சிருங்கேரிக்கு அருகில் வாலைபுரம் கிராமத்தில் சிறந்த சிவபக்தனான வாமதேவன் என்னும் பிரபலமான வணிகன் ஒருவன் இருந்தான்.தனது கிராமத்திலேயே சிவனுக்கு மிகப் பெரிய ஆலயம் ஒன்று அமைக்க வேண்டுமென விரும்பினான்.
தேர்ந்த சிற்பிகளையும், கட்டிடகலை வல்லுனர்களையும் வரவழைத்து, ஒரு நல்ல நாளில் ஆலயப் பணிகளைத் துவங்கினான்.
ஆகம விதிகளின் படி கோவில் கட்டுவது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? அவனது சேமிப்புக்கள் எல்லாம் செலவு செய்தும் ஆலயப் பணிகள் நிறைவடைய வில்லை.
இதனால், ஆலயப் பணியை நிறைவு செய்ய வேறு பல செல்வந்தர்களின் உதவியை நாடினான். இங்கேதான் அவனுக்கு சோதனைகள் ஆரம்பமாகியது.
செல்வந்தனாய் இருந்தவன் தற்போது மிகவும் வறிய நிலையில் இருப்பதனால், தான் இழந்த செல்வங்களை நன்கொடை என்ற பெயரில் மீட்டுக் கொள்ள முனைவதாக எண்ணிய அவர்கள் நன்கொடை தர மறுத்து விட்டனர்.
எவ்வாறு கோவில் பணிகளை பூர்த்தி செய்வதென்று வருந்தியிருக்கையில் அந்தக் கிராமத்திற்க்கு ஒரு முனிவர் வந்திருப்பதாக அறிந்து அவரிடம் சென்று தனது நிலைமையைக் கூறினான்.
அதற்க்கு அந்த முனிவர், "நீ ஆலயத்தைக் கட்டி முடிக்கவே பொருள் தேடுவது உண்மை என்றால், பெருமை பொருந்திய சதுரகிரி மலையில் தவத்தில் இருக்கும் சித்தரான காலங்கி நாதரிடம் சென்று உனது குறையைக் கூறு, அவர் உனக்கு வழிகாட்டுவார்" என்றார்.
தனது துயரம் தீர வழிகிடைத்த மகிழ்ச்சியில் முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு, சதுரகிரி மலைக்குச் சென்றான்.அங்கு காலங்கி வனத்தில் புலித்தோலாசனத்தில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருந்த காலங்கி நாதரைக் கண்டு வணங்கி நின்றான்.
கண்விழித்த காலங்கி நாதரும் வாமதேவனை கண்டு, அவன் யாரென்றும், வந்த காரணம் என்னவென வினவினார். அவனும் தான் மேற்கொண்ட கோவில் திருப்பணி பற்றிச் சொல்லி அதை கட்டி முடிப்பதற்கான உதவி வேண்டி அவரை சந்திக்க வந்ததாக கூறினான்.
சித்தருக்கு அவனின் வார்த்தைகளில் உள்ள உண்மை தெரிந்தும், அவனைச் சோதிக்க எண்ணி மௌனமாக இருந்தார்.
சித்தரின் மௌனத்தை பார்த்த அவன் அவருக்கும் தன மேல் நம்பிக்கை இல்லை என்று எண்ணி, அவர் உதவும் வரை அங்கேயே இருப்பது, உதவி கிட்டவில்லை என்றால் அவர் காலடியில் உயிர் துறப்பது என்று முடிவு செய்து அங்கேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து வரலானான்.
அவனின் திருப்பணி மீதுள்ள பற்றையும்,தீவிரத்தையும்,தூய உள்ளத்தையும் கண்ட சித்தர் அவனுக்கு பொருள் வேண்டி ரசவாதம் செய்யத்தொடங்கினார்.
உரோம வேங்கை, உத்திர வேங்கை, கருநெல்லி உட்பட பல மூலிகைகளையும், முப்பத்திரண்டு வகைப் பாஷாணங்களையும், முப்புக்களையும் கொண்டு வகாரத் தைலம் தயாரித்து, அதன் மூலம் உலோகங்களை தங்கமாக்கி வேண்டியமட்டும் வாம தேவனுக்குக் கொடுத்து, ஆசிவழங்கி வழியனுப்பினார். அவனும் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பி கோவில் திருப்பணியினை சிறப்பாக முடிவித்தான்.
ஆலயப் பணிக்காக அதிகளவு பொன் வேண்டி தயாரிக்கப் பட்டதால் வகாரத் தைலம் மீதம் இருந்தது. காலங்கிநாதர் மீதமிருந்த தைலத்தை, அங்கு பூமிக்கு கீழ் கற்கிணறு ஒன்றை அமைத்து அதில் ஊற்றி கற்பலகையால் மூடி நான்கு திசைகளுக்கும் நான்கு தேவதைகளைக் காவல் வைத்தார். பொருளாசை கொண்டோர் எவரும் அந்தக் காவலை மாந்திரீக பூசை முறை மூலம் துஷ்ட தேவதைகளைக் கொண்டு முறியடித்து திருட்டுத் தனமாக அந்தத் தைலத்தை யாரும் கொண்டு போகக் கூடாது என்று கருப்பண்ண சாமியிடமும் , பேச்சி அம்மனிடமும் தலைமைக் காவல் பொறுப்பைக் கொடுத்தார்.
சதுரகிரியில் பிலாவடிக் கறுப்பர் ஆலயத்தின் பின்புறம் இன்றைக்கும் அந்த வகாரத் தைலக் கிணறு உள்ளது என்றும், நம் போன்ற சாமானியர்களுக்கு அது தெரியாது என்றும் சொல்கிறார்கள்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...