நாகதோஷம் !

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய சோதிடம் குறித்த தெளிவுகளை முந்தைய பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். தவற விட்டவர்கள் இந்த இனைப்பில் சென்று வாசிக்கலாம். அந்த பதிவுகளின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் ”நாக தோஷம்” அல்லது ”சர்ப்ப தோஷம்” பற்றி பார்ப்போம்.

சோதிடத்தில், ராகு-கேது கிரகங்களின் பார்வையினால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விளைவுகளையுமே நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கின்றனர். சோதிடவியலில் நாகதோஷம் கடுமையானது அல்லது துயரம் மிகுந்த ஒன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடும் உத்திகளைத்தான் பொதுவில் பரிகாரம் என்கின்றனர்.

போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....

பிறப்பினால் ஒருவரின் ஜாதக அமைப்பில் ராகு, கேது கிரகங்கள், சில இடங்களில் அமைவதால் நாகதோஷம் ஏற்படுவது ஒருவகை என்றும், பாம்பு புற்றினை இடித்தல் அல்லது பாம்புகளை கொல்வது போன்ற பாவச் செயல்களினால் நாகதோஷம் ஏற்படுவது இன்னொரு வகை என்கிறார்.

போகர் பாம்புகளை “உயிர் விழுங்கிகள்” என்கிறார். உறுப்புகளற்ற இந்த உயிரினம், ஒன்றுதான் இரையினை உயிருடன் விழுங்குவதாகவும், தினம் தினம் இவற்றில் உயிர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இருளுக்குள் அடைந்துவாழும் பாம்பின் பிறப்பு என்பது ஒரு வகையான சாபம் பெற்ற பிறப்பு என்றும், இவற்றைக் கொல்வதால் அந்த சாபம் கொல்பவரை தொற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறார்.

பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார். கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.

இத்தகைய நாக தோஷம் உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாரிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் உருவாகும். முறையான பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தடைகள் நீங்கி சுக வாழ்வு வாழலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதென்ன பரிகாரம்? விவரங்கள் நாளைய பதிவில்.....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஈழத்து சித்தர்களும், எனது ஆதங்கமும்.!

Author: தோழி / Labels:

மிகுந்த தயக்கத்துடனே இந்த பதிவினை துவங்குகிறேன். எவரையும் குறை சொல்வது எனது நோக்கமன்று. பல நாட்களாய் மனதில் ஊறிக் கிடந்த ஒரு ஆதங்கத்தினை பொதுவில் வைப்பதனால் ஏதேனும் ஒரு நல்ல தீர்வு விளைந்து விடாதா!, என்கிற தவிப்பும் எதிர்பார்ப்புமே இந்த பதிவு....!

ஈழத்து சித்தர் பரம்பரை பற்றி முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தவற விட்டவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசிக்கலாம். தமிழகத்தில் வாழ்ந்திருந்த சித்தர்களைப் போலவே, எமது ஈழத்து சித்தர்களும் மருத்துவ, ரசவாத, சோதிட , மந்திரிக, விடயங்களில் சிறந்து விளங்கியதற்கான பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

தமிழகத்து சித்தர்களைப் போல பெரிய அளவிலான பின்தொடர்தல்கள் இல்லாமையால், ஈழத்து சித்தர்கள் குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளியில் தெரியவோ அல்லது பிரபலமாகவோ இல்லை.ஈழத்துச் சித்தர்களின் நூல்கள் பெரும்பாலும் அவரது சீடர்களுடன் முடங்கிவிட்டதும் கூட இதற்கு ஒரு காரணம். தற்போதும் அத்தகைய நூல்களின் சுவடிகள் இங்கே பலரிடம் இருந்தாலும், அவர்கள் மனமுவந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

என்னுடைய சொந்த அனுபவத்தில், அவர்களிடம் இருக்கும் சித்தர் பாடல்களை பிரதி எடுக்க அனுமதிக்குமாறு, அல்லது படிப்பதற்கென அனுமதி கேட்டு பலமுறை அணுகியும் கூட அவர்கள் கூறும் சமாளிப்பு, ”சித்தர்கள் இந்த நூல்கள் எப்போது வெளியில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அன்று இவை தானாகவே வெளிப்படும்" என்கிறார்கள். தொடர்ச்சியான எனது தேடலில் இதுவரையில் வெறும் இருபத்தி மூன்று பாடல்களை மட்டுமே சேகரிக்க முடிந்திருக்கிறது.

அந்த பாடல்களின் கருத்துச் செறிவும், மொழியாளுமையும் ஈழத்து சித்தர்களின் அறிவையும், தெளிவையும் பறைசாற்றுவதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்று கொழும்பில் வசிக்கும் பலரிடம் ஈழத்து சித்தர்கள் பற்றிய சுவடிகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை வெளியிடவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ மறுப்பது ஈழத்து சித்தர் இலக்கியத்தின் மிகப்பெரிய சாபக் கேடாகும்.

ஈழத்து சித்தர்கள் பற்றி இங்கு வெளியான நூல்களும் மிக குறைவானவை. இரண்டு மூன்று நூல்களே வெளிவந்துள்ளது. அந்த நூலாசிரியர்கள் கூட ஈழத்து சித்தர் பாடல்கள் பற்றிய தகவல்களை தங்களின் நூல்களில் வழங்கிட வில்லை. ஒரு வேளை எனக்கு கிடைத்த வேதனையான அனுபவங்கள் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

இந்த பதிவின் மூலம் எனது தாழ்மையான வேண்டுகோள், ஈழத்து சித்தர் பாடல்களை தங்களிடம் வைத்திருப்போர், அல்லது அது பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள், ஆர்வமுடைய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்பதே....

என்னிடம் இருக்கும் ஈழத்து சித்தர் பாடல்கள் இரண்டை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்..

"பற்றுமர்றொன்றி பற்றுடன் பற்றிநிப்பார்
பெற்றபேறென பேணிப் பெற்றியனாவர்
கற்றுணர்கலை ஞானம்காதலாய்கண்டுணர்வர்
செற்றுவாழ்வர் சிவனை நினைத்தாலே"

"சிவாயிரெண்டு குருதேவரின் ஞானக்கண்களாகி
நயனதீட்சை செய்திட "ய" குருவிலடங்கிட
"நம" இரெண்டும் திருவடி தீட்சையாலொடுங்கும்
"சிவாயநம" என்னும் திவ்ய மந்திரத்தாலே"

பின் குறிப்பு : என்னிடத்தில் இருக்கும் இருபத்தி மூன்று பாடல்களையும் விரைவில் மின் நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களும், மகளிர் நலமும்..! நிறைவுப் பகுதி...

Author: தோழி / Labels:

கடந்த ஆறு தினங்களில் மகளிர் உடல்நலம் தொடர்பாக, சித்தர்கள் அருளிய சில தெளிவுகள் மற்றும் தீர்வுகளை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. குருவருளினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. இன்று, இந்த தொடரை நிறைவு செய்திடும் வகையில் பெண்களுக்கான பொதுவான சில உடல் நல குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

உடல் பேரழகு பெற...

ஒரு ஆழாக்கு பசும்பாலில் சிறிது குங்கும பூ சேர்த்து காய்ச்சி, வெது வெதுப்பான சூட்டில் ஒரு தேகரண்டி தேன் சேர்த்து, தொடர்ந்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் குடித்து வந்தால் மேனி பொலிவாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

தாய்ப் பால் சுரக்க...

சிறு தேக்கு, அதி மதுரம் , திப்பிலி இவற்றை காடியில் அரைத்து மார்பகங்களில் பூச, மகளிருக்கு பால் சுரக்கும் என்கிறார் அகத்தியர் தனது வைத்திய சிந்தாமணியில்.

உடல் இளைக்க...

போகர் தனது ”வைத்தியம் 700” என்கிற நூலில், நான்கு அவுன்சு நீரில் ஒரு அவுன்சு தேன் விட்டு கலந்து அருந்தி வர உடல் பருமன் குறையும் என்கிறார்.

கருந்தேமலுக்கு...

காலையும் மாலையும் வெந்நீரால் தேமல் உள்ள இடத்தை நன்கு சுத்தம் செய்து, அதன் மேல் கற்பூர வள்ளி இலை, திருநீற்றுப் பச்சை இலை இரண்டையும் கசக்கி நன்றாக தேய்த்து வர மூன்றே நாளில் குணமாகும் என்கிறார் தேரையர்.

நகச் சுற்றிற்கு...

வெற்றிலைக் கொழுந்தில் சுண்ணாம்பு தடவி மைபோல அரைத்து நகச் சுற்று வந்த விரலில் வைத்துக் கட்ட குணமாகும் என்கிறார் கோரக்கர்.

பித்த வெடிப்பு...

அகத்திக் கீரையை வாரம் இருமுறை சமைத்து உண்பவர்களுக்கு உடலில் பித்தம் சமநிலைப் படும் என்றும் , இதனால் பித்தவெடிப்பு அணுகாது என்று தேரையர், தனது தேரையர் வைத்திய சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவன் வேம்பு வேரை எடுத்து பால் விட்டரைத்து பாலில் கலக்கு உண்டுவந்தால் பித்த வெடிப்பு நீங்கும். அத்துடன் மேனி அழகும் உண்டாகும்.

வேப்பங் கொழுந்தை மஞ்சள் கிழங்குடன் சேர்த்து விளக்கெண்ணை விட்டரைத்து பித்த வெடிப்புகளில் பூசிவர பித்தவெடிப்பு குணமாகும்.

கட்டிகள் உடைய...

சப்பாத்திப்பூவை அம்மியில் அரைத்து கட்டிகளின் மேல் பூசினால் கட்டிகள் உடையும். ஒரு தடவை பூசினாலே போதும் என்கிறார் புலிப்பாணி.

உடலில் வேண்டாத முடிகளை அகற்ற...

அரிதாரம் ஒரு பங்கு எடுத்து அத்துடன் அரைப்பங்கு சுண்ணாம்பு சேர்த்து நன்கு அரைத்து, வேண்டாத முடிகள் உள்ள பகுதியில் பூசி 15 - 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டாத முடிகள் உதிர்ந்து விடுமாம் என்கிறார் தேரையர்.

சேற்றுப் புண்ணிற்கு...

கடுக்காயையும் மஞ்சளையும் சேர்த்து நன்கரைத்து சேற்று புண் உள்ள இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார் புலிப்பாணி.

சொறி சிரங்கிற்கு...

நன்றாக முற்றிய பூவரசு மரத்தின் பட்டையை எடுத்து நன்கு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பின்னர் அதை சொறி சிரங்கின் மேல் பூச இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்கிறார் அகத்தியர்.

இந்த அளவில் மகளிர் நலம் குறித்த பதிவுகளை இடை நிறுத்தி பிரிதொறு சந்தர்ப்பத்தில் தொடர்கிறேன்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்....சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவறையில் குழந்தையின் வளர்ச்சி!

Author: தோழி / Labels: ,

நேற்றைய பதிவினை குறித்து, மின்னஞ்சல் வாயிலாக பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வலைப் பதிவானது எனது முயற்சி என்பதை விட, மேலான குருவின் சித்தமாகவே கருதுகிறேன். அவரின் அன்பினாலும், ஆசியாலுமே இதெல்லாம் சாத்தியமாகிறது.

அகத்தியர் தனது ”அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில், பாடல் எண் 23-29 ல், கருவுற்ற தினத்திலிருந்து பத்து மாதம் வரையிலான குழந்தையின் வளர்ச்சியினைப் பற்றி தெளிவாக கூறியிருக்கின்றார். இன்றைய அலோபதி மருத்துவம் பல்வேறு ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கூறியதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்திய மாமுனிவர் தனது ஏழு பாடல்களில் உரைத்திருக்கிறார்.

இந்த பூவுலகில் மானிடர்கள் பிறக்கும் வழியை கூறுகிறேன் கேள் என ஆரம்பித்து பின் வருமாறு கூறுகிறார்....

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால் பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று வளரத் துவங்கி இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார்.

முதல் மாதத்தில் முளை போல தோன்றி பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகும். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகும், மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகி நான்காவது மாதத்தில் மூக்கு உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காத்து உண்டாகும் என்கிறார்.

ஆறாவது மாதத்தில் காதுடன் மூக்கும் நன்கு வளந்திருக்கும். ஏழாவது மாதத்தில் மல சலங்கள் வெளி வருவதற்கான துவாரம் உண்டாகும். இந்த சமயத்தில்தான் மூளையும் உண்டாகும். அம்மாதத்திலேயே நரம்புகள், குடல்கள், தொப்புள், கை கால்கள் உண்டாகும். எட்டாவது மாதத்தில் தலை ரோமம் வளரும் , உடலுக்கு பலம் உண்டாகும்.

கருவிற்கு தேவையான உணவுச்சத்துக்கள் அதன் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கும். ஒன்பதாவது மாதத்திலேயே தன்னை அறியும் அறிவு உண்டாகும். அத்துடன் கருவைச் சுமக்கும் தாயினால் உள்ளிருக்கும் சிசுவிட்கும் நோய் உண்டாகும். இதனால் தன் உயிரை நினைத்து தவமிருக்கும் நிலையில் கைகள் இரண்டையும் அருள் வேண்டி தொழும்.

பத்தாவது மாதத்தில் அபான வாயுவின் உந்துதலால் சிசு வளர பாதுகாப்பாக இருந்த பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு தாயின் வயிற்றிலிருந்து தலை கீழாக இவ்வுலகில் பிறக்கும். பிறந்ததும் திகைத்து, நொந்து அயர்ந்து தூங்குவது போல தோன்றும் இதுவே மானிட பிறப்பின் ரகசியமும் பத்துமாத வளர்ச்சியும் ஆகும் என்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா....!

அடுத்த பதிவில் பெண்களுக்கான பொதுவான சில முக்கிய உடல் நல குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா?....கண்டறியும் முறை!

Author: தோழி / Labels: , ,

காலத்தே மறைந்து போக இருந்த, அல்லது பலரும் மறந்து விட்ட, இம்மாதிரியான அரிய தகவல்களை தேடித்திரட்டி, இங்கே பகிர்வதில் கிடைக்கும் பெருமிதமும், மனநிறைவும் வார்த்தைகளால் விளக்கிட இயலாத ஒன்று.

இன்றைய அறிவியல் வளர்ச்சியினால், ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிகின்றனர்.அது கூட கருவானது ஓரளவிற்கு வளர்ந்த பிறகே கண்டறிய இயலும். ஆனால் எந்த வித அறிவியல் வளர்ச்சியோ வசதியோ இல்லாத ஒரு கால கட்டத்தில், கரு உண்டான கணத்தில் குழந்தையின் பாலினத்தை துல்லியமாய் கணிக்கும் முறையினை அருளியிருக்கின்றனர் சித்தர்கள்.

"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை"

- அகத்தியர் -

கரு உண்டான காலத்தில் நாசியிலே ஓடுகின்ற சரம் அல்லது மூச்சுக் காற்றினை வைத்து கெர்ப்பத்தில் உதித்தது ஆணா , பெண்ணா என்பதை அறிந்திடும் முறையினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்....

பிராண வாயு என்னும் மூச்சுக்காற்று வலது நாசியில் ஓடினால் கெர்ப்பத்திலிருப்பது பெண் குழந்தை எனவும், மூச்சுக் காற்றானது இடது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூச்சு காற்றோட்டமானது சீராக முழுமையாக இல்லாதிருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்கிறார்.

புலிப்பாணி சித்தர் தன்னுடைய பாடல் ஒன்றில் குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சித்திரை பத்தாந் தேதியில் தூரம்
சென்றிடிலது முதற்பத்து வரையில்
பத்தாகு மதிலேழு சேரில் பதினேழ் தேதியில்
பகர்தறி தைமாதம் பதினேழ் தேதியிலே
ஆமாப்பா போகருட கடாட்சத்தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே"

- புலிப்பாணி -

சித்திரை மாதம் பத்தாம் தேதியில் வீட்டுவிலக்கு நின்று விட்டால் அது முதல் பத்து மாதங்களை கணக்கு வைத்தால் தை மாதம் பத்து மாதமாகும், அந்த மாதத்தில் எழு நாட்களை சேர்த்துக் கொண்டால் தைமாதம் பதினேழாம் திகதி பிரசவிப்பாள்.

சித்திரை மாதம் பதினைந்து தேதிக்கு முன்னதாக மாதவிலக்கு நிற்கிறவர்களுக்கு பத்து மாதக் கணக்காகும்.

சித்திரை பதினைந்தாம் தேதிக்கு மேல் மாத விலக்கு நிற்கிறவர்களுக்கு பதினோரு மாதம் என்கின்ற கணக்கில் பார்க்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

கருவுற்ற காலத்தில், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி சித்தர்கள் அருளியதை அடுத்த பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தாய்மைக்கால பராமரிப்பு.!

Author: தோழி / Labels: , ,

தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.

"பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"

- அகத்தியர் -

தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.

மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.

நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.

எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.

அடுத்த பதிவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் முறையினையும், குழந்தை பிறக்கும் தேதியை கணிப்பதையும் காணலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தாய்மை அடைதல்.!

Author: தோழி / Labels: , ,

தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.

இனி தாய்மை அடைதல் குறித்த சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.

நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர். மேலும் பெண்களிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தால் தாய்மை அடைவதில் தடையாகும் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

"இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை
எதுனால் மலபான சேதி கேளு கேளு
அசைந்திருக்கும் பேயினால் பூதத் தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்
பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்
பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்
துசங்கட்டிக் கல்வியினால் பூலவா துங்கித்
துலங்காமல் கெர்ப்பமில்லைசொல்லக் கேளே"

- அகத்தியர் -

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை., பேய், பூதம், அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவகளால் கர்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசுவெண்ணெய் பாக்களவு சேர்த்து மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வேப்பம் பூ, சீந்தில்தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை இரண்டு வேளையும், மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்பப்பூச்சி, தோடம், விடக்கிரம் ஆகியவையும் தீரும் என்கிறார். இதற்க்கும் எந்த பத்தியமும் சொல்லப்பட வில்லை.

இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அடுத்த பதிவில், தாய்மை அடைந்த பெண்களுக்காக சித்தர்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாதவிலக்கு... பிரச்சினைகளும் தீர்வுகளும்.!

Author: தோழி / Labels:


பெண்களிடம் இருந்து, எனக்கு வரும் மின்னஞ்சல்களில் பலரும் இந்த பிரச்சினை குறித்தான ஆலோசனைகளைக் கேட்டிருந்தனர். அவர்களுக்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறேன்.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது பெண்களின் உடற்கூறியலில் தவிர்க்க இயலாதது. இது தாய்மையின் அம்சம் என்றாலும் பெரும்பாலான பெண்களுக்கு அது வலியும்,துயரும் நிறைந்த அனுபவமே! இந்த கால கட்டத்தில்தான் பெண்கள் உடலியல் மற்றும் மனவியல் ரீதியாக வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என்பதே உண்மை.

முந்தைய காலங்களில் மாதவிலக்கு சமயத்தில் எந்த வேலைகளையும் செய்ய விடாது பெண்களுக்கு பூரண ஒய்வு கொடுப்பார்கள். இதை மூடநம்பிக்கை அல்லது பெண்களுக்கு எதிரான அநீதி என்கிற விமர்சனம் இருந்தாலும் கூட, உடலியல் ரீதியாக இந்த ஓய்வு தரும் நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய அவசர உலகத்தின் பரபரப்பான வாழ்க்கைச் சூழனினால், பெண்கள் சந்திக்கும் தலையாய பிரச்சினை மாதவிலக்கு தடைப்படுதல் அல்லது சுழற்சி காலம் தள்ளி போதல். இந்த தடைபடுதல் என்பது சிலருக்கு மாதக் கணக்கில் கூட தள்ளிப் போகலாம்.இது தவிர கூடுதல் உதிரப் போக்கும் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சினை.

மாதவிலக்கு காலங்களில் சரியான ஓய்வு இல்லாவிடில், மாதவிடாய் தடைப்படுதலும், மகப்பேறு காலங்களில் சுகப்பிரசவமின்மையுமாகும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கான சில தீர்வுகளையும் சித்தர்கள் அருளியிருக்கின்றனர்.

மாதவிலக்கு தடைப்படுதல் அல்லது தள்ளி போகுதல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள்.....மாவிலங்கம் பட்டை, உள்ளி , மிளகு இவைகளை சம அளவு எடுத்து நன்கு அரைத்து தினமும் காலையில் ஒரு பாக்கு அளவு மூன்று நாள் சாப்பிட மாதவிடாய் உண்டாகும்.

கொடிவேலி இலையைப் பசும்பாலில் வறுத்தெடுத்து அதனுடன் கொட்டைப்பாக்கு , குன்றிமணி இவற்றை சேர்த்தரைத்து புனைக் காய் அளவாக எடுத்து அதற்க்கு சம எடை அளவில் சர்க்கரை சேர்த்து மூன்று நாள் சாப்பிட மாதவிலக்கு ஏற்படும்.

மாதவிலக்கு வாரக்கணக்கில் நீடித்தல் அல்லது கூடுதல் உதிரப் போக்கினை கட்டுப் படுத்த அகத்தியர் கூறும் சுலப மருந்து....

மான்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து வெய்யிலில் நன்கு உலர்த்தி, தூளாக்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், மூன்று தினங்கள் காலை,மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை, தேனில் குழைத்து சாப்பிட மாதவிலக்கு நிற்பதுடன், உதிரப் போக்கும் குறையுமாம்.

மாத விலக்கு நாட்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி மற்றும் கூடுதல் உதிரப் போக்கினை கட்டுப் படுத்த "பிரண்டை உப்பை" ரெண்டு குன்றி மணியளவு எடுத்து வெண்ணெய்யில் குழைத்து ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்ண குணமாகுமாம்.இதை மாத விலக்கு உள்ள நாட்களில் தினமும் மூன்று வேளையும் உண்ணலாம் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் ”தாய்மை” அடைதல் பற்றிய சித்தர்களின் குறிப்பினை பகிர்ந்து கொள்கிறேன்...

காத்திருங்கள்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களும்... பெண்களுக்கான தீர்வுகளும்.!

Author: தோழி / Labels:

சித்தர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்கிற கருத்தினை ”வாலைபூசை” பதிவுகள் ஓரளவிற்கு மாற்றியிருக்கும் என நம்புகிறேன். பெண்களை அழகியல் சார்ந்த ஒரு போகப் பொருளாய் பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தின் எண்ணப் பாங்கினையே சித்தர்கள் சாடினர் என்பதை சித்தர்களின் பாடல்களை ஆழ்ந்து நோக்கும் எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

சித்தர்கள் பெண்களுக்காக உடலியல் ரீதியான பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அருளியிருக்கின்றனர். அவற்றை தொகுக்கும் சிறு முயற்சியாக இனி வரும் பதிவுகள் அமையும்.

முகப்பரு

பருவ வயதை எட்டிய அனைவருக்குமான கவலைகள் இந்த பரு பற்றியதாகவே இருக்கும். அலோபதி மருத்துவ முறை சார்ந்த பல தீர்வுகள் இருந்தாலும் அவை சருமத்தை பாதிப்பதுடன், செலவு கூடியதும் ஆகும்.பொதுவில் எண்ணைபசையான சருமம் கொண்டவர்களே பருவினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட சித்தர்கள் அருளிய முறைகளைப் பார்போம்.

வேப்பங் கொழுந்தை, மஞ்சள் கிழங்குடன் சேர்த்து சிறிது நீர்விட்டு மைப்போல அரைத்து முகப்பரு இருக்கும் இடங்களில் பூசி, உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவர முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறையும்.

அம்மான் பச்சரிசி செடியின் பாலை முகப்பரு இருக்கும் இடங்களில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவர முகப்பரு மறையும். இதை யார் காணாதவாறு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சந்தன கட்டையை அரைத்து முகத்தில் தழும்புகள் உள்ள இடங்களில் பூசி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர தழும்புகள் மறையும்.

அடுத்த பதிவில் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களும்... வைணவமும்.!

Author: தோழி / Labels: , ,

சில தினங்களுக்கு முன்னர் வந்த மின்னஞ்சலில், சித்தர்கள் வைணவம் பற்றி ஏதேனும் கூறியிருக்கிறார்களா என்றும் வினவியிருந்தார். அவருக்கான பதிலை மின்னஞ்சலில் அனுப்புவதைக் காட்டிலும் இங்கே பதிவாக பகிர்வதால் தகவல்கள் பலருக்கும் போய் சேரும் என்பதால் இந்த பதிவு.

சித்தர்கள் சிவமயமாய் வாழ்ந்திருந்தாலும், வைணவ தெய்வங்களான மஹாவிஷ்ணு, இராமர் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றனர். சிவவாக்கியர் பின் வரும் பாடலில் ராமநாமத்தின் மகத்துவத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”

ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்கவேண்டிய எல்லாப் பலன்களும் இராம நாம உச்சரிப்பினால் மட்டுமே கிடைத்து விடும் அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சிவவாக்கியர்.

மேலும் அவர் ராம நாம மகிமையை இவ்வாறு உரைக்கிறார்..

"சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே".

அகத்தியரும் விஷ்ணு மோகினி வேடம் பூண்டதை குறித்து இவ்வாறு பாடியுள்ளார்...

"பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்"


"ஓம் நாராயணா என செபிப்போர் நமனையும் வெல்வர்" என்று திருமூலர் உரைக்கிறார்.

இதுபோல வேறு சில சித்தர்களும் திருமாலின் பெருமையையும், அவர் அவதார சிறப்புக்களையும் பாடியுள்ளனர்.

"சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே"


இதில் இருந்து சித்தர்கள் சிவனை தங்களின் பிரதான தெய்வமாக போற்றி இருந்தாலும், வைணவ தெய்வங்களைப் பற்றியும் அவர்தம் சிறப்புகளையும் போற்றிப் பாடியிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

இந்த வலைப்பூ ஆரம்பித்த காலந்தொட்டு பலரும் கேட்டிருந்த அல்லது எழுத வலியுறுத்தி வந்த தலைப்பினை முன்வைத்து ஒரு தொடரினை நாளை முதல் பகிர்ந்திட துவங்குகிறேன்...

காத்திருங்கள்...!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சிவவாக்கியரின் “சிவவாக்கியம்”

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுக்கும் முயற்சியில், இரண்டாவது படைப்பாக சிவவாக்கியர் அருளிய “சிவவாக்கியம்” என்கிற மின்னூலினை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

-சிவவாக்கியர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆத்திகத்துக்குள் நாத்திகம் பேசிய அருளாளர் சிவவாக்கியர். இறை வெளியில் இல்லை நம்முள்தான் இருக்கிறது என்பதை இந்த நூலில் வலியுறுத்திச் சொல்கிறார்.

சிவவாக்கியர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்ததாக கருதப் படுகிறது. தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்களினால் புகழப் பட்ட பெருமையுடையவர். குறவர் இன பெண்ணை மணந்து அவர்களின் குலத்தொழிலை செய்தவர் என்றொரு செவிவழி கதை மட்டுமே, இவர் பற்றிய தகவலாய் நமக்கு கிடைத்திருக்கிறது.

இவரது பாடல்களில் தெறிக்கும் புரட்சிகரமான கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துவனவாயிருப்பது இவரின் ஆழ்ந்த அறிவாற்றலை பறைசாற்றுகிறது.

ஆன்மீகமும், பழமைவாதமும் மேலோங்கி இருந்த அந்த கால கட்டத்தில் சாதி, சமய, சடங்குகள் என மதத்தினை பீடித்திருந்த அத்தனை புறக்கூறுகளை மிகத் தீவிரமாக எதிர்த்தவர் சிவவாக்கியர். பல பாடல்களில் உருவ வழிபாட்டினை கடுமையாக சாடுகிறார்.

தமிழ் பேசும் அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நூலிலை எவரும் பெற்றிடலாம். இந்த நூல் தமிழ் அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டிய ஒரு நூலாகும். எனவே இந்த பதிவினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர்களே!,தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல....

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

என்றும் நட்புடன்

தோழி..

www.siththarkal.com
தொடர்புக்கு

siththarkal@gmail.com
siththarkal@yahoo.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உதக நீரின் வகைகள்....பயன்கள்!

Author: தோழி / Labels:

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக மற்ற ஐந்து வகை உதக நீர் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

சப்த வேதி உதகம்
வெளிர் சிவப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு ஒரு வாரம் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு திரவத்தில் வேப்பெண்ணையை கலந்து நுகர்ந்தால் வேப்பெண்ணையின் மணம் அற்றுவிடும். இதுவே ”சப்த வேதி” உதகம் என்று குறிப்பிடுகின்றனர்.இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்குவதுடன் காயகற்ப மருந்துகளும் தயாரிக்க முடியுமாம்.

தச வேதி உதகம்
இது அழுகிக் கிடக்கும் சகதித் தண்ணிர் போல இருக்கும், இந்த நீரில், குச்சியினை போட்டு பத்து நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த விளாங் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலக்கி பத்து நாள் வைக்க, எலுமிச்சம்பழ வாடை இல்லாதிருப்பின் அதுவே "தச வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு இரசவாதம் செய்யலாமாம்.

மாத வேதி உதகம்
சிறிது மஞ்சள் நிறமுடன் குழ குழப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு முப்பது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த இரும்புக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் வசம்புத் தூளைப் போட்டுக் கலக்கி நுகர வசம்பு வாடை இல்லாதிருப்பின் அதுவே "மாத வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம்.

மண்டல வேதி உதகம்
சிறிது பச்சை நிறமுடன் பிசுபிசுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு நாற்பத்தியெட்டு நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் , செப்புக் கம்பியினால் பேரண்டத்தைக் கட்டி சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் வெற்றிலைச் சாற்றை விட்டுப் பார்க்க அது முறியாதிருப்பின் அதுவே "மண்டல வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம். இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.

அறுபது நாள் வேதி உதகம்
சிறிது கருப்பு நிறமுடன் வழுவழுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு அறுபது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், செப்புக் கம்பியினால் முடிந்த இரும்புக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் கற்பூர வள்ளி இலைச் சாற்றை விட்டு நுகர மணம் இல்லாதிருக்குமாம் அதுவே "அறுபது நாள் வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம். இதைக் கொண்டு காயகற்ப மருந்துகளும், தாது புஷ்டி மருந்துகளும் தயாரிக்க முடியுமாம்.

* சாப நிவர்த்திக்கான மந்திரங்கள் தனித்துவமானவை, பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி அவற்றை இங்கே பகிரவில்லை.

நாளைய பதிவில் நான் தொகுத்திருக்கும், இரண்டாவது மின் நூல் பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உதக நீரின் வகைகள் !

Author: தோழி / Labels:

உதக நீர் பற்றிய அறிமுகத்தையும், விளக்கத்தையும் முந்தைய பதிவில் பார்த்தோம். இனி உதக நீரின் வகைகளையும், அவற்றை கண்டறிவது மற்றும் பயன்பாடுகளை கவனிப்போம்.

சாணவேதி உதகம்
வெள்ளையாய் கரு நீர் போல நுரைத்து பிசுபிசுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு வைத்தால் மூன்றே முக்கால் நாழிகைக்குள் நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கு உண்டான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் அரிதார தூளை சேர்க்க, திரவம் சிறப்பு நிறமாக மாறுவதுடன், அதிலிருந்து சவ்வாது மணம் வீசுமாம். இதுவே ”சாணவேதி” உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பூசணிக்காயில் சிறு துளை இட்டு அதில் சுத்தி செய்த இரசத்தினை ஊற்றி, அதை குதிரை வால் முடியில் கட்டி, உதக நீரில் வைக்க மூன்றே முக்கால் நாழிகைக்குள் பூசணிக்காய் கல்லாகும். இதை தூளாக்க ரசமானது இறுகி மணி போலாகி இருக்கும். இந்த மணியை வாயிலிட கேவுனமுன்டாகும். மேலும் இந்த பூசணித்தூளை பண எடை அளவு எடுத்து தேனில் கலந்து உண்டுவர ஆயுள் அதிகரிக்கும் என்றும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருநாள்வேதி உதகம்
புகையீரல் கழுவிய நீர் போல் பிசுபிசுப்பான இந்த நீரை, இதற்கு உண்டான* மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்து, குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் பெருங்காயத் தூளை போட்டு நுகர்ந்தால் பெருங்காயத்தின் மணம் அற்றுவிடும். இதுவே ”ஒருநாள்வேதி” உதகம் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஒருநாள்வேதி உதக நீரை வில்வக் குடுகையில் எடுத்து அதில் மூன்று கழஞ்சு சுத்தி செய்த ரசம் விட்டு ஒருநாள் முழுவதும் வைத்திட இரசம் வெண்ணை போல ஆகும். இந்த இரசத்தை ரசமணியாகக் கட்ட அதுவே கேவுன ரசமணி ஆகும் என்றும் கூறி உள்ளனர்.

இருநாள் வேதி உதகம்
இது சாணித் தண்ணீர் போல பிசுபிசுப்பாக இருக்குமாம். இதற்கு உண்டான* மந்திரத்தைச் சொல்லி சாபநிவர்த்தி செய்த பின்னர், குதிரைவால் முடியினால் முடிந்த பழைய தேங்காய் குடுக்கையையில் சேகரிக்க வேண்டும். துளியளவு நீரில் மாம்பழச்சாறு விட்டுக் கலக்கி இரண்டு நாள் வைக்க, மாம்பழ வாடை இல்லாதிருப்பின் அதுவே "இருநாள் வேதி உதகம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

வில்வக்குடுக்கையில் இந்த உதக நீரை எடுத்து அதில் சிறிது வெள்ளித் தூளை போட்டு இரண்டு நாள் கழித்து எடுக்க மணல் போல ஆகும். இதை கல்வத்திலிட்டு அரைத்து புடமிட்டு சுன்னமாக்கி நெய்யில் குழைத்து உண்ண காய சித்தி உண்டாகும். என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

திரி நாள் வேதி உதகம்
கரிசல் காட்டு நீர் போல குழ குழப்பாயிருக்கும் இந்த நீரில், ஒரு குச்சியினை மூன்று நாள் போட்டு வைக்க உதக நீரில் நனைந்த பகுதி கல்லாகிவிடும். இதற்கு உண்டான* மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்து, பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த செம்பினால் ஆன குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் சந்தனத் தூளை போட்டு நுகர்ந்து பார்த்தால் மணமற்றுவிடும். இதன் மூலம் ”திரி நாள் வேதி” உதகநீரினை அறியலாம். இந்த வகை உதக நீரின் உதவியுடன் பலவகை பட்பங்கள், செந்தூரங்கள் செய்யலாமாம்.

பஞ்ச வேதி உதகம்.
இது மஞ்சள் கலக்கிய நீர் போல இருக்கும். இதில் ஒரு குச்சியினை ஐந்து நாள் போட்டு வைத்திட உதக நீரில் நனைந்த பகுதி கல்லாகிவிடும்.இதற்கு உண்டான* மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த இரும்புத் தகட்டுக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். இதில் சிறிதளவு நீரை எடுத்து ஈர வெங்காயத்தை அரைத்துக் கலக்கி நுகர வெங்காய மணம் இல்லாதிருக்குமாம். இதன் மூலம் ”பஞ்ச வேதி” உதகநீரினை அறியலாம். இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.

பதிவின் நீளம் கருதி மற்ற ஐந்து வகைகளை நாளைய பதிவில் பார்ப்போம்....!

* சாப நிவர்த்திக்கான மந்திரங்கள் தனித்துவமானவை, பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி அவற்றை இங்கே பகிரவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உதக நீர்...ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

நீரானது மலையிடுக்குகளில் சுரந்து,கசிந்து, வழிந்து, காடுகளின் ஊடாக ஓடையாக செல்வதை பார்த்திருப்பீர்கள். இத்தகைய பயணத்தில் இந்த நீர் மலை முகடுகளில் உள்ள பள்ளங்களில், குழிகளில் தேங்கியிருப்பதைக் காண இயலும். இவ்வாறு தேங்கியிருக்கும் நீர் பற்றியதே இந்த பதிவு.

மலை காடுகளின் ஊடான பயணத்தின் போது பல்வேறு பாஷாணங்கள், உப்புகளை கரைத்துக் கொண்டு, காடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும் தன்மையும் செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும் குறுகலாகவும் உள்ள குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில்,இடி ,மின்னல் போன்ற பருவ மாற்றங்களினால் வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமான, சக்திவாய்ந்த , ஆற்றல் மிக்க நீர்மை பொருளான திரவமாக ஆகிவிடும்.இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.

இதன் மகத்துவத்திற்கு உதாரணம் கூறுவதானால் இந்த நீரில் விழும் இலை கூட கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும் கிடைத்து விடாது என்றும், இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பௌதீக தன்மை உடையவனாகவும் இருப்பதில்லையாம்.

இத்தகைய உதக நீரைப் பற்றி ”போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்” போன்ற நூல்களில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு சாபநிவர்த்தி செய்து பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத ஒரு கால கட்டத்தில் பழந்தமிழர்களான சித்தர்கள், தங்களின் அரிய ஆற்றலினால் இத்தகைய விஷயங்களை அறிந்தாய்ந்து தெளிவுடன் உரைத்திருப்பதை நினைக்கும் போது தமிழனாக நாம் பெருமை அடையாமல் இருக்க முடியாது.

அடுத்த பதிவில் இந்த உதக நீரின் வகைகளைப் பற்றியும் அவற்றை கண்டறியும் முறைகளையும் , அதன் பயன்பாடுகளை பற்றியும் பார்ப்போம்.

காத்திருங்கள்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஒரு வாரம் பசியெடுக்காமல் இருக்க......!

Author: தோழி / Labels:

பசியினை வெல்ல அகத்தியர் அருளிய முறையினை முந்தைய பதிவொன்றில் பார்த்தோம். அதே வகையில் போகரின் சீடரான புலிப்பாணி முனிவர் கூறிய முறையினை இந்த பதிவில் பார்ப்போம்.

"நீர் முள்ளி விதை எடுத்து நசுக்கி
அதன் அரிசியை பசுப்பால் விட்டு அரைந்து
பசுப்பலுடன் கலந்து அருந்து
வாரம் ஒன்றாகும் வரை பசியெடுக்காதே
நாதனார் போகருட கடாட்சத்தினாலே
நலமாக புலிப்பாணி பாடினேனே"

- புலிப்பாணி -

நாயுருவி செடியின் விதைகளை சேகரித்து அவற்றை உரலில் இட்டு குற்றியெடுத்து உமி நீக்கி, அந்த அரிசியில் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து, அந்த விழுதினை பசும் பாலில் கலந்து அருந்தினால் ஒரு வாரம் வரையில் பசி எடுக்காது என்கிறார். இதனை தன் குரு நாதர் போகரின் அருளால் கூறுவதாக சொல்கிறார்.

தீவிரமான ஆன்மீக தேடல்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் போது பசி என்பது ஒரு இடராக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய உபாயங்களை சித்தர்கள் தங்களின் சீடர்களுக்கு அருளியிருக்க வேண்டும்.

இந்த பதிவின் விவரங்களை தகவல்களை பகிரும் ஒரு முயற்சியாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அடுத்த பதிவில் மிகவும் அரிதான “உதக நீர்” பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வாலை பூசையின் ரகசியம்...

Author: தோழி /

பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும் ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம் என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று சித்தியடைவதுதான் வாலைபூசையின் நோக்கம்.

இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.

"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "

- கொங்கணவர் -

"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"

- கொங்கணவர் -

"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"

- வாலைக் கும்மி -

கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி சொல்கிறார்..

"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"

வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும் ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும் ஆகும்.

வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.

ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை புற நிலையில் அல்லாமல் அக நிலையில் தெரிந்து கொண்டு , உணர்வைவும், நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில் பரம்பொருளுடன் சேர இவ் வாலைப் பூசையை கைக்கொண்டு சித்திபெற வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.

ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள் வழி சென்று சித்தி பெறலாம்.

இந்த வாலை பூசை முறைகளை சிறந்த குருவின் வழிகாட்டல் மூலம் பெற்று நாமும் பயனடைந்து மற்றவர் பயனடைய வழி காட்டுவோமாக...!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் மேலான தெய்வம்!

Author: தோழி / Labels: , ,

பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப் பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப் போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?

இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"

- அகத்தியர் -

இத்தனை சிறப்பான வாலை பூசையின் இரகசியம் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்........

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் வணங்கிய தெய்வம்...!

Author: தோழி / Labels: , ,

சித்தர் மரபியலில் குருவின் மகத்துவம், குரு வணக்கம், குரு தரிசனம் போன்றவைகளைப் இதுவரை பார்த்தோம். அந்த வரிசையின் தொடர்ச்சியாகவே இந்த பதிவுகளை வாசிக்க வேண்டுகிறேன்.

ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!

- திருமூலர் -

அனைவருக்கும் மேலான குரு இறைவனே! சாதித்த புண்ணியர்களுக்கும், சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இறைவனே மேலான குருவாக இருப்பார். இதை உணர, அல்லது உணர்த்தி வழிகாட்டிட, ஒரு நல்ல மானிட குரு தேவை.

அத்தகைய உண்மையான குருவினைத் கண்டறிந்து யோகம் மற்றும் ஞான பயிற்சிகளை அறிவதுடன், அவற்றை நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடனும், முழுமையான அர்ப்பணிப்புடனும் தொடந்து செய்து வர வேண்டும். தொடர் பயிற்சி உள்ளவர்களுக்கே சித்தியும், ஞானமும் கிடைக்கும். விதைகளை நசுக்கி எண்ணை எடுப்பது போல ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்க வேண்டும். இவ்வாறு ஊனினை உருக்கி உள்ளொளி கண்டவர்களே சித்தர்கள்.

இந்தகைய உயர்நிலை ஆன்மாக்களாகிய சித்தர்கள் போற்றி வணங்கிய மேலான தெய்வம் எது?

சித்தர்கள் எல்லோரும் அந்த ஒரே தெய்வத்தைத்தான் வணங்கினரா?

இது பற்றி பரவலாக பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கின்றன. விவாத பொருளாகவும் இது இருந்து வருகிறது. யார் எதைச் சொன்னாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சித்தர்கள் அனைவரும் ஒரேயொரு தெய்வத்தையே பூசித்திருக்கின்றனர்.அந்த தெய்வத்தை பூசிக்காமல் சித்திபெற்ற சித்தர் எவருமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அத்தனை சிறப்பும் மகத்துவமும் வாய்ந்த தெய்வம் எது?

விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குரு வணக்கமும்... குரு தரிசனமும்...!

Author: தோழி / Labels: , , ,

குரு வணக்கத்தின் மிக முக்கியமான பகுதி இது....

ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.

இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....

அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.

இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.

இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.

மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.

இதுவரை சித்தர்களை வணங்கும் முறையினை பார்த்தோம், அடுத்த பதிவில் சித்தர்களே வணங்கிய தெய்வம் பற்றி பார்ப்போம்...சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குரு வணக்கம்?, சித்தர் வணக்கம்?

Author: தோழி / Labels: , , ,

குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என நேற்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் சந்தேகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய சில விவரங்களை தந்துவிட்டு நமது குரு வணக்கத்தை தொடர விரும்புகிறேன்.

சித்தர் வணக்கம் என்பது குழந்தைகள் குருகுல வாசத்தினை ஆரம்பிக்கும் போது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற மந்திரத்தை உச்சரித்து துவங்குவார். ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்பதே சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்தைய தலைமுறை வரையில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீப காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும், சித்தர்கள் மரபியலுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.

இன்னமும் துல்லியமாக சொல்வதானால் இந்த சித்தர் வணக்கம் சமண மதத்தோடு தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல் பாடலை சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி

ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே".


எனவே இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் குரு வணக்கத்திற்கும் தொடர்பில்லை.

இனி நம்முடைய குரு வணக்கத்தினை பார்ப்போம்.

நேற்றைய பதிவில் குறிப்பிட்ட சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப் படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.

ஆமாம்! , நம்ப முடியாத செய்தி இதுதான்....என்றைக்கோ சமாதியடைந்த சித்த புருஷர்களை இந்த மூலமந்திரங்களின் துணை கொண்டு நேரில் தரிசிக்க முடியுமாம். சித்த புருஷர்களை நேரில் சந்திக்க வாய்ப்புள்ள அந்த முறையினை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

காத்திருங்கள்....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குரு வணக்கம்... ஓர் தெளிவு...

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப் பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.

இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன். இவை மிகவும் முக்கியமானவை.

நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

இந்த மந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது?

விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? - 03.

Author: தோழி / Labels: , ,

பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது. இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம் என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"

இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும் அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார்


"மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே செய்யும்
கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
மவுனமேயென்று சொன்னார் முன்னோரெல்லாம்
வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே"

- காகபுசுண்டர் -

இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு பலனடைவது என்பதைப் பார்ப்போம்..


காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு.

இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.

இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம்..

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? - 02.

Author: தோழி / Labels: ,

கொஞ்சம் தயக்கத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். இந்த கருத்துக்கள் அனைத்துமே கடுமையான விமர்சனம் அல்லது விவாதங்களை உருவாக்க கூடியவை. எனவே பதிவின் சாரத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன், பிழையிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை தெரிவிக்கவும் தயாராக இருக்கிறேன்.

பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை, இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து, கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள் உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும் சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர். ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.

விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும் களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம் தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப் பட்டது.இன்றைய நமது தமிழும், கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின் பாதிப்புகளின் எச்சம்தான்.

தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம்(சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற சர்ச்சையான கருத்து உள்ளது. காலப் போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப் பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக் கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும் முகமாக சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை தமிழர்களின் மீது திணித்தனர்.

இன்னும் தெளிவாக சொல்வதாயின், பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின் வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து வரிகளைத் தருகிறேன்....

“தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்"

இது தொடர்பாக மேலதிக தகவல் வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி, சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல் அறிஞரான Avram Noam Chomsky ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம். இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் அலசுவதில்லை.

தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம் செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் = உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும், உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு அல்லது இனையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும் காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது... பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம் மறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காயந்திரி மந்திரம், அதனை பயன்படுத்தும் வகையினை அடுத்த பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயந்திரி மந்திரம் மறைந்ததா?,மறைக்கப் பட்டதா...?

Author: தோழி / Labels: , ,

காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.

இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.

காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர்.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்.

இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.

விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...

காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!

- திருமூலர் -

இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?

காத்திருங்கள்.....விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அது என்ன ”எட்டிரண்டு”....?

Author: தோழி / Labels: , ,

யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு. ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான். அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான். இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்தரகசியம் சித்திக்கும்.

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.

"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"

என்கிறார் இடைக்காட்டு சித்தர்.

எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்
உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து

என்கிறார் கடுவெளி சித்தர்.

"எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!"

என்கிறார் திருமூலர்.

எல்லாம் சரிதான், அது என்ன எட்டிரண்டு?

ஆங்கில எண்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பழந் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களே எண்களை குறிக்க பயன் படுத்தப்பட்டன. இதில் எட்டு என்ற எண்ணைக் குறிக்க "" என்ற எழுத்தும் இரண்டு என்ற எண்ணைக் குறிக்க "" என்ற எழுத்தும் பயன் படுத்தப் பட்டது. இந்த , என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?

இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான். வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது.

இந்த அட்சரங்கள் பற்றியும், அதன் இயக்கம், தொழிற்பாட்டு முறைகள் பற்றி ஆத்ம சுத்தியுடன் தெளிவாக உணர்ந்து தெரிந்து கொள்வோருக்கு மட்டுமே ஞானம் சித்திக்கும். இதன் மகத்துவத்தின் பொருட்டே சித்தர்கள் இதனை மறைவாய் வைத்தனர்.

இத்தனை மகத்துவமான எட்டிரண்டை பூரணமாய் அறிந்து தெளிந்தோர் பெரியோர். அவர் வழி நிற்போருக்கு குறையேதுமில்லை.

உண்மையை உணர்வோம்.! தெளிவடைவோம்.!

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...