உதக நீர் பற்றிய அறிமுகத்தையும், விளக்கத்தையும் முந்தைய பதிவில் பார்த்தோம். இனி உதக நீரின் வகைகளையும், அவற்றை கண்டறிவது மற்றும் பயன்பாடுகளை கவனிப்போம்.
சாணவேதி உதகம்
வெள்ளையாய் கரு நீர் போல நுரைத்து பிசுபிசுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு வைத்தால் மூன்றே முக்கால் நாழிகைக்குள் நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கு உண்டான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் அரிதார தூளை சேர்க்க, திரவம் சிறப்பு நிறமாக மாறுவதுடன், அதிலிருந்து சவ்வாது மணம் வீசுமாம். இதுவே ”சாணவேதி” உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பூசணிக்காயில் சிறு துளை இட்டு அதில் சுத்தி செய்த இரசத்தினை ஊற்றி, அதை குதிரை வால் முடியில் கட்டி, உதக நீரில் வைக்க மூன்றே முக்கால் நாழிகைக்குள் பூசணிக்காய் கல்லாகும். இதை தூளாக்க ரசமானது இறுகி மணி போலாகி இருக்கும். இந்த மணியை வாயிலிட கேவுனமுன்டாகும். மேலும் இந்த பூசணித்தூளை பண எடை அளவு எடுத்து தேனில் கலந்து உண்டுவர ஆயுள் அதிகரிக்கும் என்றும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருநாள்வேதி உதகம்
புகையீரல் கழுவிய நீர் போல் பிசுபிசுப்பான இந்த நீரை, இதற்கு உண்டான* மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்து, குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் பெருங்காயத் தூளை போட்டு நுகர்ந்தால் பெருங்காயத்தின் மணம் அற்றுவிடும். இதுவே ”ஒருநாள்வேதி” உதகம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த ஒருநாள்வேதி உதக நீரை வில்வக் குடுகையில் எடுத்து அதில் மூன்று கழஞ்சு சுத்தி செய்த ரசம் விட்டு ஒருநாள் முழுவதும் வைத்திட இரசம் வெண்ணை போல ஆகும். இந்த இரசத்தை ரசமணியாகக் கட்ட அதுவே கேவுன ரசமணி ஆகும் என்றும் கூறி உள்ளனர்.
இருநாள் வேதி உதகம்
இது சாணித் தண்ணீர் போல பிசுபிசுப்பாக இருக்குமாம். இதற்கு உண்டான* மந்திரத்தைச் சொல்லி சாபநிவர்த்தி செய்த பின்னர், குதிரைவால் முடியினால் முடிந்த பழைய தேங்காய் குடுக்கையையில் சேகரிக்க வேண்டும். துளியளவு நீரில் மாம்பழச்சாறு விட்டுக் கலக்கி இரண்டு நாள் வைக்க, மாம்பழ வாடை இல்லாதிருப்பின் அதுவே "இருநாள் வேதி உதகம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
வில்வக்குடுக்கையில் இந்த உதக நீரை எடுத்து அதில் சிறிது வெள்ளித் தூளை போட்டு இரண்டு நாள் கழித்து எடுக்க மணல் போல ஆகும். இதை கல்வத்திலிட்டு அரைத்து புடமிட்டு சுன்னமாக்கி நெய்யில் குழைத்து உண்ண காய சித்தி உண்டாகும். என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திரி நாள் வேதி உதகம்
கரிசல் காட்டு நீர் போல குழ குழப்பாயிருக்கும் இந்த நீரில், ஒரு குச்சியினை மூன்று நாள் போட்டு வைக்க உதக நீரில் நனைந்த பகுதி கல்லாகிவிடும். இதற்கு உண்டான* மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்து, பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த செம்பினால் ஆன குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் சந்தனத் தூளை போட்டு நுகர்ந்து பார்த்தால் மணமற்றுவிடும். இதன் மூலம் ”திரி நாள் வேதி” உதகநீரினை அறியலாம். இந்த வகை உதக நீரின் உதவியுடன் பலவகை பட்பங்கள், செந்தூரங்கள் செய்யலாமாம்.
பஞ்ச வேதி உதகம்.
இது மஞ்சள் கலக்கிய நீர் போல இருக்கும். இதில் ஒரு குச்சியினை ஐந்து நாள் போட்டு வைத்திட உதக நீரில் நனைந்த பகுதி கல்லாகிவிடும்.இதற்கு உண்டான* மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த இரும்புத் தகட்டுக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். இதில் சிறிதளவு நீரை எடுத்து ஈர வெங்காயத்தை அரைத்துக் கலக்கி நுகர வெங்காய மணம் இல்லாதிருக்குமாம். இதன் மூலம் ”பஞ்ச வேதி” உதகநீரினை அறியலாம். இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.
பதிவின் நீளம் கருதி மற்ற ஐந்து வகைகளை நாளைய பதிவில் பார்ப்போம்....!
* சாப நிவர்த்திக்கான மந்திரங்கள் தனித்துவமானவை, பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி அவற்றை இங்கே பகிரவில்லை.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
அருமை அருமை அருமையிலும் அருமை சுப்பரா எழுதுங்க நண்பா
நன்றி , தங்களின் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்
அருமையான பதிவு.
சித்தர்களை பற்றி எழுதும் நீங்களும் ஒரு சித்தர்தான்.
is it possible?
what is saaba nivarthi. please explain.
Post a Comment