ஓரெழுத்து மந்திரம்.....தொடர்ச்சி.!

Author: தோழி / Labels: , ,


பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.

சிவவாக்கியரோ "அஞ்செழுத்தில் ஒரேழுத்து " என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.

திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!

”ச்சீய்”....!

ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி”காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஒரேழுத்து மந்திரம்.!

Author: தோழி / Labels: , ,

ஆமாம், ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... அதனாலேதான் இந்த பதிவு...

இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.


கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..

"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி"


திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.

"நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!"

- திருமூலர் -

சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்

"அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்"

மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.

"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது
ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே "

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.

"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே
அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்
விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!"

இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?

விவரங்கள் நாளைய பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய பசியை வெல்லும் முறை.!

Author: தோழி / Labels: ,மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.

ஔவையார் பசியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்....

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.

இத்தனை கொடிய பசிப் பிணியினை வெல்லும் மருந்தொன்றை அகத்திய மாமுனி தனது பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

"தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"

- அகத்தியர் -

நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.


"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"

- அகத்தியர் -

மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்.

வேறொரு சுவாரசியமான தகவலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திசைகள்... செயல்கள்... பலன்கள்.!

Author: தோழி / Labels: , ,

வரிசையாக தொடர்களாய் எழுதி விட்டதால், மாறுதலுக்கு சித்தர்களின் தனிப் பாடல்களில் உள்ள தகவல்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சித்தர்களின் ஆய்வுகளின் தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கும், நவீன அறிவியலுக்கும் இருக்கிறது.

அந்த வகையில் தேரையரின் ஒரு பாடலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

"சாதிக்கும் கீழ்த்திசை சம்பத்துண்டாம்
தவறா தென்கிழ்திசை சஞ்சலமே செய்யும்
ஆதிக்கும் தென்திசை யாயுசு விருத்திக்கும்
ஆகா தென்மெற் திசைக்கு பொருளே சேதம்
வடதிக்கு மேற்திசை மத்திபமே நோயாம்
வடமேற்கு இல்லறம் விட்டதுவே ஓட்டும்
சோதிக்கும் வடதிசை மத்திபமே சாவாம்
சொல்லரிய வடகிழக்கு உத்தமன் தான் பாரே"

- தேரையர் -

இந்த பாடலில் எட்டு திசைகளைப் பற்றியும் அந்த திசைகளை நோக்கி செய்யப் படும் செயல்களின் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.

அதாவது...

கிழக்கு திசை நோக்கிய செயல்கள் செல்வத்தையும்,
மேற்கு திசை நோக்கிய செயல்கள் உடல் நலிவையும்,
தெற்கு திசை நோக்கிய் செயல்கள் ஆயுள் விருத்தியையும்,
வடக்கு திசை நோக்கிய செயல்கள் மரணம் அல்லது முடிவையும்,
தென் கிழக்கு திசை நோக்கிய செயல்கள் மன சஞ்சலத்தையும்,
தென்மேற்கு திசை நோக்கிய செயல்கள் கையிருப்பு செலவாவதையும்,
வட கிழக்கு திசை நோக்கிய செயல்கள் உத்தமர்களாக்கும்,
வட மேற்கு திசை நோக்கிய செயல்கள் இல்லறத்தை துறக்கும்

என வரையறுத்துக் கூறுகிறார்.

பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைமைகள்,வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கு பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

இந்த தகவல்களை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாமல் இதன் பின்னால் இருக்கும் கூறுகளை ஆராய வேண்டியது நம் கடமை.


அடுத்த பதிவில் வேறொரு தனிப்பாடல்கள் பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நவமணிகள்... நற்பலன்கள் கிடைத்திடும் வழி.!

Author: தோழி / Labels: ,

நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சம் என கடந்த பதிவுகளில் பார்த்தோம்.

அவையாவன...

சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
குரு - புஷ்பராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூர்யம்

நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடக் கூடாது. அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர். அதன்படி....

ஞாயிற்றுக் கிழமைகளில் மாணிக்கமும், கோமேதகமும், திங்கட் கிழமைகளில் முத்தும், வைடூரியமும், செவ்வாய்க் கிழமைகளில் பவளமும், புதன்கிழமைகளில் மரகதமும், வியாழக் கிழமைகளில் புஷ்பராகமும், வெள்ளிக் கிழமைகளில் வைரமும், சனிக் கிழமைகளில் நீலம் வாங்குவதும், அணிவதும் சிறப்பு.

தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் ”தோஷ நிவர்த்தி” என்பர்.

இன்றைக்கு கற்கள் விற்கும் வியாபரிகள் பலருக்கும் இதன் அவசியம் புரிவதில்லை.லாபத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். இதன் பொருட்டே அணிந்தவர் பலரும் கற்கள் தங்களுக்கு பலன் தருவதில்லை என புலம்பிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நவமணிகளின் ”தோஷ நிவர்த்தி” செய்யும் விவரங்களை பகிர வேண்டும் என்றே இந்த தொடரினை ஆரம்பித்தேன், ஆனால் இந்த விவரங்களை குருமுகமாய் பெறுவதே சரியான முறை என்பதால் அதனை இங்கே விளக்கிடாமல் போவதற்காக என்னை பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.

தேர்ந்த சோதிட வல்லுனர்களினால் பரிந்துரைக்கப் பட்ட தரமான கற்களை... சரியான நாட்களில் வாங்கி, தோஷ நிவர்த்தி செய்து அணிவதன் மூலம் நலமும், வளமும் பெற்றிட வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு:
கடந்த இரு தினங்களாய் இது தொடர்பாக அநேக மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. நேரமின்மையால் அவற்றிற்கு உடனடியாக பதில் அளிக்க இயலாத நிலையில் இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நவமணிகள்... தன்மைகளும், தரமும்..!

Author: தோழி / Labels: ,


நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

இதன் அடுத்த கட்டமாய் நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது. அதற்கென பிரத்யேகமான தினங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். அதன் விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நவமணிகள்....அதிர்ஷ்ட கற்களா?

Author: தோழி / Labels: ,

மனிதனின் பிறப்பில் இருந்து இறுதி மூச்சு வரையில் அவனது வாழ்க்கையினை நவக்கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன என சோதிடவியல் தீர்மானமாய் கூறுகிறது. கோசார பலன்கள் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தினையும் தீர்மானிக்கிறது என்றும் இந்த பலன்கள் அவரவர் பூர்வ புண்ணியபலன், நற் செயல்கள், நற் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடுமாம். இதைத் தவிர நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்வதன் மூலமும் பாதிப்புகளின் தீவிரத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.

நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்படுகிறது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் அந்த கிரகத்தின் நற் தன்மைகள் கதிர் வீச்சுக்களாய் நம் உடலில் ஊடுருவி குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்புகளை சமன் செய்வதுடன் அதிர்ஷ்டத்தையும் வழங்குவதாக குறிப்புகள் கூறுகின்றன.

இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப் படுகின்றன. இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும். நம்பிக்கை என்பதற்கு அப்பால் இதனால் உண்டாகும் பலன்களை அனுபவ ரீதியாய் உணர்ந்திருந்ததால், இதன் அருமைகளை முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் அதிர்ஷ்ட கல் வியாபாரம் என இன்று பலரும் செய்து பெரிய அளவில் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். சில போலியான வியாபாரிகளின் மிகையான விளம்பரங்கள், தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி அநேகர் பணத்தையும் நிம்மதியையும் இழந்து வருகின்றனர். அத்தகையவர்களின் அனுபவம் இந்த கற்கள் குறித்தான அவ நம்பிக்கையையும், ஆவேசங்களையும் உருவாக்கி விட்டது.

நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.அதாவது பிறந்த ராசி, ராசிஅதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிடமுடியும். மற்ற படி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.

இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும், பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும். சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம். இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு.முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப் பட்டு அணியப் படும் கற்கள் நல்ல பலன்களை தந்திருப்பதை நான் கண் கூடாக கண்டிருக்கிறேன்.

தூய கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

பலரும் கூறுவதைப் போல ஏன் இந்த கற்கள் பூரண பலன் தருவதில்லை?

இந்த கற்கள் பலன் தரவைக்க சித்தர்கள் அருளிய நடைமுறைகள் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நவமணிகள்.....ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels: ,

நவரத்தினங்களையே சித்தர்கள் நவமணி என குறிப்பிடுகின்றனர். நவ என்பது புதுமை என்றும், ரத்னம் என்றால் ஒளி என்றும் பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்,நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவமணிகள். இவை அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்கள்.

இந்த நவ மணிகளை சிவனின் ஒன்பது வகையான உருவங்கள் என்றும் குறிப்பிடுவர். அவையாவன, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம், விந்து என்பனவாகும்.

பழந்தமிழர்கள் இந்த நவரத்னங்களை தலை மணிகள், இடை மணிகள், கடை மணிகள் என்று மூன்றாக வகைப் படுத்தியிருந்தனர். அவை,

தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.

என்பனவாகும்.

சித்தர்கள் நவ ரத்னங்களை மகாரத்தினங்கள், உபரத்தினங்கள் என்று இருவகைப் படுத்தியுள்ளனர். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம் என்பவற்றை மகாரத்தினங்கள் எனவும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் என்பவற்றை உபரத்தினங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு வகைப்படுத்திய சித்தர்கள் இவற்றை தங்கள் அன்றாட வாழ்வில் பல விதங்களிலும் பயன்படுத்தி உள்ளனர். நமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் படி இந்த நவமணிகள் இரு வகையில் சித்தர்களால் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.

ஒன்று சோதிடவியலில் நவக்கிரகங்களின் கோசார பாதிப்புகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குறிப்பிட்ட ஜாதகர் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட நவமணிகளை ஆபரணங்களில் பதித்து அணிந்து கொள்ளும் பரிந்துரைகள்.

மற்றயது மருத்துவ இயலில் நவ ரத்னங்களை பஸ்பங்களாக மாற்றி மருந்துகள் தயாரித்தல்.

முதலில் சோதிட ரீதியாக இந்த நவமணிகள் சித்தர்களால் எவ்வாறு பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன என்பதை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சமகால நோய்களும், தீர்வுகளும்.....எனது சில விளக்கங்களும்!!

Author: தோழி / Labels:

கடந்த எட்டு தினங்களாய், சமகால எந்திரமயமான வாழ்வில் நம்மை பாதிக்கும் நோய்கள் குறித்த விளக்கத்துடன் தீர்வுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி...இன்னமும் பல பாதிப்புகள் எனது பட்டியலில் இருந்தாலும், தொடரின் நீளம் மற்றும் பதிவின் சுவாரஸ்யத்தினை கருத்தில் கொண்டு பிரிதொரு சந்தர்ப்பத்தில் தொடர்கிறேன்.

கடந்த சில நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏராளமான மின்னஞ்சல்கள் நிறைய கேள்விகளுடன் வந்திருக்கின்றன. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தனித்தனியே மின்னஞ்சல் அனுப்புவதைக் காட்டிலும் எனது எண்ணங்களை பொதுவில் இங்கே பகிர்ந்து கொள்வது அனைவருக்கும் பயன் தருமென கருதுகிறேன்.

நண்பர்களே! இந்த வலைமனையின் நோக்கமே பழந்தமிழ் சித்தர்கள் அருளிச் சென்ற அரிய பல தகவல்களை என்னுடைய சம காலத்தவர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், எதிர் வரும் தலைமுறைக்குப் பயன் படும் வகையில் மின்னூடகத்தில் பதிந்து வைப்பதும்தான்.....

இங்கே பகிரப்படும் தகவல்கள் அனைத்துமே இயன்றவரையில் சரிபார்க்கப் பட்டு எனக்கு திருப்தியான பின்னரே பதிவிடுகிறேன். இவற்றை மீறி ஏதேனும் பிழையிருப்பின் அவற்றைப் பொறுத்து, சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

இன்றைக்கு சித்தர்கள் அருளிய வைத்திய முறைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தீவிரமான ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றனர். ஆய்வுகளின் தெளிவுகளை தொகுத்து சித்த மருத்துவ கல்லூரியின் வாயிலாக பயிலும் மாணாக்கர்களுக்கு போதிக்கப் படுகின்றன. இவர்களைத் தவிர பரம்பரையாக குருகுல வாசம் மூலமாக வைத்திய முறையில் தேர்ந்து தெளிந்த சித்த வைத்தியர்களும், ஆராய்ச்சியாளர்களும் நம்மிடையே இருக்கின்றனர்.

சித்த மருத்துவத்தில், மருந்துகள் உட்கொள்ளும் போது உணவுகட்டுப்பாடு என்பதை கடுமையாக வலியுறுத்துகின்றனர். இது ஒவ்வொரு மனிதரின் உடல் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடு பொருந்தாது.எனவே இங்கே பதிவில் பகிர்ந்து கொள்ளப் படும் வைத்திய விவரங்களை ஒரு தகவலாக மட்டுமே கருத்தில் கொண்டு, சிரமம் பாராமல் தேர்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் மட்டுமே பயன் படுத்தி பலனடைந்திடுமாறு வேண்டுகிறேன்.

இந்த வலைமனையின் பதிவுகள் பலவற்றை என்னுடைய முன் அனுமதி இன்றி, ஒரு சில பதிவர்கள், தங்களுடையதைப் போல தங்கள் பதிவில் தொடர்ந்து பதிவிடுகின்றனர். ஆரம்பத்தில் நான் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிடினும் தற்போது இத்தகைய செயல்கள் எனது ஆர்வத்தை குலைப்பதாகவே இருக்கிறது. என்னுடைய ஆர்வமும், அக்கறையும் முயற்சியும், உழைப்பும் தவறாக பயன் படுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகத் தெளிவாக கூறிட விரும்புகிறேன். எனவே நண்பர்கள் இத்தகைய செயல்களை இனி தொடர வேண்டாமென பணிவுடன் வேண்டுகிறேன்.

தொடரும் ஆதரவிற்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி !

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தோல் பாதிப்புகளும், தீர்வுகளும்..!

Author: தோழி / Labels:

நம் மாதிரி வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறவர்களுக்கு உடலின் கழிவுகள் வியர்வையாகவும் வெளியறும். வெளியேறும் நீர் காய்ந்து போனாலும், அழுக்குகள் தோலின் மேல் படியும். அதில் நுண்ணுயிரிகள் உருவாகி உடல் நாற்றத்தை உண்டாக்கும்.ஒரு நாளைக்கு இரு முறையாவது நீராடச் சொன்னதன் அறிவியல் அர்த்தம் இதுதான். வியர்வை நன்கு காய்ந்த பின்னரே நீராட வேண்டும்.

நமது தோல் மூன்று வகையானது, வறண்ட தன்மையான தோல், எண்ணைப் பசையான தோல், சாதாரண தோல். இதன் தன்மையை பொறுத்து பாதிப்புகள் உண்டாகலாம்.பாக்டீரியா மாதிரியான நுண்ணுயிரிகள் தோலில் முகப்பரு, வியர்க்குரு, படை,கரப்பான், பித்த வெடிப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும். பொதுவில் நமது குருதியில் அசுத்தங்கள் அதிகரித்தால் தோல் பாதிப்புகள் உருவாகும்.

இனி இந்த பாதிப்புகளுக்கு சித்தர்கள் அருளிய எளிய வைத்திய முறைகளைப் பார்ப்போம்.

வியர்க்குரு

  • சந்தனக் கட்டையை உரசி அதை மஞ்சள் கிழங்குச் சாருடன் கலந்து பூச வியர்க்குறு சுகமாகும்.

  • ஊமத்தை செடியின் இலையை எடுத்து அதில் விளக்கெண்ணை தடவி வதக்கி வேனல் கட்டிகளின் மேல் கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும், இரண்டு மூன்று தடவைகள் இப்படி கட்ட வேண்டும்.

முகப்பரு நீங்க...

  • செங்கீரைத் தண்டை அரைத்து கட்டிகள், பருக்களுக்கு தடவி வந்தால் அவை பழுத்து உடையும்.

  • துத்தி இலையை அரைத்து பருக்கள் மேல் தடவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.

படைகள் நீங்க...

  • தகரை செடியின் வேர் எடுத்து தூளாக்கி அத்துடன், கற்பூரம், சாம்பிராணி இவைகளை சம அளவில் சேர்த்து குழித்தைலம் எடுத்து அந்தத் தைலத்தை படர் தாமரை, இடுப்புக் கடுவன் முதலிய படைகளுக்கு தடவி வந்தால் அவை உதிர்ந்து விடும்.

  • பீத ரோகினியை தேனில் அரைத்து பூசிவந்தால் படர் தாமரை முதலிய தோல் வியாதிகள் நீங்கும்.

பித்த வெடிப்புகள் நீங்க...

  • சிவன் வேம்பு வேர் எடுத்து பால் விட்டரைத்து தினமும் பாலில் கலந்து உண்டுவந்தால் பித்தவெடிப்புகள் நீங்கும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சிறுநீரக கற்கள்...ஓர் எளிய தீர்வு.!

Author: தோழி / Labels:


மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.

நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர். அதில் கடந்த ஒரு பதிவில் ஒரு மருத்துவ முறை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.

அடுத்த பதிவில் மற்றொரு தகவலுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மலச்சிக்கல்....ஓர் எளிய தீர்வு.!

Author: தோழி / Labels:

அவரசயுகம் தந்த பெரியதொரு பாதிப்பு மலச்சிக்கல். உடலின் கழிவுகள் சிறுநீராகவும், வியர்வையாகவும், மலமாகவும்தான் வெளியேறுகிறது. இவற்றில் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடலியல் ரீதியாக பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.பெரும் பாலானவர்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் எவரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் ஒன்றாகவே இருக்கிறது.பரபரப்பான வாழ்க்கை முறையினால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களுமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

ஆரோக்கியமான மனிதனின் ஒரு வாரத்திற்கு குறைந்தது பத்து முறையாவது மலம் கழிக்க வேண்டும்.நமது குடலில் கழிவுகள் தேங்குவது கூடாது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள், நார்சத்து மிக்க உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அழுத்தங்கள் இல்லாத எளிய வாழ்க்கை முறையை பின்பற்றுவோர் போன்றவர்களுக்கு மலச்சிக்கல் வருவதில்லை.

இன்றைக்கு ஆங்கில மருத்துவத்தில் மலமிளக்கிக்கான மாத்திரைகள் உலகளாவிய அளவில் பெரிய வர்த்தகத்தை ஈட்டித் தருகின்றன. சித்தர்கள் எளிய முறையில் இந்த பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக விடுபடும் ஒரு வழியினை கூறியிருக்கின்றனர்.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் மூன்று குவளை(டம்ளர்) வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி கல் உப்பினை கரைத்து, குடிக்க வேண்டும். (நம்மால் சகித்துக் கொள்ளும் அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.). இதன் பிறகு சிறிது நேரம் வீட்டிற்குள் நடைபழக வேண்டும். அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரே மூச்சில் சிறுகுடல், மற்றும் பெருங்குடலில் சேர்ந்திருக்கும் அத்தனை கழிவுகளும் வாரிச்சுருட்டி வெளியேறிவிடும்.

இந்த முறையை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்தல் வேண்டும். ஆறாவது நாள் முதல் காலையில் உங்களை அறியாமலே வயிற்றைப் புரட்டிக் கொண்டு வரும்..... மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதை செய்வதால் குடல் சுத்தமாவதுடன், சுரப்பிகளும் புத்துணர்ச்சி பெறும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இதயமே..! இதயமே..!

Author: தோழி / Labels: ,

மனிதனின் உடலெங்கும் பாயும் குருதியினை நெறிப் படுத்தும் ஒரு பாகமே இதயம்...இதயத்தின் வேலைகளை இரண்டாக பிரிக்கலாம்.இதயத்தின் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் நாளங்களில் ஓடும் குருதியானது உள்ளிழுக்கப் பட்டு வெளியேற்றப் படுகிறது. இதய தசைகள் மெல்லிய குறுதி நாளங்களினால் பின்னப் பட்டிருக்கும்..

இதயத்தின் இடது பகுதி உடலெங்கும் ஓடி வரும் குருதியினை சேகரித்து அதனை நுரையீரலுக்கு அனுப்புகிறது.அசுத்தமான நிலையில் வரும் இந்த குருதியில் இருக்கும் கரியமில வாயுவினை நீக்கி, பிராண வாயுவினை குருதியில் கலந்து சுத்திகரிக்கப் பட்ட குருதியினை வலுது இதயத்திற்கு அனுப்புகிறது.வலது இதயம் இந்த குருதியினை மீண்டும் உடலெங்கும் செலுத்துகிறது.

இதயத்தில் பின்னியிருக்கும் மெல்லிய குருதி நாளங்களில் கொழுப்பு திசுக்கள் படர்வதால் ரத்த ஓட்டம் தடைபடும்.இதுவே மாரடைப்பாகிறது. இது தவிர இதயம் சுருங்கி விரிவதில் ஏற்படும் குறைபாடுகளும் உண்டு. இவையே இதய நோய்களாக கருதப் படுகிறது.

பரம்பரை மரபு தன்மைகள், உயர் குருதி அழுத்தம்,அதிக மன உளைச்சல், பருமனான உடல்வாகு, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவையே இதயத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும் முக்கிய காரணிகள்.

உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம்,சுய ஒழுக்கம், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என இவற்றை சீராக பின் பற்றினாலே இதயம் இளமையாக இருக்கும்.எண்ணையில்லாத உணவுகள் இதயத்தின் நண்பன்....இனியாவது எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். சித்தர்களின் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாட்டினை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். இதைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதிடுகிறேன்.

இதய நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் நல்ல மருத்துவமுறைகள் இருந்தாலும், அவற்றின் செலவுகள் சாமானியருக்கு எட்டாத உயரத்தில் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

இதயம் வலுவாய் வைத்திருக்க பல வைத்திய முறைகளையும், யோக முறைகளையும் அருளியிருக்கின்றனர். பிராணயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள், குண்டலினியை உயர்த்துதல் போன்ற யோக முறைகள் இதயத்தினை வலுவாக்கும்.

மருத்துவ முறைகளாய், தேரையை கூறிய சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"மருந்தும் பரங்கிப் பட்டை ஆறுபலம்
குருத்தாள் வேருக் கூருங் கழற்சிக்காயும்
பொறுத்த நன்னாரி பூடும் நுணா வேரும்
தீர்ந்து முழக்கு சேர இடித்திடவே
இடித்து சூரணம் எழிலாய் வடி செய்து
கடித்து சீனியில் கலந்து அருந்திடு
வடித்து தேரையன் வாக்கு போய்யதீது
நடித்த மார் நோய் நடுங்கியே ஓடுமே"

- தேரையர் -

பரங்கிப் பட்டை ஆறு பலம், குருந்தன் வேர், கழற்சிக்காய், நன்னாரி, நுணா வேர், மிளகு இவற்றை நன்றாக இடித்து வடி கட்டி சீனியில் கலந்து உட்கொள்ள மார்பு நோய் குணமாகும் இது தேரையன் வாக்கு பொய்யாகாது என்கிறார் தேரையர்.

சுக்கு, பூண்டு எடுத்து சுட்டு பனை வெல்லம் சேர்த்து அரைத்து தொடர்ந்து உண்ண நெஞ்செரிவு உடனே தீரும் என்கிறார்.

இவை தவிர அதிக அளவில் சீத்தாபழம் உண்டு வந்தால் இருதயம் வலிமை மிக்கதாகும் என்றும் சொல்கிறார்.

அடுத்த பதிவில் மற்றொரு பாதிப்புக்கான தீர்வுகளுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உயர் குருதி அழுத்தம் குறைப்போமா !

Author: தோழி / Labels:

இரத்த அழுத்தம்... இதை குருதி அழுத்தம் என்பதே அழகுத் தமிழ் !

குறுதியானத் நாளங்களில் பயணிக்கும் போது அதன் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தமே குறுதி அழுத்தம் எனப்படுகிறது. இந்த அழுத்தமானது இதய தசைகள் சுருங்கி விரியும் போது உருவாகும் அழுத்தங்களை பொறுத்தது. இதய தசைகள் சுருங்கும் போது உருவாகும் அழுத்தமானது இதய தசைகள் விரியும் போது ஏற்படும் அழுத்தத்தை விட அதிகமாய் இருக்கும்.

நல்ல உடல் நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் குருதி அழுத்தமானது இதய தசைகள் சுருங்கும் போது 120 மில்லிமீட்டர் பாதரச அழுத்தமும், இதய தசைகள் விரிவடையும் போது 80 மில்லிமீட்டர் பாதரச அழுத்தமும் இருக்க வேண்டும். நமது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குருதி அழுத்த அளவில் உடனடி மாறுதல்களை உண்டாக்கும்.

நாற்பது வயதினை கடந்தவர்களுக்கும், பருமனான உடல் அமைப்பு உடையவர்களுக்கும், கடமைகள் அதிகம் உள்ள பணியில் இருப்பவர்களுக்கும், மன உளைச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் குருதி அழுத்தம் அதிகரிக்கும் என மருத்துவம் சொல்கிறது. இதனை உடனடியாக கவனிக்காது விட்டால் உயிருக்கே உலை வைத்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது.

சித்தர்கள் இந்த குருதி அழுத்தம் சீராக மருந்துகள் பவற்றை அருளியிருக்கின்றனர். இவை அனைத்தும் எளிமையானதும், செலவு குறைந்ததும் பக்க விளைவுகள் அற்றது என்பதுதான் சிறப்பு.

சர்பகந்த செடியின் வேரை சூரணமாக செய்து உண்டு வந்தால் குருதி அழுத்தம் குணமாகும் என்று தேரையர் கூறுகிறார்.

வெண்தாமரைப் பூவை பொடிப் பொடியாக நறுக்கி சட்டியில் போட்டு அரை லீட்டர் தண்ணீர் விட்டு நாலில் ஒன்றாக காச்சி, தேன் கலந்து காலையும் மாலையும் குடித்துவர இரத்தக் கொதிப்பு குணமாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர். மேலும் அவர் முளைக் கீரையை சாப்பிட்டு வந்தாலும் குருதி அழுத்தம் குணமாகும் என்கிறார்.

அடுத்த பதிவில் மற்றொரு தீர்வுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தலைவலி...

Author: தோழி / Labels:


மனதும், உடலும் பாதிக்கப் பட்டால் முதலில் வருவது தலைவலியாகத்தான் இருக்கும். அதீதமான மன அழுத்தம் முதலில் தலைவலியைத்தான் கொண்டு தரும்.

மன அழுத்தம் மட்டுமல்லாது, கண் , காது, பல் போன்ற உறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகள் கூட தலைவலிக்கு காரணமாய் அமையும். அதிகமான வெயில் அல்லது மழையில் நனைவதாலும் தலை வலி உண்டாகும்.

தலைவலி உண்டாக இப்படி பல காரணங்கள் இருந்தாலும் இவற்றிர்கான அடிப்படை தீர்வுகள் எளிமையானவையே....

மன அழுத்தம் தீர தனிமனித ஒழுக்கம், யோகம் போன்றவை உதவும்.

உடல் தூய்மை, முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை தீர்வாக இருக்கும்.

பொதுவான தீர்வுகள் இப்படி இருந்தாலும், தலைவலிக்கான மருந்துகள் பலவும் சித்தர்களினால் அருளப் பட்டிருக்கிறது.

சுக்கை அரைத்து, அதில் எலுமிச்சம்பழம் சாறு விட்டு குழைத்து நெற்றியில் பூச தலைவலி நொடியில் குணமாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

மற்றொரு பாடலில்

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஒரு படி, பசுவின் பால் ஒரு படி, அதில் கம்பஞ் சோறு நீர் சேர்த்து ஆதொண்டை இலைச்சாறு ஒரு படியும் சேர்த்து இரண்டு பலம் மிளகையும் உடைத்து போட்டு இதனை அடுப்பிலேற்றி மிளகு மிதக்கும் பக்குவத்தில் காய்ச்சி வடித்து எடுத்து பின்னர் அந்த மிளகாய் அரைத்து அதில் சேர்த்து அதிகாலையில் இந்த எண்ணெய் பூசி முழுகி பின்னரே உணவு உண்ண வேண்டும் இப்படி செய்தால் கடுமையான தலைவலி தீர்வதுடன் தலைவலி வராது என்கிறார் புலிப்பாணி.

இதுபோல ஒற்றைத்தலைவலிக்கு மருந்துவமுறை பற்றி முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். அதை இந்த இணைப்பில் படிக்கலாம்.

அடுத்த பதிவில் மற்றொரு பாதிப்புக்கான தீர்வுகளுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மன அழுத்தம் தீர்க்கலாமே!

Author: தோழி / Labels: ,

இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.

மனிதனின் உடல் நலத்தில் ஏற்படும் பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு அரம்ப புள்ளி இந்த மன உளைச்சல்தான். தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலசிக்கல்....பெண்களாய் இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்....புறவியல் ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.

எதனால் இந்த மன உளைச்சல் வருகிறது?,

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.

இவற்றிற்கான தீர்வுகளை சித்தர்கள் பலவாறாக கூறியிருக்கின்றனர், தன்னை அறிதல், தன்மை அறிதல் என பல பாடல்களை இந்த வலைப்பதிவின் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். மெய்யான வாழ்வியல் நெறிகளை முன்னிறுத்தும் அந்த பாடல்கள் இன்றைக்கும் அனைவருக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.

மனதின் இறுக்கம் தளர்த்தி சமநிலையில் வைத்திடும் யோகம் பற்றிய தொடரையும் முந்தைய பதிவுகளில் நீங்கள் காணலாம்.

மன இறுக்கம் அகல அகத்தியர் அருளிய ஓர் எளிய முறையினை கூறி இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

"கேளப்பா மௌனநிலை கொண்டுமேதான்
கெவனமுடன் "ஓம் ஹ்ரீம்" என்று
தாளப்பா ஓது ஓது மனமது அடங்கும்
கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள்
துன்பமுடன் மனக்கிலேசம் தீர்ந்துமே
அவனியில் நீயுமொரு சாந்தனாச்சே"

- அகத்தியர் -

தனிமையான ஓர் இடத்தில் மௌனமாக இருந்து "ஓம் ஹ்ரீம்" என்று தொடர்ந்து ஜெபிக்க மனது அடங்கி மனக்கவலைகள் தீரும். எதிரிகளால் உண்டான துன்பம் மறைந்து, மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள் நீங்கி இந்த உலகில் நீயும் ஒரு சாந்த குணமுள்ளவன் ஆகலாம் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் மற்றொரு பாதிப்புக்கான தீர்வுகளுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சமகால வாழ்வியல் நோய்களும் தீர்வுகளும்...

Author: தோழி / Labels:

சித்தர்களின் பழந்தமிழ் பாடல்களை பொருளாக்கம் செய்து பதிவிடுவது மட்டுமே என்னுடைய பதிவுகளின் நோக்கமில்லை.

சித்தர்கள் அருளிச் சென்ற பாடல்களில் பொதிந்திருக்கும் தகவல்கள், காலங்கள் பல கடந்தாலும் இன்றைக்கும் நமக்குத் தேவையான தீர்வுகளை தர வல்ல அறிவு களஞ்சியம்.இது மிகைப் படுத்தப் பட்ட வார்த்தை இல்லை. உண்மையான உண்மை!

இந்த நூல்களை அகழ்ந்தாய்ந்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ளதக்க, தேவையான விழிப்புணர்வோ அல்லது நெறிப்படுத்துதலோ பெரிய அளவில் இல்லாமல் போனது வருத்தமான நிதர்சனம். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட நம்மாலான வகையில் முயற்சிப்போம் என்கிற முனைப்பின் தொடர்ச்சியே இந்த வலைப்பதிவுகள்.....

பணத்தை மட்டுமே மையமாய் வைத்து வாழும் நிர்பந்தத்தில், மனிதனின் இயல்புகள், எண்ணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது. இத்தகைய இயல்பை மீறிய வாழ்க்கை முறையினால் உடலியல் ரீதியாகவும், மனவியல் ரீதியாகவும் வெகுவான பாதிப்புகளுக்கு உள்ளாகிறான். போட்டியும், பொறாமையும் சூழ்ந்த இயந்திர வாழ்க்கையில் இது பற்றி ஆரம்பத்தில் எவரும் கவலைப் படுவதில்லை.

மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை பாதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இயல்பினை மீறிய வாழ்க்கை முறை தந்த பரிசில்கள்தான் இவை. ஆங்கில மருத்துவ முறையில் இந்த பாதிப்புகளுக்கு அநேக தீர்வுகள் இருந்தாலும் அதன் பலன் மற்றும் செலவுகள் குறித்து பல விமர்சனங்கள் இல்லாமல் இல்லை.

சீனாவில் இன்றைக்கும் பாரம்பரிய மருத்துவம்தான் கோலோச்சுகிறது, ஆனால் அழகு தமிழில் அரிய தீர்வுகள் ஆயிரம் இருந்தும் அதை பயன் படுத்திக் கொள்ள முனையாதது நமது தவறுதான்... ம்ம்ம்ம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இம் மாதிரியான பாதிப்புகளுக்கான எளிய நிரந்தர தீர்வுகளை சித்த மகா புருஷர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்த வகையில், இனி வரும் சில பதிவுகளில் எந்திர மயமாகிவிட்ட சமகால வாழ்வியல் போராட்டத்தில் நம்மில் பலரும் அல்லல் படும், உடல் சார்ந்த நோய்களுக்கு சித்தர்கள் அருளிய தீர்வுகளை பட்டியல் இட உத்தேசித்திருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பழந்தமிழரின் அளவை முறைகள்...

Author: தோழி / Labels:

இந்த வலைப்பதிவின் மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - என் பார்வையில்!

Author: தோழி / Labels: ,

இரசவாதம், கொஞ்சம் பெரிய தொடராகி விட்டது . இந்த இடத்தில் இடை நிறுத்தி பிரிதொரு சமயத்தில் தொடரலாம் என நினைக்கிறேன். இந்த இடத்தில் எனது தனிப்பட்ட பார்வைகளை பதிவது அவசியமென நினைப்பதால் இந்த பதிவு.

மிக நிச்சயமாக இரசவாதம் என்பது அரியதொரு கலை இதை கிரகித்தல், பயிற்சி, சிந்தனை, திட்டமிடல், செயல்பாடு, என ஒவ்வொரு கட்டத்தையும் துல்லியமான திட்டமிட்டு செயற்படுத்தினால் உறுதியான பலன்கள் உண்டு. இன்றைக்கும் கூட இரசவாதம் மூலம் செயற்கை உலோகம் தயாரிப்பது நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

சித்த புருஷர்கள் இந்த அரும் பெரும் கலையினை மருத்துவத்திற்காக மட்டுமே பயன் படுத்தினார்கள். மனித உடம்பில் உள்ள ஒவ்வொருபாகத்திற்கும், அதில் உள்ள நுண்ணிய அணுக்களும் வலிமை மிக்கதாக இருக்கவும், அவற்றின் செயல் திறன் குறையாமல் இருக்கவும் உலோக மருந்துகளை செய்யவதன் பொருட்டே இந்த ரசவாத கலையை உருவாக்கினார்கள்.

இன்றும் சித்த மருத்துவத் துறையில் பலவிதமான பஸ்பங்கள், செந்தூரங்கள், குளிகைகள் போன்றவற்றை செய்வதற்கு, அனுபவம் உள்ள பல சித்த மருத்துவர்கள் செயற்கை உலோகதயாரிப்பு மூலமே அவற்றை செய்கிறார்கள்.

இராச வாதக் கலையின் ஒரு பகுதி தான் உலோகம் கட்டுவது. இதன் எல்லைகள் மிக விரிவானவை....

இன்றைக்கும் பழனியில் அருள் பாலித்திருக்கும் மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவ பாஷாணங்களின் கட்டால் உருவாகியது. இந்த நவபாஷன கட்டும் ஒரு ரசவாதமே, பாசானங்களை திடமான உலோகம் போல கட்டுவதுதான் நவ பாஷாணக் கட்டு ஆகும். ரசவாதம் என்பது பொய் என்றோ, பித்தலாட்டம் என்றோ கூறுவோருக்கு பழனியப்பனையே பதிலாக காட்டலாம்.

சித்தர்களால் உருவாக்கப் பட்ட இந்த அரிய ரசவாதக் கலையை ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தங்களின் நுண்ணறிவால் தான் வாழும் சமூகத்திற்கு பயனுள்ளதாகக்க வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை முன் வைத்து ஆய்வுகள் பல செய்திடப் படுதல் வேண்டும்.

இதை வாசிக்கும் எவரேனும் ரசவாதம் பற்றிய புதிய சிந்தனையுடன் புது வழிகளையும் உருவாக்கிடும் முயற்சியில் ஈடுபட்டால் அதுவே எனது பதிவுகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ! நடப்பவை யாவும் நல்லவையாகவே இருக்கவேண்டும் !

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - பரசிவத்தி ரசமணி, நாதவேதை ரசமணி...

Author: தோழி / Labels: , ,

இந்த பதிவில் கொங்கணவர் வகைப் படுத்திய பரசிவத்தி ரசமணி ம்ற்றும் நாதவேதை ரமணியின் பயன்களை பற்றி பார்ப்போம்.

பரசிவத்தி ரசமணி.

"ஆன்மீகப் பரசி வத்தில்
அறிவெல்லாம் தீபம் போலாம்
தாமினி வெள்ளியாய்க் காட்டும்
தனி மணி சித்திக் கேளு
வாமினி செனங்கள் செத்து
மறு சென்மம் எடுத்த தெல்லாம்
ஓமினி யுள்ளே யாற்றி
உண்மையைக் கட்டும் காணே"

- கொங்கணவர் -

பரசிவத்தி என்னும் மணியானது, அறிவுச் சுடரோளியைப் பிரகாசிக்கச்செய்யும் இதனால் பரம்பொருளானது ஜோதி ரூபமாக கண்களுக்கு தோன்றும் என்றும், மனிதர்களது முன்ஜென்மமும், பின்னர் எடுக்கப் போகும் மறு ஜென்மங்களும் தெரியவரும் என்கிறார் கொங்கணவர்.


நாத வேதை ரசமணி.


"காணு நீ நாத வேதைக்
காட்டுகின்ற முறைமைக் கேளு
பூணு நீ சூதங் கட்டிப்
புகட்டிச் சாரணைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத் தட்ட
வாமினி சாத்தான் கேட் கில்
அம்மட்டும் வேதையாமே"

- கொங்கணவர் -

"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"

- கொங்கணவர் -

நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்க்கு முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாக கேட்க்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது செங்கல், சுக்கான் கல், மணல், போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர்.

ஆகவே இவற்றின் மூலம் இரச மணிகளை முறையாக செய்து முடித்ததால் எவ்வளவு சிறப்பான பயன்களைப் பெறலாம் என்பதை கொங்கணவர் வார்த்தைகள் மூலமே அறிந்து கொண்டோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - அட்சய ரசமணி, கெவுன ரசமணி...

Author: தோழி / Labels: , ,

கொங்கணவர் அருளிய அட்சய ரசமணி மற்றும் கெவுன ரசமணிகளைப் பற்றி இந்த பதிவுகளில் பார்ப்போம்.

அட்சய ரசமணி.


"ஆமினி அட்ச யத்தின்
அம்மணி விபரம் கேளு
தாமினி தனங்கள் கூச்சு
தனித்த தானியங்கள் கூச்சு
சாமினி அன்னம் கூச்சு
சிறந்திடும் பொருள்கள் கூச்சு
அட்சய மணியை வைக்க
எடுக்கவும் தொலயா தாமே"

- கொங்கணவர் -

அட்சய மணியின் விபரத்தை சொல்கிறேன் கேள். தனம், தானியம், அன்னம், சிறப்பான பொருட்கள் இவைகள் மீது இந்த மணியை வைத்தால் எடுக்க எடுக்க அவை குறையாது இருக்கும் என்கிறார் கொங்கணவர்.


கெவுன ரசமணி.


"தொலையாத கவுன மோடுஞ்
சூழ் மணிக் குணத்தைக் கேளு
அலையாத மனது தானு
மகண்டத்தை அடுக்கக் காட்டும்
நிலையாத சமாதி யெல்லாம்
நிலைக்கவும் நேர்மை காட்டும்
கலையாத உமிழ் நீர் வாங்கி
காயமும் சித்தியாமே"

- கொங்கணவர் -


ஆகாய வழியாக கவுனம் ஓடக் கூடிய மணியின் குணத்தைக் கேளு, மனதை நிலைப்படுத்திக் கொண்டு இந்த மணியை வாயிலிட்டுக் கொண்டு நினைத்தவுடனே அண்டத்தை சுற்றி வரலாம், அத்துடன் சமாதிநிலை உடனே கைகூடும் என்றும், இதை வாயிலிட்டு உமிழ்நீரை உண்டு வந்தால் காய கற்பமாகும் என்கிறார் கொங்கணவர்.

அடுத்த பதிவில் பரசிவத்தி ரசமணி மற்றும் நாதவேதை ரசமணிகளின் பயனை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - காமதேனு ரசமணி, போக ரசமணி, சந்தான ரசமணி..

Author: தோழி / Labels: , ,

இந்த பதிவில் கொங்க்ணவர் வகைப் படுத்திய காமதேனு ரசமணி, போக ரசமணி, சந்தான ரசமணிகளைப் பற்றி பார்ப்போம்.


காமதேனு ரசமணி.

"அறிந்தி லேன் காம தேனு
மணியின் மார்க்கன் கேளு
மனதுள்ளே நினைத்த தெல்லாம்
நீட்டியே முன்னே வைக்கும்
குறைந்தொன்றும் போகதப்பா
இதனை நீ வாயில் வைத்தால்
அறைந் தின்தறூ விற்சொன்னேன்
அப்னே கண்ட பின்பே "

- கொங்கணவர் -

காம தேனு என்னும் மணியைப் பற்றிக் கூறுகிறேன் இந்த மணியை வாயில் போட்டுக் கொண்டு நாம் எதை எல்லாம் நினைக் கின்றோமோ அதெல்லாம் அப்படியே நினைத்த வுடன் எந்த வித குறையுமில்லாமல் எங்கள் முன்னே தோன்றும் என்று சொல்லும் கொங்கணவர் இந்த மணியை தான் செய்து அதன் பலன் அறிந்த பின்னரே கூறுகிறேன் என்கிறார்.


போக ரசமணி.

"கண்டபின் போகினிப்பாம்
கடுமணிக் குணத்தைக் கேளு
தாண்டிய புஷ்ப மாம்பை
தணித்திடு வாசமெல்லாம்
ஒண்டிய கட்டில் மெத்தை
உறவாகும் பெண்கள் சூழ
கொண்டிடும் போகம் பண்ண
கொடுத்தி டும்பாரு பாரே"

- கொங்கணவர் -

போக மணியின் குணத்தை சொல்கிறேன், நறுமணமுள்ள மலர்கள், வாசனத்திரவியங்கள், கட்டில், பஞ்சு மெத்தை, உறவாகும் பெண்கள், ஆகியவைகளை நினைத்தவுடன் கொடுக்கும் வல்லமை பெற்றது இந்த மணி என்கிறார் கொங்கணவர்.


சந்தான ரசமணி.


"பாரு நீ சந்தா னத்தின்
பருமணி மார்க்கம் கேளு
வாரு நீ துண்டு துண்டாய்
மனிதரை வெட்டிப் போட்டு
சேரு நீ குளிகை காட்டி
செனதிலே பொருந்திப் பேசும்
காரு நீ மணி யினாலே
கடும் யோகா சித்தியாமே"

- கொங்கணவர் -

சந்தான மணி பற்றி சொல்கிறேன் கேள், மனிதர்களை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டு அவற்றை மீண்டும் பொருத்தி இந்த மணியைக் காட்டிய மறுகணம் அத்துண்டுகள் ஒன்றாக சேர்ந்து உயிர் பெற்று பேசும், அத்துடன் இந்த மணியால் கடும் யோகா சித்தியும் கிடைக்கப்பெறும் என்கிறார் கொங்கணவர்.

அடுத்த பதிவில் அட்சய ரசமணி மற்றும் கெவுன ரசமணி பற்றிய விவரங்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - சொரூப ரசமணி...

Author: தோழி / Labels: , ,

இனி வரும் பதிவுகளில் கொங்கணவர் கூறியுள்ள் எட்டு விதமான வீரிய ரசமணிகளின் பண்புகளையும், அவற்றின் பயன்களையும் பார்ப்போம். அந்த வகையில் முதலில் சொரூப ரசமணி.


"வேளுநீ சுரூப மான
விளங்கிய மணி யின் விந்தைத்
தாளுநீ வாயிற் போடவே
தனிச் சூடன் தீபமாகும்
தீபம் போல் நிக்கும் தேகம்
சிதையாமல் தத்தியோடும்
கோபம் போம் முளையும் போம்
கொடிய வாசனையும் போம்
தாபம் போம் மயக்கம் போம்
தன்னையும் எடுக்கும் போம்
ரூபம் போம் சாயை போம்
நொடிக்குள் சித்தி பாரே"

- கொங்கணவர் -

சொரூப மணியின் விந்தையைக் கூறுகிறேன், இந்த மணியை வாயில் இட்டுக் கொண்டால் தேகமானது கற்பூர தீபத்தின் சுடர் போல தக தகவென்று பிரகாசிக்கும் நிமிர்ந்து நின்று சிதறாமல் ஒளிவிடும் தீபம் போல இருக்கும் அத்துடன், கோபம், ஆசை, சட நாற்றம், மனதின் மயக்கங்கள், இச்சைகள் அனைத்தும் போகும். இவையாவும் நொடியில் சித்தியாகும் என்று சொல்லும் கொங்கணவர் மேலும் தொடர்ந்து,

"சித்தியாம் ஞான சித்தி
சிறந்து வாஇத்தான் முன்னே
இத்தியா மறிய மாகில்
எளிதிலே ஞானம் வாரா
யேத்தியே நோக்க நோக்க
வெளுக்கவா சனையாற் கேட்டு
பத்திய மனமும் விட்டு
பட்டம் போலாடும் காணே
காணிந்த மணியைப் போட்டால்
கையிலே சிக்கும் போதம்
பூணிந்த மூல நாதருக்கு
பொருந்திய நந்தி சொன்னார்
வாழ்நந் திஎன்னக்கு சொல்ல
வளமாக பார்த்துக் கொண்டேன்
தாணிந்த போக மூர்த்தி
தன்பாத மறிந்தி லேனே"

- கொங்கணவர் -

சொரூப ரசமணியால் ஞான சித்தி, யோகா சித்தி கை கூடும் இதை முறையாக செய்யாதவர்களுக்கு இலகுவாக ஞானம் கிடைக்க வேறு மார்க்கம் இல்லை, இதை முறையாக செய்து வாயில் போட்டுக் கொண்டு மனக்கண்ணில் பார்க்க பூர்வ ஜென்ம பந்தம், உலக மாயை அனைத்தும் நீங்கும், இல்லையெனில் மேல்லோகத்துக்கும் கீழ் லோகத்துக்கும் இடையில் ஆன்மாவானது பல பிறப்புகள் எடுத்து பட்டம் போல் ஆடிக்கொண்டிருக்கும் என்று சொல்லும் இவர் இந்த மணியை செய்யும் முறையானது நந்தி தேவர் திரு மூலருக்கு சொன்னார், நந்தி சொன்ன இந்த முறையை என் குருநாதர் போகரின் அருளால் நானும் அறிந்து கொண்டேன் என்கிறார்.

அடுத்த பதிவில் காமதேனு ரசமணி, போக ரசமணி, சந்தான ரசமணிகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில்அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அண்மையில் அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் எம்.சரவண குமார் அவர்கள் சீரும்,சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்...எண்ணங்களைப் பழுக்கவிட்டு
முதிர்ந்த அனுபவத்தை

அடித்தளமாக்கி இளமைக்

காலத்திலேயே - பல

அத்தியாயங்கள் படைத்த

"பங்குவணிகனே"


அடிக்கடி உம்முடன்

அளவளாவி மகிழ்ந்து

அரிய தகவல் கற்றிட

இணையமெனும் தோழன்

இணைத்தான் எம்மை...


முதல் சந்திப்பிலேயே

பெரியோர் முதல் சிறியோர் வரை

சரிசமனாய் மதிக்கும் - உந்தன்

உயரிய பண்பு கண்டு

வியந்து தான் போனேன்..!


கைபிடித்து நடக்கும் குழந்தையாய்

கவரில் போகும் கடிதமாய்

இலட்சியம் நோக்கி

நடைபோட - பலருக்கு

பாதை போட்டுத்தந்து

வாழ வழிகாட்டி

வளர உரம் ஊட்டி

அழுத்திச் சொல்லித்தந்த

"ஆசானே"


வாழ்த்தும்

வயதுமில்லை..

வாழ்த்திய

அனுபவமும் இல்லை..

இளையவள் இவள்

வாழ்த்துகிறேன் ஏற்றிடுவீர்!


நீண்டதொரு நல் வாழ்வில்

நிலையான புகழை ஈட்டி

ஆண்டவர்கள் துணைகொண்டு

அடுக்கடுக்காய் வெற்றி கண்டு

காண்பவர் வியக்கும் வண்ணம்

பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - வீரியமான ரசமணிகள்...

Author: தோழி / Labels: ,முந்தைய பதிவில் ரசமணி, ரசலிங்கம் தயாரிக்கும் முறையினை பார்த்தோம். ரசமணிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, எல்லா வித தொழிற் பாட்டுகளுக்கும் ரசமணியினை உருவாக்கலாம். இரசத்தை எந்த வகையில் கட்டி அதற்க்கு என்ன சாரணை கொடுக்கிறோமோ அதற்கு தக்கபடி அதன் பலன் அமையும்.

அதாவது ரசத்தை சுத்தி செய்வதில் துவங்கி அதை எந்த வகை மணியாகக் கட்டி அதற்கான வீரியத்தை கொடுத்து வைக்கிறோமோ அதற்க்கு ஏற்ப பலன் கிடைக்கும். இவ்விதமான ரசமணிகளை உருவாக்குவதைப் பற்றி பல குறிப்புகள் இருக்கின்றன.

கொங்கணவர் எட்டு வகையான சக்தி வாய்ந்த ரசமணிகளை உருவாக்க முடியும் என்றும் அவற்றை தயாரிக்கும் முறைகளையும் கூறியிருக்கிறார். இந்த பதிவில் அவர் கூறியுள்ள வீரியம் அதிகரிக்கப்பட்ட ரசமணிகளின் வகைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

1. சொரூப ரசமணி.
2. காமதேனு ரசமணி.
3. போக ரசமணி.
4. சந்தான ரசமணி.
5. அட்சய ரசமணி.
6. கெவுன ரசமணி.
7. பரசிவத்தி ரசமணி.
8. நாத வேதை ரசமணி.

என்பனவாகும்.

இவற்றின் தன்மைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அவரின் பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். அவற்றை இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - ரசமணியும், ரசலிங்கமும்...

Author: தோழி / Labels: ,

பாதரசம் நீர்மை தன்மையான ஓர் தனிமம். இதை திண்மமாய் மாற்றிட நவீன அறிவியல் பல கோடி ரூபாய் செலவழித்து, பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செலவு அதிகம் வைக்கும் வழிமுறைகளை கண்டறிந்தனர்.

ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இதற்கான எளிய முறையினை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இதன் அருமை பெருமைகளை உணராது போனது நமது குற்றமே....

ரசவாதத்தின் துவக்க நிலையே பாதரசத்தினை கட்டுவதாகும். இதற்கென பல முறைகள் இருக்கின்றன. நமது தேவைக்கேற்ற வகையில் இந்த முறைகளை பயன் படுத்திக் கொள்ளலாம்.

பாதரசத்தை திண்மமாக்கி அதன் மூலம் ரசமணி, ரசலிங்கம் இவற்றை உருவாக்கலாம். சித்தர்கள் கூறியுள்ள முறைப்படி உருவேற்றிய பின்னர் இந்த ரசமணியை உடலில் அணிந்து கொள்ளலாம், பூசையில் வைத்தும் பூசிக்கலாம். இது பல்வேறு நல்ல பலன்களை தரும் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர். ரசலிங்கம் என்பது பூசைக்கு மட்டுமே உரியது. இதை வைத்து வணங்குவதால் நலம் விழையும் என கூறுகின்றனர்.

சித்தர் மொழியில் துரிசு எனப்படும் காப்பர் சல்பேட்டை தொடர்ச்சியாக புடம் போடுவதன் மூலம் கிடைக்கும் சுண்ணத்தை, விரலி செடியின் இலையுடன் சேர்த்து அரைத்து கிடைக்கும் சாற்றினை, சுத்தி செய்யப் பட்ட பாதரசத்துடன் சேர்த்து ( 2:1 என்ற விகித அளவில்) கல்வத்தில் இட்டு அரைக்க ரசம் கட்டும்.

திரைந்த நிலையில் இருக்கும் ரசத்தை தேவையான அளவில் உருட்டி மணிகளாகவோ, லிங்கமாகவோ செய்து கொள்ள வேண்டும். எளிதாக சொல்லி விட்ட இந்த முறை, செயற்ப்பாடு அத்தனை இலகுவானதில்லை, நிறைய நேரமும், பொறுமையும், செலவும் பிடிக்கும் ஒன்று. முறையான பயிற்சி மற்றும் அனுபவம் நிறைந்தவர்களால் மட்டுமே இதை செய்ய இயலும்.

சமீபத்தில் இந்த முறையில் நான் முயற்சித்ததில் குருவருளால் ரசம் கட்டியது. அதனைக் கொண்டு நான் உருவாக்கிய ரசமணி மற்றும் ரசலிங்கத்தின் படங்களை இத்துடன் இணைத்திருக்கின்றேன்.

இரசமணி...இரசலிங்கம்...
ரசமணி தொடர்பான மின்னஞ்சல்களை தவிர்க்கவே விரும்புகிறேன். இந்த பதிவுகளின் நோக்கம் தகவல்களை பகிர்ந்து கொள்வது, மற்றும் இது தொடர்பான எனது அனுபவங்களை பதிந்து வைப்பது மட்டுமே, வேறெந்த நோக்கமும் எனக்கு இல்லை. இதை புரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.

ரசமணி செய்வதை பற்றி யூ ட்யூபில் கிடைத்த வீடீயோ ஒன்றினையும் பாருங்கள்...
சித்தர்கள் இராச்சியத்தின் 200 வது பதிவு இது, இந்த நேரத்தில் இந்த பதிவின் வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை செய்து தரும் நண்பர் திரு. விவேகானந்தன் அவர்களுக்கும், மற்றும் இந்த முயற்சியில் தொடர்ந்து எனக்கு ஊக்கமும், ஆலோசனைகளை அளித்துவரும் நண்பர்களுக்கும் என்னுடன் இந்த பதிவில் இணைந்திருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...