மந்திர சித்தி.!

Author: தோழி / Labels: ,

மந்திரம் என்பது சூட்சுமம், மாந்திரீகம் என்பது சூட்சுமமான மந்திரத்தினை செயல்படுத்தும் நுட்பம். எந்த ஒரு வினைக்கும் விளைவுகள் உண்டு என்பது நியதி. இதன் அடிப்படையில் மந்திரம், மாந்திரீகத்தின் பயன் அல்லது பலன் என்று ஒன்று இருக்குமல்லவா....அந்த பலனைத்தான் மந்திரசித்தி என்கின்றனர். மந்திரம் சித்தியானால் மட்டுமே தகுந்த பலன் கிடைக்கும்.

நமது மூளையில் பல லட்சக்கணக்கான அறைகள் இருப்பதாகவும், மந்திர ஒலியானது அந்த் அறைகளை உயிர்ப்பித்து திறப்பகாதகவும், மந்திர ஒலியின் அதிர்வுகள் அந்த அறைகளில் நிரம்பியிருந்து தேவையான தருணத்தில் பயன் தருவதாகவும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள், அவை உருவாக்கிடும் அதிர்வுகள், அதைத் தொடர்ந்த ஆற்றல் வெளிப்பாடு என்பதாக மேற்சொன்ன கருத்தோடு பொறுத்தியும், இருத்தியும் பார்த்தால் பல புதிய கோணங்கள் புலப்படும்.

சித்தர் பாடல்களில் பொருள் விளங்காமைக்கு ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிற்து. அதாவது சித்தர்கள் தங்களின் நூல்களை சபித்திருப்பதாகவும், அவற்றிற்கான சாப நிவர்த்தியினை முறையாக செய்தவருக்கு, அந்த பாடல்களின் பொருள் விளங்கும் என்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது.இந்த தகவல் அநேகமாய் மறைத்தே வைக்கப் பட்டிருக்கிறது. முறையான குருவருளின் துணையோடு பயிலும் போதுதான் இத்தகைய நுணுக்கங்களை அறிய முடியும்.


உதாரணத்திற்கு அகத்தியர் அருளியதும் எல்லோரும் பாராயணம் செய்யக் கூடியதுமான மந்திர தோத்திரம் ஒன்றை பாருங்கள்....

"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி

நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து

நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக

ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு

உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே

ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம

ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம

ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம

ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம

ஓம்நங்கிலி நமவம்வசி வயநம

ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்

அங்லங்றிங் சிவய நம

ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்

சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா

நசிநசி சிவய நம ஓம்

மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்

மசிமசிவய மசிவய நமஓம்

றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்

லங்லங் ருங்றிங் சிவய நமஓம்

லாலீலூலம் சிங்சிவய நமஓம்

ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை

உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்

தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்

சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்

ஆம் சிவசிவ யோகமருளே காணும்

அட்டமாசித்து களுமாடலாகும்

ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்

ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"


- அகத்தியர் -

இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர். உங்களுக்கு புரிந்ததை பின்னூட்டத்தில் விளக்கிடலாமே!

நாளைய பதிவில் கல்வி, செல்வம், வீரம் இவற்றை அருளும் மந்திரங்களையும், அவற்றை செயல் படுத்தி மந்திர சித்தி அடையும் வழியினையும் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திரங்களின் வகையும், மந்திரவாதியின் தகுதியும்!

Author: தோழி / Labels: , ,

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக மந்திரங்கள் என்பது சூட்சுமத்தின் திறவு கோல் என்பதையும், மாந்திரீகம் அதனை செயல்படுத்தும் நுட்பம் என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். இந்த சூட்சுமத்தின் எல்லைகள் மிகப் பெரியது. ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்கள் இவற்றை செப்பிடு வித்தைகளாகவும், மை விளையாட்டுக்களாகவும், பொய்யான கட்டுக் கதைகளாகவும், ஏமாற்றுத் தந்திரங்களாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர்.

மெய்யான மாந்திரிகம் பற்றி அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

"மெய்யான மாந்திரீக ஏதென்றால்
மேதினியாய் சித்தர் மொழி அனேகமுண்டு

வையகங்கள் தானறிக மாந்திரீக

மதிப்புடனே கடவுள் பதந்தனை வணங்கி
கூறுவேன் புலத்தியனே எல்லாம் மெய்தான்
துய்யவே உச்சாடனம் பொய்யுமாமோ

துப்பரவாய் தேவதைகள் தானுமப்பா

வையகங்கள் தானறிய வருதல் பொய்யோ

நண்ணான கெசகரண வித்தையப்பா

நாநிலத்தில் மெய்யாகும் பொய்யல்ல

பெண்ணான மாதருக்கு குளிசங் கட்டல்

பேருலகில் பொய்யல்ல மெய்யேயாகும்

தண்ணமுடன் நம்பு எல்லாம் மெய்யே
சத்தியமாய் நடதவர்க்கு எல்லாஞ் சித்தே"


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

நமக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளின் படி சித்தர்கள் மநதிரக்கலையினை மக்களின் நோய்களைத் தீர்க்கவும், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பதுடன், பில்லி, சூனியம், ஏவல், பூத பிசாசுகளிடமிருந்து மக்களைக் காப்பதற்க்கும், ஆன்ம பலத்தை அதிகரிப்பதற்கும், கொடிய வறுமையில் வாடும் மக்களுக்கு மந்திரங்களை யந்திரங்களாக வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பங்களை நிவர்த்திக்கவும் பயன் படுத்தி இருக்கின்றனர்.

கருவூரார் தனது அட்டமாசித்து என்னும் நூலில் மந்திரங்களின் தன்மையினை பொறுத்து அவற்றை எட்டுவகையாகப் பிரிக்கிறார்.. அவையாவன,

1, மூல மந்திரங்கள்.
2, பீஜ மந்திரங்கள்.

3, பஞ்சாக்கர மந்திரங்கள்.

4, தேவாதி மந்திரங்கள்.

5, வசிய மந்திரங்கள்.

6, அஸ்திர மந்திரங்கள்.

7, மகாசக்தி மந்திரங்கள்.
8, சித்த மந்திரங்கள்.


தற்போது புழக்கத்தில் இருக்கும் மந்திரம், மற்றும் மாந்திரீக முறைகள் மிகக் கடின வழிகளில் மேற்க் கொள்ளப்படுபவையாகவே இருக்கின்றன.ஓரிரு முறைகள் உச்சாடனம் செய்வதன் மூலம் பாரிய சக்தியை உருவாக்கும் மந்திரப் பிரயோக முறைகள் இன்னும் சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே உள்ளன. இவற்றை பகுத்தறியும் தன்மை தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

"அப்பனே! மாந்திரீய சிவயோகிக்கு
குன்றாத குருவருளுமிருக்க வெண்டும்

கூர்மயான புத்தியது மிகவும் வேண்டும்

வென்றிடவே பொய்கொலை களவுமாற்கம்

வேதாந்தக் கண்மணியே நீக்கல் வேண்டும்

தொன்றிசையாம் குருமொழியை மகுடமாகத்

தோற்றமுடன் கொள்பவனே சித்தனாமே"

- அகத்தியர் மாந்திரீக காவியம் -

நாளைய பதிவில் அகத்தியர் அருளிய மந்திர தோத்திர பாடலொன்றினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திரமும், மாந்திரீகமும்....

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் பார்வையில் மந்திரம் என்பது ஒலியியல் மற்றும் அதிர்வுகளின் அடிப்படையில் அமைந்த நுட்பம். இந்த கலையினை முறையாக எவரும் கற்றுக் கொண்டு பயன் படுத்திட இயலும். தகுந்த குருவின் வழி நடத்துதலின் பேரில் யாரும் கற்றுக் கொள்ளக் கூடியது. இவற்றை நல்லவற்றிற்கும் பயன் படுத்தலாம், தீயவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதனை உணர்ந்தே சித்தர்கள் மந்திரக் கலையை நல்லொழுக்கமும் பரோபகார சிந்தனையும் கொண்டவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதற்க்காக தங்களுக்குள் மிகமிக இரகசியமாக வைத்திருந்தனர்.

அப்படி இருந்தும், பிற்காலங்களில் சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும் இந்தக் கலையைக் கையாளத் தொடங்கியதால் மந்திரக்கலை என்றாலே மக்கள் அஞ்சி கலங்கும் ஒரு நிலை உருவாகியது. இன்றைக்கும் சில நபர்கள் தங்களை சித்தர்களின் பிரதிநிதிகள் என்றும், நலமருளும் தேவதைகள் தங்களின் மந்திர சக்திக்கு கட்டுப் பட்டவை என்று பொதுமக்களை நம்பச் செய்து,அவர்களின் அறியாமையை மற்றும் இயலாமையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கருவூர்ச் சித்தர் அன்றைக்கே இத்தகைய போலி மந்திர வாதிகளை தனது ”அட்டமாசித்து” என்னும் நூலின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு அடையாளம் காட்டி விடுகிறார்...

"வணங்கு வாயுலகினிலே மாந்திரீகர்
மகிதலமும் என்வசமே என்று சொல்வார்

கணங்களெல்லாம் எந்தனுக்குச்சித்தியென்பார்

கண்ணதனில் கண்டேனே தெய்வமென்பார்

குணமான வக்கிரத்தின் மாறெல்லாம்
குறிகண்டு மாறுவோரென்று சொல்வார்

இணங்காதே கோடிகோடி உருவே செய்தொம்

என்றல்லோ வெடுத்துரைப்பார் மட்டிமாடே"


- கருவூரார் -

நன்மை தரும் பல விசயங்களுக்குப் பயன் படுத்த வேண்டிய இந்த மந்திரக்கலை நிதர்சனத்தில் மக்களை அமானுஷ்யத்தின் பிடியில் வைத்து அச்சமூட்டவும், பொருள் பறிக்கவும், பெண்களை வஞ்சிக்கும் வகையில் பயன் படுத்தப் படுகிறது என்பது கவலையளிக்கும் ஒன்று. இதன் பொருட்டே சித்தர்கள் இந்த அரிய கலையை அதிகம் பரப்பி விடாமல் தமக்கு நம்பிக்கையான சிடர்களிடம் மட்டுமே உபதேசித்தனர்.

மந்திரங்கள் என்பது ஒரு வகையில் கணித சூத்திரங்களைப் போன்றதே..., இவற்றை வெறுமனே மூட நம்பிக்கைகள் என ஒதுக்கி விடாது, இந்த துறையில் மேலதிக ஆய்வுகள் செய்யப் பட்டால் பல விஷயங்களை பற்றிய அளப்பறிய தெளிவுகள் கிடைக்கலாம். மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளை செய்யும் விஷயங்களை உருவாக்கிடும் சாத்தியங்கள் மந்திரக் கலையில் இருக்கின்றது.

விவரம் அறிந்த எவரும் மந்திரங்களை உருவாக்கிட இயலும், ஆனால் அவற்றை பிரயோகிக்கும் முறையில்தான் மந்திரக் கலையின் வெற்றி பொதிந்திருக்கிறது. மந்திரங்களை முறையாக பயன்படுத்தி அவற்றை செயலாக்கம் செய்யும் முறையினைத்தான் மாந்திரீகம் என்கின்றனர்.

சித்தர்கள் மந்திரங்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை எட்டு வகையாக பிரித்திருக்கின்றனர். மேலும் மந்திரக் கலையினை கையாளுவோரின் தகுதிகள் பற்றியும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

அந்த விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திரமாவது...!

Author: தோழி / Labels: ,

ஒலியின் தத்துவத்தில் இருந்து தோன்றியதே இந்த பேரண்டம். அமைதியின் ஆழத்திலும் கூட ஒலி உறைந்திருக்கிறது. இத்தகைய ஒலி உருவாக்கும் அதிர்வுகள் நிரம்பிய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒலி மற்றும் அது உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டதே சித்தர்களின் ”மந்திரக் கலை”. இன்னமும் எளிமையாக கூறுவதெனில் ”ஒலி அது ஏற்படுத்தும் எதிரொலி” இந்த தத்துவமே மந்திரக் கலையின் அடிநாதம்.

காற்றில்லாத வெற்றிடத்தை தவிர மற்ற எல்லா ஊடகங்களிலும்(திட, திரவ, வாயு) ஒலியானது அலை அலையாக பரவும் தன்மையுடையது. நவீன அறிவியலில் எல்லா ஒலிகளுக்குமான அதிர்வெண்கள் மற்றும் அலைவரிசைகள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. பொருட்களும் குறிப்பிட்ட அதிர்வெண்ணை கொண்டிருப்பதாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஒலியினையும் அது தரும் அதிர்வுகளையும் சித்தர்கள் எவ்வாறு பயன் படுத்தினர் என்பதே இந்த தொடரின் நோக்கம்.

மந்திரம் பற்றி அகத்தியர் தனது “அகத்தியர் மாந்திரீக காவியம்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.


"தொண்டு செய்து பெற்றவர்கள் கோடியுண்டு
தொல்லை யென்று விட்டவர்கள் கோடியுண்டு
விண்டுமே தெரிந்ததுவும் கோடியுண்டு
விட்டகுறை பட்டவர்கள் கோடியுண்டு
சண்டமாரு தம்போல் மந்திரத்தை
தரணியில் கற்றவர் கோடியாமே"

- அகத்தியர்

அநேகமாய் எல்லா சித்தர்களும் மந்திரம் பற்றிய தங்களது தெளிவுகளை நூலாக்கியிருக்கின்றனர். இவை பலவும் மறை பொருளாய் அருளப் பட்டிருப்பதனால், இவற்றின் சரியான மொழியாக்கம் கைவரப் பெறாத காரணத்தினால் இவற்றின் உண்மைத் தன்மை பற்றி பல விதமான கருத்துக்களும், எள்ளல்களும், கேலிகளும் உண்டு.

சித்தர்களைப் பொறுத்த வரையில் எல்லா பொருட்களும் ஒலி வடிவான தத்துவங்களில் இருந்தே தோன்றியவை. அதனால் இவை எல்லாவற்றிற்கும் மந்திர வடிவங்கள் உண்டு. குறிப்பிட்ட ஒலிகளை எழுப்புவதன் மூல அந்த மந்திரங்களை உருவாக்க இயலும்.அதனைக் கொண்டு அந்த பொருளை கட்டுப்படுத்த அல்லது தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன் படுத்த இயலும் என நம்பினர். மந்திரங்களின் மூலம் பஞ்சபூதங்களை தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அறம் செய விரும்பு - திருமூலர்!

Author: தோழி / Labels:

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே."

- திருமூலர் -

"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!"

- திருமூலர் -


உங்களால் எதைக் கொடுக்க முடியுமொ அதை, பாகுபாடு பாராமல் எல்லோருக்கும் கொடுங்கள், அதுவே அறம் எனப்படும். மற்ற பிற உயிரினங்களின் துயரைத் துடைக்கும் எதுவும் நல்லறமே!. அதுவே நிலை பேற்றினை தரும். இத்தகைய அறமானது மனதாலும், செயலாலும், சொல்லாலும் செய்யப் படல் வேண்டும். இவ்வாறு செய்யும் அறமானது செய்கிறவனையும், அவனது சுற்றத்தையும் மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.

மேலும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவது மட்டுமே அறம் இல்லை. பசித்த பசுவுக்கு ஒரு பிடி புல்லைத் தருவதும், தூய மனதோடு ஒரு பச்சிலை இட்டு இறைவனை வணங்குவதும் கூட அறம்தான். குறைந்த பட்சம் பிறர் மனம் நோகாமல் இனிமையான சொற்களை பேசுவதும் கூட மேலான அறம்தான் என்கிறார் திருமூலர்.

எளிய வார்த்தைகளில் உயரிய தத்துவம்!

அறம் செய விரும்புவோம்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனம் திறந்து சில வரிகள்....

Author: தோழி /

"சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே;
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே."

- சிவவாக்கியர் -

சித்தர்கள், சித்தரியல் தொடர்பாக முதல் முறையாக எனது தனிப் பட்ட கருத்துக்களென சிலதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதிவுலகில் எதையும் பரப்புவதோ அல்லது வலியுறுத்துவதோ என் நோக்கமில்லை. மேலும் எனக்கென தனித்துவமான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. என் இயல்புக்கு அது சாத்தியமும் இல்லை. குருவருளை மட்டுமே பெரிதாக நினைக்கும் ஒரு சாமானிய தமிழ்பெண், சர்வகலாசாலை மாணவி இவை மட்டுமே தற்போதைய எனது புறத்தின் அடையாளங்கள்.

என் வரையில் சித்தர்கள், சித்தரியல் என்பது, அதிகார வர்க்கத்தின் முன்னால் அங்கீகாரம் கிட்டாது போன ஆதித் தமிழனின் அடையாளங்களில் ஒன்று. அங்கீகாரம் கிட்டாமல் போனதற்கு பல சமய, சமூக, அரசியல் காரணிகள் இருந்திருக்கலாம். அதை விவாதிப்பதால் தற்போது பலனேதும் ஏற்பட போவதில்லை. அதே நேரத்தில் இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சித்தர்கள் எவரையும் வானத்தில் இருந்து தேவதைகள் கொண்டு வந்து போட்டதாக குறிப்புகள் இல்லை. அவர்கள் பிறக்கும் போது நாளும், கோளும் உச்சத்தில் நின்று ஆசிர்வதித்ததாக கதைகளும் இல்லை. ஆண்டவனின் அவதாரங்கள் என புகழ்சூட்டும் ஆராதித்தல்களும் நடந்ததாகவும் தெரியவில்லை.

மேலும் சித்தர் இலக்கியத்தில், சித்தர்களின் தெளிவுகள் அனைத்துமே தீயவர்கள், அல்லது விரும்பதகாதவர்களின் கைகளில் சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதன் பொருட்டே மறை பொருளாய் கூறப்பட்டிருக்கிறது. சமத்துவம் பேசிய சித்தர்கள் தங்களின் கண்டுபிடிப்புகள் யாரிடமோ போய் சேர்ந்து விடக் கூடாது என்பதில் மட்டும் மிக உறுதியாக இருந்திருக்கின்றனர் என்பது, நமக்கு பல ஹேஷ்யங்களை கொண்டு தரும்.அதை விவாதிக்க புகுந்தால் கசப்புணர்வும், கோபதாபங்கள் மட்டுமே எஞ்சும்...

சித்தர்கள் அனைவருமே சாமானியர்கள், பாமர தமிழர்களின் பிரதிநிதிகள்... வாழ்நாளின் முயற்சி, உழைப்பு, தேடல், ஆராய்ச்சிகள், தெளிதல்கள் இவைகளே அவர்களை மெய்ஞானிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் உயர்த்தின. அரசர்களின் அருகாமையில் அவர்கள் செழித்ததாய் தெரியவில்லை. காடுகள், மலைகள் என இயற்கை அன்னையின் மடியில் இயல்பினராய் வாழ்ந்திருந்தனர். அவர்கள் அருளிய எத்தனையோ அரும்பெரும் விஷயங்கள் காலப்போக்கில் மறைந்தும், மறைக்கப் பட்டும் போயிருப்பது வேதனையான உண்மை.

சாமானியர்களோடு வாழ்ந்த சாதனை மனிதர்களைப் பற்றி சாமானியர்களுக்கு தெரியாமல் போவதை விட கொடுமையானது ஒன்று இருக்க முடியாது. குரு பரம்பரை சங்கிலியில், ஒரு குறுகிய வட்டத்துக்குள் புழங்கி, ஒலைச் சுவடிகளில் முடங்கி, காலவோட்டத்தில் அழிந்தும், அழிக்கப் பட்ட பின்னர் எஞ்சியிருப்பவையே இன்றைக்கு நூலகங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சித்தர் இலக்கியம். இந்த நூல்களில் சில போலியானவை என்பது அதிர்ச்சி தரும் செய்தி, இவற்றை ஆய்ந்தறிந்து பிரிப்பதே சித்தர்களுக்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும். இதனை தனியொரு நிறுவனம் அல்லது தனி மனிதர்களால் மட்டும் செய்திட முடியாது. தமிழறிந்த அனைவரும் கூட்டாய் செய்திட வேண்டிய திருப்பணி .

அந்த வகையில் எனது சிறு முயற்சிதான் இந்த வலைப் பதிவுகள். சித்தர்களை புனித பிம்பங்களாய் கற்பித்து, மூட நம்பிக்கைகளை முன் மொழிந்து, அவர்களை வழிபாட்டு பொருளாய் நிறுவுவது என் நோக்கமில்லை. அவர்களின் ஆக்கங்களின் ஊடாக பயணிப்பதன் மூலம் கிடைக்கும் மெய்ப் பொருளின் தெளிவுகளே எனது இலக்கு. அந்த வகையில் என்னிடம் இருக்கும் புத்தகங்களை குறிப்பெடுத்து ஆவணப் படுத்துமொரு முயற்சியே இந்த பதிவுகள்.எனது படிப்புகள் முடிந்த பின்னால் இவற்றை எல்லாம் குருவருளின் துணையோடு ஆய்வுகள் செய்யும் உத்தேசம் இருக்கிறது.

சித்தர்கள் என்பார் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள், உள்ளொளி உணர்ந்த உயரிய நிலை அது... அத்தகையோர் ஒருபோதும் தங்களை சித்தர்கள் என அழைத்துக் கொள்வதில்லை. அப்படி தங்களை அழைத்துக் கொள்வோர் பற்றி நானெதுவும் சொல்வதாய் இல்லை. சிவவாக்கியரின் பாடல் ஒன்றே அவர்களுக்கான பதிலாய் இருக்கும்.

"முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே"

- சிவவாக்கியர் -

இறுதியாக ஒன்று, சித்தர்கள் வணக்கத்துக்குறியவர்கள்தான்... ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை!

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு."

- திருவள்ளுவர் -

என்றும் நட்புடன்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள் !

Author: தோழி / Labels: , ,

பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.

"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"

- சந்திர ரேகை

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் ”எதிர் கூறல்களை” கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. குருவருளால் அவை பற்றிய தகவல்கள் கிட்டும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

இத்துடன் சந்திரரேகை பற்றிய இந்த தொடர் முற்றிற்று. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கலியுகம் - இந்தியாவின் வரலாறு!

Author: தோழி / Labels: ,

கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார்.

"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத் தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"

- சந்திர ரேகை -

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும் சொன்னார்"

- சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......


ஆட்சியாளர்கள்
ஆண்டு
பரீட்சித்து மன்னன்
500
சனமேசெயன்
300
நரேந்திரன்
288
சாரங்கன்
85
விக்கிரமாதித்தன்
2000
சாலிவாகனன்
349
போசனராசன்
500
சுப்பராயலு
695
கர்த்தாக்கள்
85
இஸ்லாமியர்
62
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
73
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
96
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
40

இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....

இந்த பட்டியலில்..

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்" 73 ஆண்டுகள்

"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்

"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40 ஆண்டுகள்


இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லொருக்கும் தெரிந்ததே..கோரக்கர் கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம் அடைந்த போது கலியுகத்தின் வயது 5073 ஆண்டுகளாகும்.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர் அகிலசக்கர கொடியுடனே அழியாமல் பான்மையுடன் அரசாள" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய் மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம் பொறித்த இந்தியக் கொடி என்பதாக அனுமானிக்கலாம்.

இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும் சொல்லியுள்ளார் என்று கோரக்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல், சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும் அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி!

“போகர்” பூமிக்கு திரும்ப வரும் தினம் பற்றிய விவரங்களைக் கூட தனது நூலில் கோரக்கர் விவரித்திருக்கிறார். நாளைய பதிவில் அந்த தகவல்களுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கலியுகமும், மனிதர்களின் குண நலன்களும்...!

Author: தோழி / Labels: ,

கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.

மனிதர்களின் குண நலன்களை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சின்னம் மிக ஆகிடுமே செகம் பிறந்து
சீரியதோர் நாகம்போல மாந்தரெல்லாம்
பின்னமுற்றும் பேதமையால் மயக்கம் கொள்வார்
பிரபலமாம் அரசர்கட்கும் ஆனிமெத்த
இந்நிலத்தில் எங்கெங்கும் சங்கம் கூட்டி
இதமுடனே நிலைநாட்டி ஈசன்தன்னை
நன்னயமாய் வழிபடுவர் நாட்டில் எங்கும்
நற்சமய வாதிகளும் அநேகம் உண்டே "

- சந்திர ரேகை -

உலகமே மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்கள் நாகம் போல் சீறிக் கொண்டு, ஏற்றத்தாழ்வு பேசி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள முற்படுவர். இந்த நிலத்தில் அரசர்களுக்கு இடையில் சங்கங்களும் பிரிவினைகளும் உண்டாகும். ஈசனை வழிபடுபவர்களும், நற்சமய வாதிகளும் அதிகம் இருப்பார்கள் என்கிறார்.


"இன்றியமை யாதொரு இழிகுலத்தோர்
என உரைத்த பறையர்களும் பாக்கியம் பெற்று
நன்றெனவே வையகத்தில் நாளும் ஓங்க
நவிலொண்ணாப் புகழுடனே வாழப்போகும்
குண்றாதோர் முட்டையினில் இரெண்டு குஞ்சு
செனித்துவிடும் மிருகங்கள் வினோதம் காட்டும்
அன்றாகும் காலம் அந்தணர் கட்காகா
அறிகுறியாம் இவை எல்லாம் சின்னமாமே"

- சந்திர ரேகை -

இழிகுலத்தோர் என்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாக்கியம் பெற்றுச் சிறப்பாக புகழுடன் வையகத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சுகள் பிறப்பதுடன், மிருகங்களில் வினோதமான பிறப்புக்கள் உருவாகும் இந்தக் கலியுகமானது, அந்தண குலத்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் எல்லாமே கலியுகத்தின் அறிகுறிகளாவதுடன் சின்னமாகவும் விளங்கும் என்கிறார்.

இத்தகைய கலியுகத்தில், பாரத தேசத்தை யாரெல்லாம் ஆள்வார்கள் என்றும் கூட விவரமாய் குறித்திருக்கிறார். அதன் விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கலியுகமும், சந்திர ரேகையும்!

Author: தோழி / Labels: ,

சமீபத்தில் எனது புத்தக அலமாரியை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது...அநேகமாய் அழிந்து விட்ட நிலையில் இருந்த நூலொன்று கிடைத்தது. புத்தகத்தின் பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க முயற்சித்த போது, அது கோரக்க சித்தர் அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது. என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம் ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல். இன்றைக்கு அந்த நூல் முழுமையான வடிவில் கிடைக்கிறதா என தெரியவில்லை. விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின் பிறப்பு முதல் கடைசிவரையிலான நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர் தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில பாடல்களையும் அதன் தெளிவுகளையும் இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

கலியுகத்தின் தோற்றம்..

"யோகி பரமானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமதபேதம் மெத்த
பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால்விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவுலகில் கலியினுடை பான்மை கேளே"

- சந்திர ரேகை -

"கேளேநன் மனுக்கள் நூற்றுக் கொன்று
கொடியாகப் பிறந்திருந்தல் அரிதேயாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நரங்கிடுவர் மனிதர்களும் உயரம் கட்டை
வாளே முன்பின் வயது ஆண்டு நூறு
வழங்கிடுவேன் கலியுதிக்கும் இடத்தை - தென்பால்
சூளேமெய்க் கம்பல பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புன்னை மரத்தின் கீழ்ப்பிரமாதி ஆண்டு
ஆனசித்திரைவெள்ளி நவமிமூலம் கலிசெனிப்பே"

- சந்திர ரேகை -


பிரமாதி ஆண்டு, சித்திரை மாதம், வெள்ளிக் கிழமை, நவமி திதியுடன் மூல நட்சத்திரம் சேர்ந்த நாளில் ”கம்பல பட்டன் வைணவ தத்தன்” கொல்லையில் புன்னை மரத்தின் கீழ் யோகி பரமானந்த கலிபுருஷன் பிறந்தான் என்று சொல்லும் கோரக்கர் மேலும், கலியுகத்தின் தன்மை சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்...

கலியுகத்தில் சாதி மத பேதம் அதிகமாக இருப்பதுடன், சனத் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும், இருப்பார்கள்...., காமவெறி அதிகரித்து பெற்ற தாயைப் பெண்டாளும் மகனும் இருப்பதுடன், நல்லவர்கள் நூற்றுக்கு ஒருவர் பிறந்திருந்தால் அரிதாக இருக்கும் என்கிறார். அத்துடன் கலியுகம் வளரவளர மனிதர்களின் உயரம் குறைந்து கொண்டே போகும் என்றும் நூறுவயதுக்கு மேல் வாழ்பவர்கள் மிக அரிதாகிவிடுவர் என்கிறார்.

பதிவின் நீளம் கருதி, மிகுதியை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சுவகரண முத்திரை

Author: தோழி / Labels: ,

யோக முத்திரை வரிசையில் கடைசி முத்திரையான சுவகரண முத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.

இத்துடன் யோக முத்திரை தொடர் முற்றிற்று. அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோனி முத்திரை,,!, அபான முத்திரை..!

Author: தோழி / Labels: ,
யோக முத்திரைகள் வரிசையில் இன்றைய பதிவில் “யோனி முத்திரை” மற்றும் “அபான முத்திரை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

யோனி முத்திரை
யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.


அபான முத்திரை
அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.

நாளைய பதிவில் சுவகரண முத்திரை பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருவினி முத்திரை...!

Author: தோழி / Labels: ,

முத்திரைகள் பற்றிய இந்த தொடர் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது. கடந்த மூன்று தினங்களாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாராட்டி மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நேரமின்மையினால் தனித்தனியே பதில் அனுப்பிட இயலாததால், தயவு செய்து யாரும் தவறாக எண்ணிட வேண்டாம்.

மிக முக்கியமாக, பலரும் கேட்டுக் கொண்ட படி இந்த யோக முத்திரை பதிவுகளைத் தொடர்ந்து தேக முத்திரைகளைப் பற்றி தனியே விவரமாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் யோக முத்திரை வரிசையில் மூன்றாவதும், மிக முக்கியமானதுமான “திருவினி” முத்திரையைப் பற்றி பார்ப்போம்.தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில், திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

நாளைய பதிவில் “யோனி முத்திரை”, மற்றும் ”அபான முத்திரை” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மோகினி முத்திரை!..சோபினி முத்திரை!

Author: தோழி / Labels: ,

யோக முத்திரைகள் வரிசையில் இன்று “மோகினி முத்திரை” மற்றும் “சோபினி முத்திரை” பற்றி பார்ப்போம். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் தலா ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

மோகினி முத்திரை"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை
"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -


மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

நாளைய பதிவில் ”திருவினி முத்திரை” பற்றி விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோக முத்திரையில் விரல்கள்...

Author: தோழி / Labels: ,யோக முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிராதானமாக உள்ளது. தன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

"முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
முக்கியமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலால் நிற்கும்
பதிவாக அடுத்த விரல் தர்ச்சினையாமைந்தா
சித்தமுள்ள நடுவிரல்தான் மத்திமையாநிற்கும்
திறமான பவுத்திரந்தான் அனாமிகையாய்நிற்கும்
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டிகையாய்நிற்கும்
சுகமாக இதையறிந்து முத்திரையுஞ் செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

விரல்களின் மகிமையை முக்கியமாக சொல்கிறேன் நன்றாகக் கேளு என்று விரல்களின் மகிமையை கூறத் தொடங்குகிறார்...

பெருவிரலை ”அங்குட்டம்” என்றும், அதற்கு அடுத்த விரலை ”தர்ச்சினை” என்றும், நடுவிரலை ”மத்திமை” என்றும், பவுத்திர விரலை ”அனாமிகை” என்றும், சுண்டு விரலை ”கனுட்டிகை” என்றும்...இவற்றை அறிந்து முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.

கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.

அத்துடன் இவற்றை பிரம்ம முகூர்த்தத்தில், தூய, அமைதியான அறையினில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, உடலை தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால்கள் மீது தளர்வாய் வைத்து முத்திரை பிடித்து அதற்கான மந்திரங்களை மனதில் செபித்தல் வேண்டும்.

அத்துடன் இந்த முத்திரைகளை செய்ய தொடங்கும் போது...

"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி
பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டி
சுத்தமுடன் லாடவிழி கண்ணின் நேரே
தொழுது மனம் நினைத்தபடி சுத்தமாக
முக்தியுடன் வரங்கொடுக்க வேண்டுமென்று
மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சித்தி பெற செய்யும் முத்திரைகளுக்கு மூலாதாரமாய் உள்ள சிவாய குரு முத்திரையைச் சொல்கிறேன் கேள் புருவ மத்திக்கு சமீபமாக இருகரங்களையும் ஒன்றாகக் குவித்து கண்களை மூடிக் கொண்டு முக்தியுடன் வரங்கள் வேண்டும் என்று மனதால் மனோன்மணி தாயை வேண்டிக் கொண்டு அந்த ஆறு முத்திரைகளையும் செய்ய தொடங்க வெண்டும் என்று சொல்கிறார்.


இனி வரும் பதிவுகளில் மற்ற ஆறு முத்திரைகளையும், அவற்றை செய்யும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோக முத்திரை ஓர் தெளிவு!

Author: தோழி / Labels: ,

இந்தப் பூமியானது பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாகியது என்பதையும், அந்த பஞ்ச பூதங்களே மனித உடம்பாகவும் உள்ளது என்பதையும் முதன் முதலில் உலகிற்கு உரைத்தவர்கள் சித்தர்களே! . இதனையே அவர்கள் "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

மனித உடலானது ஒரு குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இந்த மூலங்களை உடம்பிலிருந்து வேறு படுத்த முடியாது. இந்த பஞ்சபூத கலவையின் விகித அளவுகள் மாறது பேணப்படுவதன் மூலமே யோகம் சித்திக்கும் என்று சொல்லும் சித்தர்கள். அந்த விகித அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே மனிதர்களுக்கு உடல் நலிவையும், நோயையும் உருவாக்குகின்றன என்கின்றனர்.

இந்த பஞ்ச பூத கலவையின் விகிதாசாரங்களை மாற்றம் அடையாது ஒரு சீரான சம நிலையில் வைத்திருக்க சித்தர்களால் அருளிய முறைகளில் ஒன்றுதான் முத்திரைகளாகும். இவற்றை இரண்டு வகைகளாக வகுத்துள்ளனர் ஒன்று ”யோக முத்திரைகள்” மற்றயது மருத்துவ முத்திரைகள் எனப்படும் ”தேக முத்திரைகள்”. இந்தத் தொடரில் நாங்கள் பார்க்கப் போவது யோக முத்திரைகள் பற்றியே...!

தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் யோக முத்திரைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பக்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்த பூரணமாய் விளங்கு முக்தி"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

யோக முத்திரைகளில் பல வகை இருந்தாலும் தனித்துவமான சிறந்த முத்திரைகள் ஆறு உள்ளன என்றும், இவற்றை தவறாது செய்பவர்களுக்கு பிறவித் துன்பம் நீங்கி வேதாந்த பூரணமாய் முக்தி நிலை கிட்டும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை வரிசை தவறாமல் பிரம்ம முகூர்த்தத்தில், ஒரு முத்திரைக்கு ஏழு நிமிடங்கள் வீதம் மொத்தமாக நாற்பத்தியிரண்டு நிமிடங்கள் செய்தல் வேண்டு என்கிறார். இந்த முத்திரைகளை செய்வதில் கை விரல்களே அதி முக்கியமானது என்று குறிப்பிடுகிறார்.

விரல்களின் மகிமையையும், முத்திரைகளை செய்வதன் நுட்பத்தினையும் நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உதவிட வேண்டுகிறேன்....!

Author: தோழி /

நண்பர்களே!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

எனது தாய் வழிப் பாட்டனார் தனது வாழ்நாள் சேகரிப்பாக, எனக்கு விட்டுச் சென்ற ஆயிரக் கணக்கான சித்தர்களின் நூல்கள் அழிவதில் இருந்து தடுக்கும் பொருட்டு அவற்றை மின்னூடகத்தில் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த வலைப் பூவினை துவங்கினேன். ஆனால் கடந்த எட்டு மாதங்களில் கிடைத்த ஆசிகளும், ஆலோசனைகளும், ஊக்கமும் என்னை உற்சாகத்தின் விளிம்பில் அமர்ந்து பதிவுகளை எழுதத் தூண்டியது என்பதுதான் உண்மை. இத்தனை தூரம் இந்த பதிவு சென்றடையும் என கனவிலும் நான் நினைத்தது இல்லை.

இந்த நிலையில் நண்பர் ஒருவர், எனது இந்தப் பதிவுகள் இன்னும் பல லட்சம் தமிழர்களை சென்றடைவது அவசியம், எனவே இந்த வலைப்பூவினை வாசிக்கும் நண்பர்களிடம் இந்த வலைப் பூ பற்றி மற்றவர்களை அறிமுகப் படுத்தக் கூறுங்கள் என கூறினார். மேலும் சக பதிவர்கள் இந்த வலைப் பூவினை தங்கள் பதிவில் தொடுப்பு கொடுப்பதன் மூலம் மேலும் பலருக்குப் போய்ச் சேர்ந்திட செய்யலாம் எனக் கூறினார். இது தொடர்பான நிரல் ஒன்றினையும் தந்திருக்கிறார். அதனை இத்துடன் இனைத்திருக்கிறேன்.

என்னோடும், என் சார்ந்த சில நூறு நண்பர்களோடும், இந்த பதிவின் தகவல்கள் முடங்கி விடுவதில் எனக்கும் விருப்பமில்லைதான்.....எனவே விருப்பம் உள்ள நண்பர்கள் தங்கள் பதிவில் அந்த நிரலை இனைப்பதன் மூலம் இந்த வலைப்பூ மேலும் பலருக்கும் சென்றடைய உதவிட வேண்டுகிறேன்.


கீழே பெட்டியில் இருக்கும் நிரலை நகலெடுத்து தங்கள் பதிவில் இனைத்திடலாம்.

code


என்றும் நட்புடன்

தோழி
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


விளைச்சலை பெருக்கும் சித்து!

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் விளைச்சலை அதிகரிக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார். இதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்கிறார்.

ஆமாப்பா நாயுருவி செடியை நோக்கி
அப்பனே ஸ்ரீம் என்று லட்ச மோதி
தாமடா காடுசெந்நெல் கரும்பு வாழை
தயவான கொடிக்காலுந் தென்னந்தோப்பும்
நாமதா ஐங்கோலக் கருவும் பூசி
வளமாகக் கலசத்தில் புதைத்தாயானால்
நாமடா இதுகளெல்லாம் மதிகமாகும்
நலமாக போகருட கடாட்சந் தானே "

- புலிப்பாணி -

நாயுருவிச் செடிக்கு ”ஸ்ரீம்” என்கிற மந்திரத்தினை ஒரு லட்சம் தடவைகள் ஓதி விட்டு அந்த செடிக்கு ”ஐங்கோலக் கரு*”வும் பூசி, அந்த செடியைப் பிடுங்கி ஒரு சுத்தமான பானைக்குள் வைத்து நன்றாக மூடி பின்னர் அதை காடு, செந்நெல் விளையும் வயல் , கரும்புத் தோட்டம், வாழைத் தோட்டம் போன்ற இடங்களில் புதைத்து வைத்தால் அங்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.இது தனது குருநாதர் போகர் அருளால் நடக்கும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

* ஐங்கோல கரு என்பது ஒரு வகையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் இருந்து தயாரிக்கப் படுவது. இது கருமையான நிறத்தில் கூழ்போல மெழுகு பதத்தில் இருக்கும். இது எல்லா நாட்டு மருந்து/சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவன் முக்தி என்றால்...!

Author: தோழி / Labels: ,

”சிவலோக பதவி”, “வைகுந்த பதவி”, “முக்தி அடைதல்” இவையெல்லாம் இறந்து போனவர்களை அடையாளப் படுத்தும் வார்த்தைகள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல....

முக்தி அடைதல் என்பதன் தூய தமிழ் வடிவம் ”விட்டு விடுதலையாதல்” அல்லது ”வீடு பேறடைதல்” என்பதேயாகும். யோகத்தில் உயர் நிலையான சமாதி நிலைக்கு அடுத்த நிலைதான் இந்த முக்தி நிலை. இதனை மீண்டும் பிறவா பேரின்ப நிலை என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இறப்பிற்குப் பின்னர் முக்தி அடைதல் என்பது வெறும் வாய் வார்த்தை எனச் சொல்லும் சித்தர்கள், வாழும் காலத்தில், இந்த உடல் இருக்கும் போதே அத்தகைய பிறவா பேரின்ப நிலையினை அடைந்திட வேண்டும் என்கின்றனர்.

இந்த முக்தி நிலையை அடைய ஒரே வழி யோக மார்க்கம் என்று சொல்லும் சித்தர்கள், இந்த யோக உறுப்புக்கள் எட்டு நிலைகளைக் கொண்டதாக கூறியிருக்கின்றனர். அவை முறையே கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பதாகும்.

கொங்கணவர் தனது வாத காவியத்தில் முக்தி பற்றி இவ்வாறு சொல்கிறார்.

காணப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
கைமுறையாய் நடக்கிறதே விபரமென்பார்
பூணப்பா யெந்தெந்தக் காரியங்கள் வந்தும்
புகழாகத் தயக்கம் வந்தும் பிரமமென்றும்
தோணப்பா நிரந்தரமும் வேதாந்தம் பார்த்துச்
சொன்னமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
ஆணப்பா நியமமென்ற பத்துஞ் சொன்னே
னறிந்திந்த விருபதையும் மறுட்டித்தேறே

- கொங்கணவர் -

குரு அருளிய யோக வழிமுறையின் படி நடப்பது தான் விரதம் என்பார்கள். இதன் வழி நிற்போர் எக்காரியம் வந்தாலும், எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும், அனுதினமும் தானே பிரம்மம் என்பதை உணர்ந்து தியானித்து வருவதே விரதம் ஆகும். இதுவே நியமம் என்ற பத்து வகை ஆகும். மற்றயது இயமம் என்று அழைக்கப்படும் பத்துவகை ஆகும். இயம,நியமமாகிய இந்த இருபதையும் முறையாக கடைப் பிடித்தாலேயே யோகத்தில் முன்னேற முடியும் என்று சொல்லும் இவர் தொடர்ந்து...

எறியிந்த விருபதையும் மநுட்டியாட்டால்
என்னசொல்வேன் சீவனில்லாச் சித்திரம் போலாம்
தேறியிந்த வடிப்படையை வைக்குமுன்னே
சிற்றெடுத்த சுழிகைக்கு மொக்குமொக்கும்
ஆறியிந்தக் காயசித்தி பண்ணுமுன்னே
யாயிரமாங் கலியுகத்தைக் கண்டதொக்கும்
மாறியிந்தச் சடத்தோடே முத்தி காணான்
மாண்டபின்பு முத்தியென்ற வாறுபோமே

- கொங்கணவர் -

இவ்விருபதையும் முறையாக கடை பிடிக்காதவன் ஜீவனில்லா சித்திரம் போலனவன். அத்தகைய செயல் முறையாக தொடங்கப்படும் எந்தக் காரியமும் பதியளவு நிறைவடைந்ததுக்கு சமானாகும் என்கிறார். அத்துடன் காய சித்தி செய்ய வெண்டும் என்று நினைத்தாலே ஆயிரம் கலியுகத்தை கண்டதற்க்கு சமனாகும் என்றும், இவ்வுடலுடன் இருக்கும் போதே முக்தி அடையாதவர்கள், இறந்த பின் முக்தி அடைவது என்பது வாயளவில் வார்த்தையாக ஆகிவிடும் என்கிறார்.

நாளைய பதிவில், வேளாண்மையில் விளைச்சலை பெருக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கிடைத்தற்கரிய ஓர் அரிய மின் நூல் !

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

தமிழகத்தில் சித்தர்களின் பாடல்கள், கிடைத்தவரையில் கிரமப் படுத்தப் பட்டு நூல்களாய் தொகுத்து இன்றைக்கு அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பொதுவில் வைக்கப்பட்ட சூழல் அமைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த பாடல்களை முன் வைத்த விவாதங்களும், ஆய்வுகளும் கூட இப்போது நடைபெற்று வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். சித்த மருத்துவம் முறைப் படுத்தப் பட்ட ஒரு நிறுவனமாகவும் தமிழகத்தில் சாத்தியமாகி இருப்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.

ஆனால், இங்கே இலங்கையில் சித்தர்களின் பாடல்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை. இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பாராமுகம் ஒரு புறமென்றால், எமது சித்தர்களின் வழி வந்தவர்கள் தங்கள் குருநாதரின் படைப்புகளை முடக்கி வைத்திருப்பது இன்னொரு கொடுமை.

இன்றைக்கும், கொழும்பு மாநகரில் பலரிடம் இத்தகைய அரிய பாடல்களின் சுவடிகள் இருப்பதை நான் அறிவேன். அவர்கள் யாரும் அந்த பாடல்களை பார்வையிடக் கூட மற்றவர்களை அனுமதிப்பதில்லை. தங்கள் குருநாதர் விரும்பும் போது இந்த பாடல்கள் வெளியே வரும் என கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு உண்டென்றாலும், அதுவரையில் அந்த ஏட்டுச் சுவடிகளை அவர்கள் பத்திரமாய் பராமரித்திட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

இந்த மின் நூலில் நான் பகிர்ந்திருக்கும் இருபத்தி மூன்று பாடல்களும் எனது தனிப்பட்ட முயற்சி மற்றும் தேடுதலில் சேகரித்தவை. யாழ் குடா நாட்டில் உள்ள கோவிலொன்றில் இருக்கும் சுவடிகளில் இருந்து பிரதியெடுக்கப் பட்டவை. இந்த பாடல்களை அருளிய சித்தர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

காலத்தே மறைந்து கொண்டிருக்கும் எமது சித்தர்களின் பாடல்களில் சிறு துளியாவது கிடைத்திட அருளிய எனது குருநாதரை வணங்கி இந்த நூலிலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்றும் நட்புடன்

தோழி

எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்வதன் மூலம், இந்த மின் நூலினை எவரும் பெற்றிடலாம். மின்னஞ்சல் முகவரி......

siththarkal@gmail.com

siththarkal@yahoo.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சொக்குப் பொடி தயாரிக்கும் முறை!

Author: தோழி / Labels: ,

இந்த பதிவின் விவரங்கள் அனைத்தும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே. இதன் சாத்தியங்கள் மற்றும் பலன்கள் ஆய்வுக்கும், விவாதங்களுக்கும் உட்பட்டவை. எனவே ஒரு தகவலாக மட்டுமே இந்த பதிவினை எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

சொக்குப் பொடி தயாரிக்கும் முறையை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி பலதிரட்டு சூத்திரம்" நூலில் இவ்வாறு விளக்கி இருக்கிறார்.

"பகரவே பொடியொன்று சொல்லக் கேளு
பாங்கான செருக்குடைய பாக்கை வாங்கி
திகழவே யப்பையுட மூலத் தோடு
சிறப்பான திலப்பனையுந் தாளி வேரும்
புகழவே பேயத்தி யால வேரும்
பொலிவான குப்பையுட மேனி வேரும்
அகலவே வேளைவேர் கழற்சி வேரும்
அப்பனே யூமத்தம் வித்துஞ் சேரே"

நல்ல செழிப்புள்ள பாக்குகளை வாங்கி , அத்துடன், அப்பைக் கோவைக் கிழங்கு , நிலப் பனங் கிழங்கு , தாளி வேர், பேயத்தி வேர், ஆலம் வேர், குப்பைமேனி வேர், வேளை வேர், கழற்சி வேர் ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து, இவைகளுடன்...

"சேரப்பா தலைமஞ்சங் கொடியுங் கூட்டி
பாராப்பா பித்தனுட சாம்பல் மண்டை
பாங்கான வூமை மண்டைப் பொடி சேர்த்து
தீரப்பா விதுவெல்லஞ் சமனாய்க் கூட்டி
திறமாக பொடிசெய்து வைத்துக் கொண்டு
கூரப்பா பேயத்தி யாலம் பாலும்
கூடவே தான் சேர்த்துப் பொடித்திடாயே"

தலைமஞ்சங் கொடி, பைத்தியம் பிடித்து இறந்து போனவரின் சாம்பல் மற்றும் மண்டை ஓடு, இறந்து போன ஊமையின் மண்டையோடு இவற்றை நன்கு தூளாக்கி முன் சொன்னவற்றுடன் சமனாக சேர்த்து, நன்றாக தூளாக்கி எடுத்துக் கொண்டு அதில் பேயத்திப் பால் , ஆலம்பால், இவைகளையும் சேர்த்து நன்றாக காயவைத்து தூளாக்கிக் வைத்துக் கொள்.

இதுவே சொக்குப் பொடி தயாரிக்கும் முறை!....இனி இந்த பதிவின் முதல் பத்தியினை மீண்டும் ஒரு முறை வாசித்து விடுங்கள்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சொக்குப் பொடி!

Author: தோழி / Labels: ,

காலத்தே மறைக்கப் பட்ட அல்லது மறந்து போய்விட்ட சித்தர்களின் தெளிவுகளை, மின் ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இன்று நாம் பார்க்க இருப்பது “சொக்குப் பொடி”.

இன்றைய தலை முறையினருக்கு ”சொக்குப் பொடி” பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே, அதன் காரண காரியங்களை அலசுவது இந்த பதிவின் நோக்கம் இல்லை....பேச்சு வழக்கிலும், திரைப் பட பாடல்களிலும், எதிர் பாலினத்தை கவர்ந்து தன் விருப்பப் படி ஆட்டுவிக்கும் சூட்சுமத்தின் குறியீடாக மட்டுமே இந்த வார்த்தை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இன்றைய நாகரீக உலகில் சொக்குப் பொடி என்கிற ஒன்றை எவரும் தாயாரிப்பதோ அல்லது அதை பயன் படுத்துவதோ நடைமுறை சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.அதே நேரத்தில் இத்தகைய வசிய முறைகள் தீய எண்ணமுடையோர் கைகளில் சேர்ந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் பொதுவில் வைக்கப் படாமல் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம்.

புலிப்பாணி சித்தர் இந்த சொக்குப் பொடியின் பயன்பாட்டினையும், விளைவையும் இவ்வாறு கூறுகிறார்.

பொடியெடுத்து தூவிவிட்டாற் சகல பேரும்
பொறிகலங்கி மதிமயங்கி கிடப்பார் பாரு
மடிபிடித்து தான்விரட்டி பொருள்கொண்டாலும்
தடியேடுத்தே யடித்தாலும் நினைவிராது
தயவாக சலமங்கே தெளிக்கு மட்டும்
வடிவெடுத்த போகருட கடாட்சத்தாலே
வெழுத்தினேன் புலிப்பாணி சொக்குத் தூளே"

தயாரித்துள்ள அந்தத் தூளை எடுத்து எவர் மேலாவது கொஞ்சம் தூவினால், அவர் மதி மயங்கிப் போவார். அந்த சமயத்தில் அவர்களிடம் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டாலும், அவர்களைப் பயங்கரமாக அடித்தாலும், அவர்களுக்கு எதுவும் நினைவிருக்காது. இந்த மதிமயக்கம் தெளிய வேண்டுமாயின் அவர்களின் மீது கொஞ்சம் தண்ணீரைத் தெளித்தால் சுயநினைவிற்க்கு வந்து விடுவார்கள். இந்த சொக்குப் பொடி பற்றி போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் இதை கூறுகிறேன் என்கிறார்.

ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா!, இத்தனை மகத்துவம் வாய்ந்த சொக்குப் பொடியினை தயாரிக்க முடியுமா?

நிச்சயமாக முடியும்....விவரங்கள் நாளைய பதிவில்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இஸ்லாமும் ரசமணியும்.!

Author: தோழி / Labels: , ,

ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் இஸ்லாமிய மதம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. “சோனகர்”,”துலுக்கர்” என கல்வெட்டுக்களிலும், மெய்கீர்த்திகளிலும் இஸ்லாமியர்கள் குறித்த பல விவரங்கள் காணக் கிடைக்கின்றன.

யாகோபு சித்தர் தனது நூலில் இரசமணி தயாரிக்கும் விதத்தினையும், அதனை பிரார்த்தனைக்கு பயன் படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் கூறியிருக்க்றார்.இந்த பதிவில் இரசமணியின் பயன் பாட்டினைப் பற்றி கூறிய விவரங்களை மட்டும் பார்ப்போம்.

"பார்த்தியே சூதமது கட்டிப் போகும்
பதிவான இருபத் தொரு மணிகள் செய்து
வாத்தியே தமரிட்டு நூலில் கோர்த்து
வடிவாக கைதனிலே வைத்துக் கொள்ளே
வைத்துமே பிசுமில்லா ரகுமானென்று
வகையான கலிமாவை ஓதித் தீரு
மைத்துமே நாளொன்றுக் கொன்று தானும்
நாடியே முப்போதும் தொழுது போற்று
பைத்துமே இப்படிக்கு தொழுதாயானால்
பதிவாக நபிமார்போ லிருக்க லாகும்"

- யாகோபுச் சித்தர் -

ரசமானது கட்டியாகும், அதை எடுத்து இருபத்திதோரு மணிகளாக உருட்டி ஓட்டை போட்டு நூலிலே கோர்த்து, கையிலே வைத்துக் கொண்டு "பிஸ்மில்லா ரகுமான்" என்று கலிமாவை ஓதிக்கொண்டிரு, இப்படியே ஒவ்வொரு நாளும் முப்பொழுதும் அதாவது மூன்று வேளையும் தொழுது வணங்கி வந்தால் நபிமார்கள் கூட்டத்தில் நீயும் ஒருவனாவாய்!.....என்கிறார்.

இரசமணியின் மகத்துவத்தை உணர்த்தும் இன்னொரு சான்றாக இதைக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : சித்தர்களின் போக்கில், பார்வையில் இஸ்லாமை அணுகியிருக்கிறேன், என்பதைத்தவிர இஸ்லாம் என்கிற மாபெரும் மதத்தின் நீள அகலங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லாதவை, எனவே மதம் குறித்த எனது தகவல்களில் பிழையிருப்பின் பொருத்தருள்க...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இஸ்லாமும், சித்தர்களும்!

Author: தோழி / Labels: , ,

சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அவர்கள் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பதைப் போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.

உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.

இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"

- யாகோபுச் சித்தர் -

எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.

இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இராமதேவர் என அழைக்கப் பட்டவரே பின்னர் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஆழ்ந்து தன்னை யாக்கோபு சித்தர் என அழைத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் அழகர் கோவிலில் சமாதி அடைந்ததாக தெரிகிறது.

அடுத்த பதிவில் இது தொடர்பான வேறு சில தகவல்களுடன், இஸ்லாத்தில் இரசமணி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

பின்குறிப்பு: எனது வாசிப்பனுபவத்தின் தெளிவுகளையே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவின் கருத்துக்கள் எவரது நம்பிக்கையினையும் புண்படுத்துவதாக இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை பகிரவும் தயாராக இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாகதோஷம்...நிரந்தர தீர்வு!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...

ஆவனி மாதத்து வளர்பிறை பஞ்சமியான,அதாவது அம்மாவாசை கழித்து ஐந்தாவது நாளான ”நாக பஞ்சமி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், அடுத்த சில நாட்களில் வர இருக்கும் ஆவனி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்....

இத்துடன் நாக தோஷத்திற்கான பரிகாரம் முற்றியது.

நாளைய பதிவில் இஸ்லாமும், சித்தர்களும் என்கிற தலைப்பில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாகபஞ்சமி !

Author: தோழி / Labels: ,

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி”

அதென்ன திதி?

பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பெளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.

இவை முறையே...

1. பிரதமை.
2. துவி்தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பெளர்ணமி.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப் படுகின்றன. அஷ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது நற்பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.

போகர் அருளிய பரிகார விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...