தாய்மை அடைதல்.!

Author: தோழி / Labels: , ,

தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.

இனி தாய்மை அடைதல் குறித்த சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.

நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர். மேலும் பெண்களிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தால் தாய்மை அடைவதில் தடையாகும் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

"இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை
எதுனால் மலபான சேதி கேளு கேளு
அசைந்திருக்கும் பேயினால் பூதத் தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்
பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்
பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்
துசங்கட்டிக் கல்வியினால் பூலவா துங்கித்
துலங்காமல் கெர்ப்பமில்லைசொல்லக் கேளே"

- அகத்தியர் -

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை., பேய், பூதம், அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவகளால் கர்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசுவெண்ணெய் பாக்களவு சேர்த்து மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வேப்பம் பூ, சீந்தில்தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை இரண்டு வேளையும், மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்பப்பூச்சி, தோடம், விடக்கிரம் ஆகியவையும் தீரும் என்கிறார். இதற்க்கும் எந்த பத்தியமும் சொல்லப்பட வில்லை.

இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அடுத்த பதிவில், தாய்மை அடைந்த பெண்களுக்காக சித்தர்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

சித்தர்கள் இதைப்பற்றியும் விரிவாக எழுதியிருப்பது ஆச்சர்யம்...

சேலம் தேவா said...

இப்பொழுது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் இதுதான்!ஆனால்,சித்தர்கள் எளியமுறையில் தீர்வு சொல்லியிருக்கிறார்கள்.இந்த மருந்துகள் கிடைக்குமா என்று தெரியவில்லை.

ஹேமா said...

சித்தவைத்தியம் சொல்லியிருக்கிறீர்கள் தோழி.இந்த வைத்தியங்களில் கர்ப்பம் தரித்துவிட்டால் ஏன் இலட்சக் கணக்கில்
செலவு செய்கிறார்கள் !

Lakshmanan said...

சித்தர்களின் மருத்துவத்தில் உள்ள சிறப்பே அதன் எளிமையான செலவில்லாத மருத்துவம்தான். சரி பெண்களின் குறைபாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஆண்களின் குறைபாடுகளுக்கும் தீர்வுகளை சொல்லியிருப்பார்கள் அதையும் பதிவிடுவீர்கள் என நம்புகிறேன்

thamizhannatpu said...

உபயோகமான கட்டுரை , நாகக்கள்ளி என்பது தற்பொழுது என்ன பெயரில் அழைக்கபடுகின்றது.
நன்றி

Riyadhraja said...

அன்பு சகோதரிக்கு வணக்கம்! வாழ்த்துக்கள்! என்னுடைய முதல் கடிதத்தில் "நீங்களும் சித்தர் என நினைக்க தோன்றுகிறது" என குறிப்பிட்டு இருந்தேன். காரணம், எதாவது கூறி பதிவின் சில கருத்தை முடிப்பதில்லை.
உதாரணம் "இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்" இந்த மாதிரி சூழ்நிலையில் இந்த பதிவை நீங்கள் தவிர்த்து வேரொரு பதிவை தந்து இருக்கலாமே! என் மனதில் பட்டதை எழுதி விட்டேன், தவறாக நினைக்க வேண்டாம்!

sathy said...

இதை தான் நானும் சொல்கிறேன் ரிவத்ராஜா. முழுமையான தகவல் இல்லாத இந்த வலை மனையை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது. நான் பல முறை என் வேண்டுதலை வைத்தாயிற்று. இவர்கள் கேட்ட பாடில்லை. கடை வாசலில் விற்கும் நூல்களில் வரும் தொடர் போன்றுதான் இந்த வலை பதிப்புகள் இருக்கின்றன.... இது கறிக்கு உதவாது

மு.சரவணக்குமார் said...

@sathyநண்பரே,

இந்த பதிவர் தரும் தகவல்கள் எல்லாம் புத்தகங்களில் இருந்து தருவதாக கூறிவிட்டார்.புத்தகத்தின் பெயரும் பாடல்களையும் இங்கே குறிப்பிட்டு விட்டார்.அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என புரியவில்லை.

மேலும் விரிவாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அந்த நூல்களை தேடிப் பிடித்து வாங்கி படித்து பயனடையலாம்தானே!

அருணையடி said...

எல்லோருக்கும் உதவாது என்பதுதான் உண்மை!
அது யாருக்குப் பயன்படும் என்பதை எழுதியவர்க்களே தீர்மானித்து வைத்திருக்கிறார்கள்

Post a Comment