போகர் தெரியும்!, யாரிந்த யோகர்?

Author: தோழி / Labels:

இந்த பதிவின் நாயகரான யோகர், அருட்சித்தர் போகர் அளவுக்கு பிரபலமானவரோ அல்லது அறியப்பட்டவரோ இல்லை. ஆனால் ஈழத்து மண்ணின் பதினென் சித்தர்களில் ஒருவராக போற்றி வணங்கப் படுபவர்.

நறுக்குத் தெறித்தார் போல கருத்துகக்ளை கூறவல்லவர் யோகர். சிவ தத்துவத்தினை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சிவத்தியானஞ் செய் செய் செய்
சிவமே நாமெனல் மெய் மெய் மெய்
அவனி அனைத்தும் பொய் பொய் பொய்
அதனை அரிந்து உய் உய் உய்"

- யோகர் சுவாமிகள் -

மற்றொரு பாடலில் தான் குருவருள் பெற்றதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"யாரடாநீ யென்று அதட்டினான்
அன்றேயான் பெற்றேன் அருள்"

இவ்வாறு குருவின் ஒரு வார்த்தையாலேயே குருவருள் கைகூடிய சிறப்புப் பெற்றவர் யோகர்சுவாமிகள்.

தியானம் பற்றிய யோகர் சுவாமிகளின் அறிவுறுத்தல் தெளிவானதும், தீர்க்கமானதும் ஆகும்."ஒருவன் மனதினை அடக்கி வெற்றி கொள்ள வேண்டும் எனத் தீவிரமாக விரும்புவானானால், அவன் தியானத்தைத் தினந்தோரும் செய்துவரக் கடவன்" என்கிறார்.

பதமாசன இருக்கை, தூய்மையான இடம், அமைதியான சூழல் ஆகியனவே தியான சாதனைக்கு ஏற்ற ஆயத்த நிலைகள் என்றும்... இதைப் போலவே மிதமான உணவு, மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம் ஆகியவற்றை வாழ்க்கை முறையாக கூறுகிறார்.

மேலும் தியானம் என்பது ”எதையும் எண்ணிக் கொண்டிருப்பதல்ல என்றும், அது "எதனையும் எண்ணாது சும்மாயிருக்கும் ஒரு நிலை” என்று கூறுகிறார். இதனை...

"சித்திரக்காரன் தீட்டிய தீபம் போல்
நித்திய வஸ்துவில் நினைப்பும் மறப்புமற
முத்தியி லிருக்கும் முறை"

இவரைப் பற்றி பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஈழத்து சித்தர் மரபில் முக்கியமானவராய் போற்றப் படுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரண்டு அறிவிப்புகளும்!, நிறைய நன்றிகளும்!

Author: தோழி / Labels:

நண்பர்களே,

எனது நான்காவது முயற்சியாக அகத்தியர் அருளிய “அகத்தியர் கலைஞானம் 1200” என்ற நூலில் கூறப் பட்டுள்ள அறுபத்தி நாலு சித்துக்களை மட்டும் தனியே மின்னூலாக தொகுத்திருக்கிறேன். முதல் முறையாக பாடல்களுக்கான விளக்கங்களையும் இந்த மின் நூலில் சேர்த்திருக்கிறேன்

’சித்தர்களின் அறிவியல்’ என்பது தொடர்பான ஆய்வுகளுக்கான படியாக இந்த மின் நூலினை கருதிட வேண்டுகிறேன். இந்த நூலில் விளக்கப் பட்டுள்ள சித்துகளின் சாத்தியங்களின் மீதான தொடர் ஆய்வுகள், விவாதங்கள் போன்றவையே மறைந்திருக்கும் பல தகவல்களை கட்டவிழ்க்க உதவும். ஆர்வம் உள்ள எவரும் இதனை பயன் படுத்திக் கொள்ளலாம்.

எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்வதன் மூலம் எவரும் இந்த மின் நூலினை பெற்றுக் கொள்ள இயலும்.

சித்தர் பெருமக்களால் அருளப் பட்ட சோதிட நுட்பங்களை தனியே ஒரு பதிவில் தொகுக்கும் நோக்கத்துடன் புதிய பதிவொன்றினை உருவாக்கி இருக்கிறேன். சித்த ஜோதிடம் என பெயரிடப் பட்டுள்ள இந்த வலைப் பதிவில், காலத்தால் அழிந்து போய்விடக் கூடிய நிலையில் இருக்கும் பல அரிய தகவல்களை தொகுத்திட எண்ணியிருக்கிறேன்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் “ஞான ஆலயம்” என்கிற சஞ்சிகையின், இந்த இதழில் இருந்து எனது கட்டுரைகளை தொடராக பிரசுரிக்க இருக்கின்றனர். இந்த வாய்ப்பினை அளித்த பத்திரிக்கையின் ஆசிரியர் அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைத் தளத்தின் முன்னூறாவது பதிவு இது. சிறு துளியாய் துவங்கப் பட்ட இந்த வலைத்தளம் கடந்த ஒன்பது மாதங்களில் சீரான வளர்ச்சியை கண்டிருக்கிறது.சித்தர்கள் பற்றிய விவரங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இந்த தளத்தினை இது வரையில் நாநூற்றி அறுபது நண்பர்கள் பின் தொடர்கின்றனர். தினசரி குறைந்தது ஐநூறுபேரால், இரண்டாயிரத்தி ஐநூறு பக்கங்கள் வரையில் வாசிக்கப் படுகிறது.

என்னை தொடர்ந்து எழுதச் செய்வது இத்தகைய நண்பர்களின் அன்பும், ஆதரவும்தான்...அத்தனைக்கும் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தையாகவே இருக்கும். இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென பணிவுடன் வேண்டி, அனைவரும் வாழ்வில் நளமும், வளமும் பெற எல்லாம் வல்ல குருவருளை வேண்டி நிற்கிறேன்.

என்றும் நட்புடன்

தோழி


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


என்ன மாதம்?, என்ன பலன்!

Author: தோழி / Labels:

ஒரு மனிதனின் குண நலன்களை அவர்தம் மரபணுக்கள் தீர்மானிக்கிறது என்றும், எண்ணம், செயல், சிந்தனை மற்றும் திறமைகளை அவர்கள் வாழும் சூழல் தீர்மானிக்கிறதென நவீன அறிவியல் கூறுகிறது.

நந்தீசரோ தனது “நந்தீசர் ஞான சூத்திரம்” என்ற நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து அவரின் குணாதிசயத்தின் தன்மைகளை பின்வருமாறு வரையறுத்திருக்கிறார்.

"பாரான சித்திரையில் வித்தையில்லை
பண்பான வைகாசி வித்தையுண்டு
நாரான ஆனிதனில் மெத்தநன்று
நலமான ஆடிதனில் தரித்திரனாவான்
வாரான ஆவணியில் கோபக்காரன்
வளமான புரட்டாசி ஞானயோகி
காரான வைப்பசியில் சித்தன்சித்தன்
கார்த்திகையில் தனாயிஸ் வரியோன்றானே"

- நந்தீசர் -

"தானென்ற மார்கழியில் லதிகாரத்தோன்
தைதனெலே யெளியவனாந் தண்மைபாரு
மானென்ற மாசிதனில் மகரசித்தந்தான்
மருவிவந்த பங்குனியில் ஞானியாவான்
வானென்ற பன்னிரெண்டு மார்க்கமையா
வளமாக சொல்லிவிட்டே னார்தான்சொல்வார்
நானென்ற வாணுவத்தை நீக்கிநோர்க்கு
நல்ல சிவராசபத மெய்தும் பாரே"

- நந்தீசர் -

 • சித்திரையில் பிறந்தவர்களுக்கு வித்தைகள் இலகுவில் பலிக்காது
 • வைகாசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக வித்தைகள் எல்லாம் பலிக்கும்
 • ஆனியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்றாக கைகூடும்
 • ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தரிதிரர்களாவார்கள்
 • ஆவணியில் பிறந்தால் கோபக்காரர்களாக இருப்பர்.
 • புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஞான யோகியாக இருப்பர்.
 • ஐப்பசியில் பிறந்தவர்கள் சித்தர்களாவார்கள்.
 • கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் ஐஸ்வர்யம் உடையவர்களாவர்.
 • மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள்.
 • தை மாதத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள்
 • மாசி மாதத்தில் பிறந்தவர்கள் மகர சித்தர்கள் ஆவார்கள்.
 • பங்குனியில் பிறந்தவர்கள் ஞானியாவர்கள்.

என பன்னிரண்டு பேருக்குமான பலன்களைச் சொல்லிவிட்டேன், இதை யாரும் சொல்லமாட்டார்கள் எனச் சொல்லும் நந்தீசர், ”நான்” என்ற ஆணவத்தை அடக்குபவர் எல்லாரும் சிவபதமடைவர் என்கிறார்.

நாளை இந்த தளத்தின் முன்னூறாவது பதிவு. எனது புதிய முயற்சி ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!

Author: தோழி / Labels:

நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன்.

அந்த வகையில் அகத்தியர் அருளிய பாடலொன்றினை இன்றைய பதிவில் ப்கிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் ”அகத்திய பூரண சூத்திரம்” என்ற நூலில் இருக்கிற்து.


"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"

- அகத்தியர் -

சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் எனக் கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.

நம்புவதற்கு சிரமமான ஒரு தகவல்தானே...!

ஆர்வமும்,விடாமுயற்சியும், குருவருளும் கூடியவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாமே!

”நந்தீசர்” மனிதன் பிறந்த மாதத்தினை வைத்து அவர்தம் இயல்புகளை வரையறுத்திருக்கிறார், அந்த தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வெற்றிலையில் மை போட்டால்....!?

Author: தோழி / Labels:

முந்தைய காலங்களில் ஏதேனும் களவெடுக்கப் பட்டு விட்டாலோ, செய்வினை போன்றவைகளினால் யாரேனும் பாதிக்கப் பட்டிருந்தாலோ.... உள்ளூர் மாந்திரீகரிடம் போனால் அவர் வெற்றிலையில் மை போட்டு பார்த்து களவெடுத்தவர்களைப் பற்றியும், ஏவல் செய்தவர்களின் விவரங்களை சொல்லுவார்.இன்றும் கூட சில இடங்களில் இந்த வழக்கம் நடை முறையில் இருக்கிறது.

இந்த முறையின் சாத்திய, அசாத்தியங்களையோ அல்லது தர்க்க நியாயங்களை பற்றியோ அலசுவது இந்த பதிவின் நோக்கமன்று. இந்த முறையினைப் பற்றி புலிப்பாணி சித்தர் தனது “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் கூறியுள்ளதை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும், அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும், முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..


"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கி, அந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியது, சூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.

நாளைய பதிவில் சித்தர்களின் தரிச்னம் கிடைத்திட அகத்தியர் அருளிய முறை ஒன்றுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அஞ்சனக்கல் என்றால்....!

Author: தோழி / Labels:

போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென் தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது. ஒழுங்கற்ற உருவமுடைய இவை இலகுவாக உடையும் தன்மையுடையது. இவை தண்ணீரில் கரையாது.

இவற்றில் ஆறு வகை கற்கள் இருப்பதாக போகர் கூறுகிறார். அவையாவன...

சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம்
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்

இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே நமக்கு இலகுவாக கிடைக்கின்றது. மற்றவை மிக அரிதாகவே கிடைக்கும். இந்த அஞ்சனங்களை மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் நூலில் காணக் கிடைக்கின்றன.

சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி, மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப் இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.

சூரிய வெப்பம் கண்ணை பாதிக்காமல் இருக்கவும், கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றாமல் இருக்கவும், கண்களுக்கு மேலதிக அழகாய் உண்டு பண்ணவும் பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கற்களை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த அஞ்சன மை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற்து.

நாளைய பதிவில் சுவாரசியமான வேறொரு மை பற்றிய தகவலுடன் சந்திக்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தமருத்துவத்தில் விலங்கினங்கள்!

Author: தோழி / Labels:

சித்த மருத்துவத்தில் “அகமருந்து”, “புறமருந்து” என இரண்டு வகைகள் உள்ளன. நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப இந்த மருந்துகள் அளிக்கப் படும். இவை 64 வகையாக அறியப் பட்டிருக்கிறது. இந்த மருந்துகள் அனைத்துமே இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டன.

இந்த வகையில் விலங்குகள், பற்வைகள், பூச்சி புழுக்கள் கூட மருந்தாக்கத்தில் பயன் படுத்தப் பட்டன. விலங்குகளின் கொம்புகள்,உடல் பாகங்கள், எச்சில்,மலம், விந்து,எலும்பு,எண்ணை, பிச்சு, தோல், குளம்பு, தந்தம் என பல்வேறு பொருட்கள் மருத்துவம், மாந்திரீகம், வசியம் போன்றவைகளுக்கு சித்தர்களால் பயன் படுத்தப் பட்டன.

அந்த வகையில் சில மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பொருட்களைப் பற்றி பார்ப்போம்.


கஸ்தூரி...

கவரி மானின் மார்புப் பகுதியில் கஸ்தூரி என்னும் பொருள் அமைந்திருக்கும். இதனை எடுத்து பதப் படுத்தி உபயோகின்றனர்.

கோரோசனை..

பசுவின் ஈரலுக்கு அருகிலுருக்கும் கொழுப்பு போன்ற பொருள்தான் கோரோசனை. மஞ்சள் நிறத்திலிருக்கும் இதை எடுத்து காயவைத்து பயன் படுத்துவர்.

புனுகு...

பூனைகளில் பலவகை உண்டு அவற்றில் புனுகு என்றொரு வகைப் பூனையின் விந்தே புனுகு என்ற பெயரில் பயன்படுகிறது.

சவ்வாது..

இதுவும் ஒருவகை பூனையின் விந்தே ஆகும் தூய சவ்வாது கொழ கொழப்பாய் இருக்கும்.

அம்பர்

கடலில் வாழும் திமிங்கிலத்தின் புணர்ச்சியின் பொது வெளிப்படும் இந்த பொருள்,கடலில் மிதந்து கரை ஒதுங்கும். இதை எடுத்து காய வைத்து பயன்படுத்துவர்.

இதைப் போல மயில் எண்ணை, பறவைகளின் முட்டைகள்,உடும்பு,முதலை போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட நெய், பாம்பின் விஷம், புறாவின் எச்சம் என பல்வேறு ஆதாரங்கள் சித்தர் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. இவற்றை சுத்தி செய்து தங்களின் தேவைகளுக்கு சித்தர்கள் பயன் படுத்தினர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முக்தி அடைய ஓர் எளிய வழி!

Author: தோழி / Labels: ,

மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.

முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் அலசியிருக்கிறோம்.

இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.


திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!

- பாம்பாட்டிச் சித்தர் -

பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.

அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..


பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மறைந்திருக்கும் மர்மம்...களைவதெப்படி?

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் பாடல்கள் என்றாலே அவை புதிரானவை, ஆழமான மறைபொருளைக் கொண்டவை என்பதாகவே அறிந்திருக்கிறோம். படிப்பவர் மொழி ஆளுமையைப் பொறுத்து அவற்றை எபப்டி வேண்டுமானாலும் பொருள் கொள்ள முடியும். ஆனால் அது இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்வதில் மொழியியலாரிடம் கருத்தொற்றுமை ஒருபோதும் இருந்ததில்லை.

இன்னமும் பல நூற்றுக் கணக்கான பாடல்களில் புதைந்திருக்கும் அர்த்தங்களை வரையறுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். நூல்களுக்கு விளக்கம் எழுதிய தேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் கூட சில இடங்களின் பொருள் கூற இயலாமல் மழுப்பலாய் நகர்ந்து சென்றிருப்பதை காண இயலும்.

ஏன் இப்படிஒரு நிலமை?,

சித்தர் பாடல் களுக்கு உண்மையான விளக்கம் யாராலும் சொல்ல முடியாதா?,

இந்த பாடல்களின் பொருள் அறிய இயலாமல் தடுப்பது எது?

இதற்க்கும் சித்தர்களே பதில் சொல்கிறார்கள்...

"கோர்வையாம் நூற்களெல்லா மறைப்பு மெத்த
கொற்றவனே பாடிவைத்தார் லக்கேயில்லை
நேர்மையாம் பெருநூலுஞ் சிறுநூலுமாக
நேர்மையுடன் பாடிவைத்தா ரனந்தங்கோடி
நேர்வையாய் நூலெல்லாம் சாபங்கொடுத்து
நெடிதாகப் பாடிவைத்தார் சித்தரெல்லாம்"

- அகத்தியர் -

"இட்டாரே நூலாதி நூல்களெல்லா
மெழிலுடனே சாபமது மிகவேகொண்டு
திட்டமுட னு ண்மைக்கு வுத்தாரந்தான்
தீர்க்கமுடன் தான் கொடுத்து திறமைபூண்டார்
அட்டநவ லோகமதை நீற்றவேண்டி
பாடிவைத்தார் பல கோடி பாடல்களே"

- அகத்தியர் -

"அட்டமாசித்தியெல்லா முலகத்தோர்க்கு
அடுக்கடுக்காயுளவினுட விவரமெல்லா
மிட்டமாய்ச்சொன்னதற்க்கு சித்தர்கூடி
என்மேலேசினங்கொண்டு நூலுக்கப்பா
கட்டளையாயிட்டனரே சாபந்தன்னை"

- கருவூரார் -


அதாவது, சித்தர்களின் நூல்களுக்கு சாபங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை நிவர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே தெளிவான மற்றும் உண்மையான பொருள் புரியும் என்கிறார்கள். ஆக சித்தர் பாடல்களின் உண்மையான பொருள் அறிய விரும்புபவர்கள் குருவருள் துணைகொண்டு, சாபநிவர்த்தியை கற்றறிந்து, செய்து படித்தால் பாடல்களின் உண்மை பொருள அறியலாம்.

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வைப்புப் பாஷாணங்களும், நாம் செய்ய வேண்டியதும்!

Author: தோழி / Labels: , ,

போகர் தனது ”போகர்12000” என்ற நூலில் பாஷாணங்களை இரு வகையாக கூறியிருப்பதையும், முதல் வகையான பிற்விப் பாஷாண்ம் பற்றியும் பார்த்தோம். இன்று மற்றொரு வகையான “வைப்புப் பாஷாண்ம்” பற்றி பார்ப்போம்.

வைப்பு முறை என்பது சித்த மருத்துவம் மற்றும் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் ஒரு முறையாகும்.இதன் படி தாழ்வான சில பொருட்களைக் கொண்டு தேவையான உயர் நிலை பொருளை உருவாக்குவதாகும்.மற்றொரு வகையில் சொல்வதானால் இயற்கையாக கிடைக்கும் மூலங்களைக் கொண்டு செயற்கையான மூலம் ஒன்றினை தயாரிப்பதாகும்.

இப்படி வைப்பு முறையில் உருவாக்கப் பட்ட பாஷாணங்களை சித்தர்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.போகர் இந்த முறை பாஷாணங்களை முப்பத்தி இரண்டு வகைகளாக கூறுகிறார்.

அவையாவன..

புத்தோட்டித் தொட்டி வைப்புப் பாஷாணம்
பொன் தொட்டி வைப்புப் பாஷாணம்
செப்புத் தொட்டி வைப்புப் பாஷாணம்
இந்திர வைப்புப் பாஷாணம்
நாக வைப்புப் பாஷாணம்
இலவண வைப்புப் பாஷாணம்
காசு வைப்புப் பாஷாணம்
சோர வைப்புப் பாஷாணம்
கெந்தக வைப்புப் பாஷாணம்
நீல வைப்புப் பாஷாணம்
சூத வைப்புப் பாஷாணம்
தைல வைப்புப் பாஷாணம்
இரசித வைப்புப் பாஷாணம்
குங்கும வைப்புப் பாஷாணம்
துத்த வைப்புப் பாஷாணம்
துருசு வைப்புப் பாஷாணம்
இரத்த வைப்புப் பாஷாணம்
பஞ்சபட்சி வைப்புப் பாஷாணம்
கோடா சூரி வைப்புப் பாஷாணம்
பவளப் புற்று வைப்புப் பாஷாணம்
அரிதார வைப்புப் பாஷாணம்
வாரணக்கேந்தி வைப்புப் பாஷாணம்
கோழித்தலை கந்தி வைப்புப் பாஷாணம்
எருமைநாத் தொட்டி வைப்புப் பாஷாணம்
சவ்வீர வைப்புப் பாஷாணம்
வெள்ளை வைப்புப் பாஷாணம்
தீமுறுகல் வைப்புப் பாஷாணம்
கருமுகில் வைப்புப் பாஷாணம்
சாதிலிங்கம் வைப்புப் பாஷாணம்
மிருதார்சிங்கி வைப்புப் பாஷாணம்
இரத்தசிங்கி வைப்புப் பாஷாணம்
ஏமசிங்கி வைப்புப் பாஷாணம்

நடைமுறையில் இவற்றில் சிலவற்றை மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது.தயாரிப்பின் சூட்சுமங்கள் யாவும் மறைபொருளாய் பாடல்களில் மறைந்து நிற்கிறது.குருவருளுடன் கூடிய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளினால் மட்டுமே இந்த தயாரிப்பு முறைகளை கட்டவிழ்க்க இயலும். அரிய சில பாஷாணங்களைத் தயாரிக்கும் பரம்பரை சித்த மருத்துவர்கள் இன்னமும் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் இந்த கலை அந்தந்த பரம்பரையினருடன் காலம் காலமாய் முடங்கி இருக்கிறது அல்லது அழிந்து வருகிறது என்பதுதான் உண்மை.

வைப்புப் பாஷாணங்கள் என்பவை கதையோ, கற்பனையோ இல்லை, மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்ட ஓர் இரசாயன அறிவியல்.இவற்றை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலம் அரியதோர் மருத்துவக் கலையினை காப்பாற்றிட முடியும்.இன்றைய நவீன விஞ்ஞானம் சாதிக்க சிரமப் படும் பலவற்றை தமிழ் சித்தர்களின் கண்டறிந்து பயன் படுத்தி வந்திருக்கின்றனர்.அழிந்தது போக இருப்பதையாவது கண்டறிந்து பாதுக்காக்கும் பொறுப்பும் கடமையும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிற்து.

நாளைய பதிவில் முற்றிலும் புதியதோர் தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அதென்ன பிறவிப் பாஷாணம்?

Author: தோழி / Labels: , ,

போகர் தனது “போகர் 12000” என்கிற நூலில் பாஷாணங்களின் தன்மை, தரம், தகுதி, வகை மற்றும் பயன் பற்றி விரிவாக கூறியிருக்கிறார். பெரும்பாலும் இந்த விவரங்கள் மறைபொருளாகவே கூறப் பட்டிருப்பதால், ஆய்வாளர்கள் தங்களுக்குள் கருத்தியல் ரீதியாக பல இடங்களில் மாறு படுகின்றனர்.மறைபொருளாக கூறப்பட்டுள்ள விவரங்களை பகுத்தறிவது என்பது தனித்துவமான ஒரு கலை என்றே கூறலாம். இதைப் பற்றி விரைவில் தனியொரு பதிவாக எழுதிட முயற்சிக்கிறேன்.

போகர் பாஷாணங்களை இரு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தியிருக்கிறார். அவை பிறவிப் பாஷாணம் மற்றும் வைப்புப் பாஷாணம். பிறவிப் பாஷாணமென்பது இயற்கையான மூலங்களில் இருந்து நேரடியாகக் பெறப் படுவது. இவற்றில் முப்பத்தி இரண்டு வகை இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த பாஷாணங்கள் பூமியில் இயற்கையாய் விளையும் தாதுக்கள், தாவர இனங்களில் இருந்து பெறப்படுபவை, உயிரினங்களில் இருந்து பெறப்படுபவைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களில் இருந்து பெறக்கூடியவை.

இனி 32 வகையான பிறவிப் பாஷாண வகையின் பட்டியலை பார்ப்போம்.

கறடகப் பாஷாணம்
வெள்ளைப் பாஷாணம்
அபிரகப் பாஷாணம்
காரமுகில்ப் பாஷாணம்
சிலா மதப் பாஷாணம்
சீதாங்கப் பாஷாணம்
கச்சாலப் பாஷாணம்
அஞ்சனப் பாஷாணம்
கற்ப் பாஷாணம்
கற்பரிப் பாஷாணம்
சாலங்கப் பாஷாணம்
அவுபலப் பாஷாணம்
சிலைப் பாஷாணம்
தாளகப் பாஷாணம்
சர காண்டப் பாஷாணம்
இலிங்கப் பாஷாணம்
காந்தப் பாஷாணம்
பலண்டுறுகப் பாஷாணம்
துத்தப் பாஷாணம்
கௌரிப் பாஷாணம்
சங்குப் பாஷாணம்
குதிரைப்பற்ப் பாஷாணம்
தொட்டிப் பாஷாணம்
சிரபந்தப் பாஷாணம்
அமிர்தப் பாஷாணம்
தாளம்பப் பாஷாணம்
வைகிரந்தப் பாஷாணம்
வீரப் பாஷாணம்
கெந்தகப் பாஷாணம்
மிருதாரப் பாஷாணம்
சூதப் பாஷாணம்
கோளகப் பாஷாணம்

இவற்றின் பெயர்களில் இருந்தே இவை எந்த மூலத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதை அறியலாம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான குண நலன்களைக் கொண்டவை. இது பற்றியும் தனது நூலில் போகர் விரிவாக கூறியிருக்கிறார். இவற்றில் சில பாஷாணங்கள் மட்டுமே தற்போது அறியப் பட்டு புழக்கத்தில் இருக்கிறது.

மேலதிக ஆராய்ச்சிகள் நடக்குமேயானால் போகர் கூறிய மற்ற பாஷாணங்கள் பற்றிய தெளிவுகள் நமக்கு கிடைக்கலாம். வாய்ப்புள்ள அனைவரும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும், அல்லது ஈடுபடுவோருக்கு தேவையான வசதிகளை செய்து தருவதன் மூலம் மறைந்து போன அரிய தகவல்களை மீட்டெடுத்து மக்கள் நலம் பேண பயன்படுத்திடலாம்.

நாளைய பதிவில் பாஷாணங்களின் மற்றொரு வகையான “வைப்புப் பாஷாணம்” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாஷாணங்கள் என்றால் என்ன?

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. ”போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை “பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள்” ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ளன.

நாளைய பதிவில் பிறவிப் பாஷானஙகளைப் பற்றியும், அவற்றின் வகைகளையும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


லிங்க முத்திரை!, ருத்ர முத்திரை!

Author: தோழி / Labels: ,

லிங்க முத்திரை

படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.

வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.


ருத்ர முத்திரை...படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.

பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.

தன்வந்திரி அருளிய முத்திரைகள் ஏராளமாய் இருந்தாலும், தேர்ந்தெடுத்த சில முத்திரைகளை மட்டுமே கடந்த ஐந்து தினங்களாக பதிவேற்றியிருக்கிறேன். எதிர்காலத்தில் முத்திரைகளை மின் நூலாக தொகுக்கும் எண்ணமும் இருக்கிறது.நேரமின்மை மற்றும் பதிவின் சுவாரசியம் கருதி இந்த பதிவுடன் முத்திரைகளை இடை நிறுத்திக் கொள்கிறேன், பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றைத் தொடர்கிறேன்.

முற்றிலும் புதியதோர் தலைப்பில் அடுத்த பதிவு... காத்திருங்கள்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அனுசாசன் முத்திரை!, கருட முத்திரை!

Author: தோழி / Labels: ,

அனுசாசன் முத்திரைசுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல் , மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.


கருட முத்திரைபடத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும்.இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும் என்கிறார்.

நாளைய பதிவில் நிறைய நண்பர்கள் கேட்டிருந்த உடல் எடையினை குறைக்கும் முத்திரை மற்றும் ஜலதோஷம் நீக்கி, இதயம் வலுவாய் வைத்திருக்கும் முத்திரைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முகுள முத்திரை!, சுரபி முத்திரை!

Author: தோழி / Labels: ,

முகுள முத்திரை


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்களா வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப் பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.


சுரபி முத்திரை


இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. அவதானமாக செய்ய வேண்டும்.

பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப் பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

இந்த முத்திரை உடலை வலுவடையச் செய்யும் சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். சிந்தனை தெளிவாகும் உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் என்கிறார். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

பார்வைக் கோளாறு நீங்கிட, நினைவாற்றல் அதிகரித்திட, பல்வலி போக்கிட உதவும் முத்திரைகளை நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஞான முத்திரை!, குபேர முத்திரை!

Author: தோழி / Labels: ,

ஞான முத்திரைமேலே படத்தில் உள்ளது போல சுட்டு விரல் நுனியால் பெருவிரல் நுனியை சற்று அழுத்தமாக தொட்டு, மற்ற விரல்கள் மூன்றும் வளைவின்றி நேராக ஒன்றோடொன்று சேர்ந்தபடி இருப்பதே ஞான முத்திரையாகும்.இதனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் தன்வந்திரி. மேலும் மனம் ஒருமுகப் படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்

ஞானமுத்திரையை செய்து கொண்டே, தியானம் செய்தால் பல அற்புத சித்திகள் கை கூடுமாம்


குபேர முத்திரை
மேலே படத்தில் உள்ளவாறு பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

நோய் தீர்க்கும் அரிய முத்திரைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அஞ்சலி முத்திரை!, சங்கு முத்திரை!

Author: தோழி / Labels: ,

எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரை கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு, ஆனால் இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இது தமிழனின் கலை, இதை வாசிக்கும் நண்பர்கள் இந்தச் செய்தியினை. தமிழறிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான எதிர்பார்ப்பு....

முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.

பின் குறிப்பு :-

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.

சங்கு முத்திரைஇடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும்.(படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரை யானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும் . மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.

நாளைய பதிவில் காரிய சித்தியளித்து வாழ்வில் வளம் பெருக்கும் முத்திரை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நலம் தரும் முத்திரைகள்!

Author: தோழி / Labels: ,

தன்வந்திரி அருளிய “தன்வந்திரி 1000” என்கிற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் முத்திரைகளின் முதல் வகையான யோக முத்திரைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் மற்ற வகையான தேக முத்திரைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முத்திரைகளைப் பற்றி தனது நூலின் 679 முதல் 713 வரையிலான பாடல்களில் விவரித்திருக்கிறார்.

முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது.

நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி மையங்கள் என்று அழைக்கிறோம். இது மாதிரி மனித உடலில் சக்தி மையங்கள் 20000 க்கு மேல் இருப்பதாகவும், அவற்றில் முக்கியமானவை ஏழு என்றும் மற்றவை துணைச்சக்கரங்கள் என்று தன்வந்திரி கூறுகிறார்.

மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை சக்கரங்கள் ஆகும்,இவை நலமாக இயங்கும் வரை உடல் நலமுடன் இருக்கும் என்றும், இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உண்டாகும் பொது உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்கிறார். இந்த பாதிப்புக்களை இலகுவாக நிவர்த்தி செய்யவே முத்திரைகள் பயன்படுகின்றன என்கிறார். இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களினால் கட்டுப்படுத்தப் படுகிறது என்கிறார் .

பெருவிரல் மணிப்பூரகத்தையும், சுட்டுவிரல் அனாகதத்தையும், நடுவிரல் விசுத்தியையும், மோதிரவிரல் மூலாதாரத்தையும், சுண்டுவிரல் சுவாதிச்டானத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் மற்றைய இரண்டு சக்கரங்களான சகஸ்ராரம், ஆக்ஞை ஆகியவை ஞானச் சக்கரங்கள் என்றும் இவற்றை விரல்களால் கட்டுப்படுத்த முடியாதென்றும் குறிப்பிடுகிறார். நமது உள்ளங்கையில் ஒரு துணைச் சக்கரமும், விரல் மூட்டுகளில் ஒவ்வொரு துணைச் சக்கரங்கள் வீதம் பல சக்கரங்கள் இருப்பதாகவும் அவை இந்த முத்திரைகள் மூலம் தூண்டப்பட்டு மூல சக்கரங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும் என்கிறார். ஆகவே இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.

நாளைய பதிவில் திக்குவாய் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் முத்திரையினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அதி ஆபத்தான வர்ம முறைகள்..!

Author: தோழி / Labels: ,

வர்மக்கலையினை மனித சமூகத்தின் ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம், அழிவிற்கும் பயன்படுத்திடலாம்.இதன் பொருட்டே இந்தக் கலை காலம் காலமாய் நம்பகமான சிலருக்கு மட்டுமே வழிவழியாய் பயிற்றுவிக்கப் பட்டு வந்தது. தகுதியானவர்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த தொடர் சங்கிலி அறுந்து போகும் .இப்படியாக பல அரிய விஷயங்களை நாம் இழந்துவிட்டோம் என்பது வேதனையான உண்மை. இன்றைக்கு நம்மிடையே எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்திட வாய்ப்புள்ள அனைவரும் முயற்சித்திட வேண்டும்.

சங்குதிரி கால வர்மம்

"சரளமான சங்கத்தின் ஒருவிரல் கடை
உள்தள்ளி நின்ற வர்மமடா
இதனில் தாக்கமது நிகழ்ந்தால்
ஓலமிட ஓசையது எழாது
எழாமலே இருவிழியது அந்தக்
காரமது சூழ்ந்து தெறித்து
இருமலது தோன்றி மயக்கமுமாகுமே"

- அகத்தியர் -

இந்த வர்மமானது குரல்வளையின் குரல் நாண் மடிப்பு உள்ள இடத்தில் அதாவது குரல் வளையின் நடுவில் கழுத்துச் சங்கின் இருபுரமும் உள்ளது. இந்த வர்மப் புள்ளியில் தாக்கப்பட்டால் குரல்வளையின் இருபுறமும் உள்ள வலது , இடது நாண்கள் சேதமடைந்து குரல்வளைக்குச் செல்லும் காற்றானது தனது இயல்பு அதிர்வுகளை ஏற்படுத்த முடியாது தடுக்கப் படும் இதனால் தாக்கப்பட்டவர்களால் உடனடியாகப் பேசமுடியாமல் போய் கண்கள் இருண்டு மயக்கமடைவார்கள்.


தட்சணக் கால வர்மம்...

"போகுமடா மைந்தா வெள்ளையது
உள்ளங்கையில் பொருந்திநின்ற
தட்சணைக் காலம் சொல்வேன்
ஆகுமடாஇந்தவர்மம் கொண்டால்கேளு
உயிரது பிரியும் நேரமாகும் புண்ணியனே
மாத்திரையது மீறிரைக்கால் மரணமாகும்"

- அகத்தியர் -

நமது உள்ளங்கையின் நடுவிலிருந்து சற்று மேலே விரல்களை நாபிப் பிடித்தால் ஆள்காட்டி விரலுக்கு அடுத்தவிரலான கட்டை விரல் எந்த இடத்தில் நிலைத்திருக்கின்றதோ அந்த இடமே தட்சணக் கால வர்மப் புள்ளியாகும். இந்த வர்மத்தில் முக்கால் மாத்திரையோ அல்லது முழு மாத்திரை அளவோ தாக்கப்படுமானால் தாக்குதலுக்கு உள்ளாபவர் மரணமடைவார்..இந்தத் தட்சணக் கால வர்மத் தாக்குதலை இனி இயலாது என்கிற இறுதிக்கட்டதிலேயே பயன்படுத்த வேண்டும்...

இந்த பதிவில் தரப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் தகவல் பகிர்வே, தயவு செய்து எவ்ற்றையும் பரிட்சித்து துன்பமடைய வேண்டாம். தக்க வாய்ப்பும், குருவருளும் கிடைக்கப் பெற்றவர்கள் கற்றறிந்து மனிதகுல மேன்மைக்கு பயன்படுத்திடுங்க்ள்.

அடுத்த பதிவில் உடலுக்கு நலமும்,பலமும் நல்கும் தேக முத்திரைகளைப் பற்றி பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!

Author: தோழி / Labels: ,

தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

தட வர்மம்

"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"

- அகத்தியர் -

நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால் முடியாது போய்விடும்.


முடக்கு வர்மம்

"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"

- அகத்தியர் -

இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.

நாளைய பதிவில் மேலும் அதி ஆபத்தான இரண்டு வர்ம முறைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முக்கிய வர்மங்கள்

Author: தோழி / Labels: ,

உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...

தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37

திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13

தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15

உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10

மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்

கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9

வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்

கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8

தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19

முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்

கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13

இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8

மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..

நாளைய பதிவில் வர்மங்கள் சிலவற்றை செய்திடும் முறையினை காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வர்மங்களின் வகைகள்..!

Author: தோழி / Labels: ,

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

படுவர்மம்

நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்

ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யார் வர்மம் பழகலாம்...!

Author: தோழி / Labels: ,

வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.

வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.

இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...

படு வர்மம்

தொடு வர்மம்

தட்டு வர்மம்

நோக்கு வர்மம்

இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மருத்துவக் கலை!, மரணக் கலை!

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர் க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.

பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"

- அகத்தியர் -

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய “ஒடிவுமுறிவுசாரி” என்ற் நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிற்து. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து.

நாளைய பதிவில் இந்த நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் வர்மம் பற்றிய மற்ற தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்

Author: தோழி / Labels: ,

மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.

முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"


- அகத்தியர் 12000 -

சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.


செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"


- அகத்தியர் 12000 -இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.


வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"


- அகத்தியர் 12000 -

வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.

இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...