு குகை இருப்பதாகவும், அந்த குகையின் முடிவில் இருக்கும் தடாகத்தினை சூழ்ந்து சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பார்கள் என்கிறார்.

இன்னும் கேளு!, அந்த அஞ்சன மலை உச்சியில் ஒரு கோட்டை ஒன்று பாறைகள் சூழ இருப்பதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது என்றும், அந்த கோட்டையின் தூன் மறைவில் இருக்கும் குகையினை ரிஷிக்கள் கோட்டை என்பர் என்கிறார். மறைவாக இருக்கும் அந்த குகையின் வாயிலை சித்தர்களே அறிவர் என்கிறார். அவர்களின் ஆசி உள்ளவர்களுக்கும் வாயில் தெரியும் என்கிறார்.

ஒரு ரிஷியின் சாபத்தால் அந்த அழகான கோட்டை மண்ணால் மூடி மண் மேடாகியது என்றும் மீதமாக இருக்கும் பகுதிகள் காலமாற்றங்களால் அழிவடைந்ததாகவும் குறிப்பிடும் அவர் அந்த மண்ணால் மூடப்பட்ட கோட்டையை சுற்றி தற்போது ஒரு ஆறு ஊற்றெடுத்து உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

நாளைய பதிவில் ”நாகமலை” பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”

Author: தோழி / Labels:

தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அமைந்திருக்கிறது. தற்போது நகரம் சூழ்ந்த பகுதியாகிவிட்ட விராலி மலை முற்காலத்தில் அடர் வனப் பகுதியாக விளங்கியது.

இந்த மலையில் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டதாக கருதப் படும் புகழ் பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது “திருப்புகழ்” என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில் ஆராதிப்பதன் மூலம் இந்த திருக்கோவிலின் சிறப்பினை அறியலாம்.

இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதாக ”அகத்தியர் 12000” என்ற நூலில் பாடல் ஒன்று காணக் கிடைக்கிறது. ஆச்சர்யகரமாய் தற்போதிருக்கும் முருகன் கோவிலைப் பற்றிய விவரங்கள் அந்த பாடலில் இல்லை.

பூணவேயின்னமொரு மார்க்கங்கேளு
புகழான புலஸ்தியனே சொல்வேன்பாரு
தோணவே விராலியென்ற மலைதானுண்டு
தொல்லுலகில் சித்தர்முனி குடியிருப்பு
காணவே விராலியென்ற மலையிலப்பா
கண்காணா சுனையுண்டு வுதகமுண்டு
நாணவே வெகுகோடிகாலமப்பா
நாதாக்கள் வாசமதுசெய்வார்பாரெ.
பாரெதான் விராலிமலை யுச்சியப்பா
பாங்கான கணேசரென்ற கோவிலுண்டு
நேரெதான் வடக்குமுந் தன்னிலப்பா
நிலையான கல்லாலை மரமுமுமண்டு
சீரெதா னோட்டை மணடபந்தானப்பா
சிறப்புடனே புலியுறங்கும் வாயக்கால்தான்
கூரேதா னாயக்கால் மண்டபத்தில்
குறிப்பான கருநெல்லி யிருக்குதானே.

-அகத்தியர் 12000 -

விராலி என்றொரு மலை இருக்கிறது. அங்கே சித்தர்கள், முனிவர்கள் பலகோடி காலம் வசிப்பார்கள். இந்த மலையில் ஒரு சுனை இருக்கிறது அந்த சுனையை மிக இலகுவாக யாராலும் காணமுடியாது அத்துடன் அங்கு உதக நீர் நிலையும் இந்த மலையில் இருக்கின்றது என்கிறார்.

விராலிமலையின் உச்சியில் ஒரு கணேசர் கோவில் இருக்கின்றது. அந்த கோவிலுக்கு வடக்குப்பக்கமாக கல்லால மரம் ஒன்று உள்ளது என்றும் அந்த மரத்தருகில் சிரோதன நொட்டை மண்டபமும், அதை தொடர்ந்து புளியிறங்கு வாய்க்காலும் காணப்படுகிறது.அந்த வாய்க்காலை ஒட்டி உள்ள மண்டபத்தில் குறிப்பாக ஒரு கரு நெல்லி மரம் உள்ளதென்றும் அந்தமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவம் செய்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

தவம் செய்த முனிவர் பின்னர் ”ஞான நூல்” என்னும் பெருநூலைப் பாடி வைத்தார். அந்த நூல் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும், அவ்வாறு கிடைத்தால் பூவுலகில் சித்துக்கள் அதிகமாகி மக்கள் வருந்துவர் என்று பக்கத்தில் இருக்கும் கற் குகையில் வைத்து சாபமிட்டார் என்கிறார்

குருவருள் துணையுடன் இந்த மலைக்கு வருபவர்களுக்கு அந்த நூல் கிடைக்குமானால் அவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

நாளைய பதிவில் ”அஞ்சன மலை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மலைகள் - அகத்தியர் மலை

Author: தோழி / Labels:

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து ஒதுங்கியே வசித்தனர். தங்களின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான தேடலுக்கு தேவையான தனிமையும், இயற்கை வளமும் அவர்களுக்கு மலைகளும், அவைசார்ந்த இடங்களில் கிடைத்திருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மலைகள் சித்தர்களின் வாழ்விடங்களாக விளங்கியிருந்தன. இன்றைக்கும் அவர்கள் அங்கே வாசம் செய்வதாகவும் நம்பப் படுகிறது. தாங்கள் வாழ்ந்த மலைகளின் அமைப்பு மற்றும் சிறப்பினை பற்றி தங்களின் பாடல்களில் சித்தர்கள் பலரும் விளக்கியுள்ளனர்.

இந்த வாரம் அத்தகைய சில மலைகளைப் பற்றிய குறிப்புகளை பார்ப்போம். முதலில் அகத்தியர் வசித்து வருவதாய் நம்பப் படும் ”அகத்திய மலை” பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அகத்திய மலை எனப்படுவது மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். தற்போது இது கேரளத்தின் மலபார் பகுதியில் அமைந்திருக்கிறது. இதற்கு பொதிகை மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமிரபரணி நதி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது.

இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தனாம் புலத்தியனே இன்னஞ்சொல்வேன்
சிறப்படனே இருளகற்றுஞ் சூரியன்போல்
வெத்தியுடனெந்தனது மலைவளத்தை
விருப்பமுடன் சொல்லுகிறென் வினவிக்கேளு
முத்திபெற சித்தர்களை காணவென்று
மூதுலகில் வெகுகோடி மாண்பரப்பா
நித்தியமும் எந்தனது கிரியைநாடி
நிஷ்டையடன் தவமிருக்க வருவார்பாரெ.
பாரெதான் எந்தனது மலைவாரத்தில்
பான்மையுடன் வெருகோடி சித்தருண்டு
நெரேதான் னெழுகடலா மார்கத்தோர்கள்
நெர்மையுடன் கதிர்போல நாடிவந்து
சீரேதான் சிவமலையைக் கண்டுமல்லோ
சித்தருட பதாம்புயத்தை நண்ணவெண்ணி
செரெதா னவர்களிடங் கிட்டிநின்று
சேர்வைக்கும் முன்பணிக்கம் நிற்பார்தானே.
நிற்கையிலே சித்தர்களு மனங்குளிர்ந்த
நெர்மையுடனவர்மீதிற்கிருபைகூர்ந்து
விற்பனமாய் வந்ததொரு மாண்பருக்கு
விருப்பமுடன் ஞானோப தேசஞ்செய்ய

-அகத்தியர் 12000 -

என் மாணவனே!, புலத்தியனே, இருளை இல்லாது அகற்றும் சூரியன் போல என் மலையின் வளம் பற்றி விருப்பமுடன் சொல்கிறேன். வினவிக் கேளு என்று துவங்குகிறார்... முக்தி பெற, சித்தர்களைக் கான என்று உலகில் வெகு கோடி மனிதர்கள் எனது மலையைத் தேடி தினமும் நிஷ்டையுடன் தவமிருக்க வருவார்கள் பார். அத்துடன் எனது மலை அடிவாரத்தில் பல கோடி சித்தர்கள் வாழ்வார்கள். இவர்களை மக்கள் நாடிவந்து அவர்கள் பாதம் பணிந்து சேவை செய்வார்கள். அந்த சேவையில் மகிழ்ந்து அவர்கள் விருப்பமுடன் மக்களுக்கு ஞான உபதேசம் செய்வார்கள். என்கிறார். இவ்வளவு சிறப்புக்கள் பொருந்தியது இந்த மலை என்று குறிப்பிடுகிறார்.

தற்போது இந்த மலையில் அகத்தியருக்கு சிலை ஒன்று பிரதிட்டை செய்யப் பட்டு ஆண்டு தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

நாளைய பதிவில் ”விராலிமலை பற்றி” பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...