முதல் சித்தர் யார்?

Author: தோழி / Labels: ,

பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை.

அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......,

"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்"

- அகத்தியர் -

"சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"

- தேரையர் -

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல"

- போகர் -

"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"

- தன்வந்திரி -

"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவான்  பாரே"

- யூகிமுனி -

இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பரம்பொருள் சோதிமயமானது...

Author: தோழி / Labels: , ,
மேலான பரம் பொருளைப் பற்றி சித்தர்களும் சரி, ஏனைய பிற சைவப் பெரியவர்களும் சரி சோதி வடிவானது பம்பொருள் என்றே சொல்கின்றனர். ராமலிங்க அடிகளாரும் கூட இறைவனை அருட் பெரும் ஜோதி என்று தான் வர்ணிக்கிறார். ஆக, பரம் பொருள் சோதிமயமானது என்பதே சிவனடியார்களின் தீர்மானம்.

பட்டினத்தாரும் இதே போல இறைவனை சோதி என்றே குறிப்பிடுகிறார். இறைவன் பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சோதியானவன். இப்படியான சோதியை சரியாக புரிந்து சிந்தையில் வைக்காதவர்கள் மூடர்கள் என்று சொல்கிறார் பட்டினத்தார்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச்சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பார். கருத்தில்வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே".

இனி வரும் பதிவுகளில் பதினென் சித்தர்களைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels:

தாயத்து அல்லது தாயித்து எனப்படுவது, மந்திரத் தகடு அடங்கிய அணி அல்லது ஆபரணம் ஆகும். இவை தனிப்பட்ட மனிதர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் பொருட்டு உருவாக்கப் படுபவை. இவை பெரும்பாலும் சிறிய உலோக உருளை வடிவத்தில் இருக்கும். இதனுள் சிறிய யந்திர தகடு, மந்திரங்களினால் உருவேற்றப் பட்டு அடைக்கப் பட்டிருக்கும்.

தாயத்துகளில் பயன் படுத்தப் படும் யந்திரங்களுக்கும் பூஜையில் வைத்து வணங்கப் படும் யந்திரங்களும் வெவ்வேறானவை......தாயத்துகளுக்கான யந்திரங்கள் உருவத்தால் சிறியவை, மேலும் இதனுடன் வேர், புனுகு, ஜவ்வாது , திருநீறு, மேலும் சில எண்ணெய் வகைகள் சேர்த்தே தாயத்தில் அடைப்பதுண்டு. தாயத்தில் அடைக்கப் படும் யந்திரங்கள் குறிப்பிட்ட சில மனிதர்களின் குனங்களுக்கேட்ப தொழிற படுபவை, ஆனால் ஓரிடத்தில் வைத்து வணங்கும் யந்திரங்கள் பெரும்பாலும் பரந்த சக்தியை உடையவை.

உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல தாயத்துக்களை பழக்கத்தில் வைத்திருந்தனர்.

இவை பெரும்பாலும் தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டவை. கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும், உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடம் காப்பாற்றவும், மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்திய மருத்துவ தாயத்துகளையும் உருவாக்கி பயன் படுத்தி வந்தனர். இவற்றை தயாரிக்கும் முறைகள் ரகசியமானவை. இதன் விவரங்களை தங்களின் பாடல்களில் சொல்லியிருக்கின்றனர்.

தற்போது வணிக ரீதியாக விற்கப் படும் தாயத்துகள் பலவும் போலியானவை.இவை பலருக்கும் உரிய பலனை அளிக்காததனால் தாயத்துகள் குறித்த அவநம்பிக்கை பொதுவில் மேலோங்கி இருக்கிறது. ஆனால் சித்தர்கள் அருளிய முறையில் உருவாக்கப் படும் தாயத்துக்கள் சக்தி வாய்ந்தவை.அவை குறித்து பிரிதொரு சமயத்தில் விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...

Author: தோழி / Labels: , , ,"அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே".

"ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே".

"அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே".

"சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே".


என்று சக்கரம் வரையும் முறையை சொல்லும் திரு மூலர் (மாதிரிப் படம் கீழே)"அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே".

"எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே"


இந்த சக்கரத்தை பனை ஓலையிலோ, அல்லது செப்பு தகட்டிலோ கீறி தூய இடத்தில் வைத்து சிவாயநம என்று கூறி விளக்கேற்றி வைத்து தூபங்காட்டி வணங்கி வந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கி நலனுடன் முக்தி பெற வழியாகும் என்கிறார். தூய மனதுடன் வழிபட்டால் கிடைக்காதது என்று எதுவும் இல்லை என்றும், இந்திரனிடம் இருப்பது போல பொருளும் , அட்டமா சித்தியும், முத்தியும் கை கூடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவூராரின் ஐங்கோண யந்திரம்...

Author: தோழி / Labels: , ,

"தானேதா னாறுவரை நேரே கீறி
தன்மையா யாறுவரை குறுக்கே கீறி
கோனேகே லிருபத்தியஞ்சு மாச்சு
கொற்றவனே யறை தோறும் பீடங்கேளு
தேனே பார் முதலரையில் முக்கொனந்தான்
தெளிவாக மறுவறையில் நாற்கோணம் தான்
மானே கேளடுத்த ரண்டை வீட்டில்
மயக்கமின்றி வட்டமத்தை போடு போடு
போடே நீ அடுத்த வரையங்கோணம் பார்
பொன்னவனே யாரு கோணம் அடுத்தவீடு
நீஎநீ நடுவ ணையாம் பிடித்த மாறு
நாயகனே வரின்தொரும் மாற்றிக் கொள்ளு
வாடாதே வயநமசி என்று போடு
வகையாக நடுவனையாம் முன்போல மாறு
தேடாதே வகரத்தில் றீயும் போடு
தெளிவாக யாக்ரத்தில் ஸ்ரீயும் போடே
போடவே போட்டவுடன் சொல்லக் கேளு
புகலான நாகரத்தில் ஐயும் போடு
தேடவே மகரத்தில் கிலியும் போடு
நேர்மையாய் சிகாரத்தில் சௌம்போடு
நாடல்லாய் ஏ, ஒ, அ, இ, உ போடு
வாகாத வகாரத்தில் லம்தானையா
சஸ் வகுர சொல்வேன் கேண்மா
மாயவ யகரத்தில் சௌம்போடு
போட்டவுடன் நகரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனே மகாரத்தில் ஈம தான் போடு
நலமாகப் போட்டு மல்லே நவிலக் கேளு
தாட்டிகமாய் இவையெல்லாம் கோர்வையாக
தப்பாமல் அறை தோறும் வரைந்து கொண்டு
காட்டுவேன் நடுவணைய முன்போல் மாறு
கருத்தாக வரை தோறும் இப்படியே மாறே"

என்று ஐங்கோண யந்திரம் வரைவதை சொல்லும் கருவூரார் (படம் கீழே)
"மேலான புத்தி கொண்டு மாறாமல்
கண்டு மாயா தானடைக்க யந்திரந்தான்
பாலகா தேயுமல்லோ மகிமை மெத்த
பாருலகில் உனக்கீடு சொல்லப் போமோ
காலான கால் கண்டு நின்று பூசி
கைகண்ட வசியமடா இன்னும் கேளே
கேளப்பா கீழ் திசையில் புலிதோலப்பா
கேடியான ஆசனத்தில் வீற்றிருந்து
நாளப்பா போகாது ருத்ர மாலை
ஆளப்பா செபன்சே வாய்மலர ரோமமல்லி
ஆளப்பா சதாசிவம் போலிருந்து கொண்டு
அடைவாக பூசிக்க வசியமாகும்
கண்மணியே கலங்காதே ஆடிப் பாரே
பாரப்பா அதிசயமா இந்த போக்கு
அவனியிலே கிடையாது சொன்னேன்
சேப்பா செகமெங்கும் கிடையாதையா
கோடியில் ஒருவனல்லோ அறிவானிதை
கோடி சித்தும் கனத்துக்குள்ளே வருமே
நாடிப்பார் பெரியோரை வணங்கி நில்லு"


மேற் சொன்ன பாடல்களின் படி, ஒரு காரீயத் தகட்டிலோ, அல்லது பொன் அல்லது செப்புத் தகட்டிலோ, இந்த யந்திரத்தைக் கீறி தூய இடத்தில் வைத்து ஊது பத்தி , சாம்பிராணி கற்பூரதீபங்காட்டி, வழிபட வேண்டும். கிழக்கு நோக்கி புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து, ருத்திராட்ச மாலை கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.(இன்றைக்கு புலித்தோல் ஆசனம் தேடிப் போனால் ஜெயிலில் களி திங்க வேண்டியிருக்கும் என்பதால் புலித் தோலாசனம் தரும் உஷ்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, அதற்கு மாற்றாய் சணல் கோணியை பயன் படுத்தலாம்.)

"ஓம் றீம் ஸ்ரீம் ஐம் கிலீம் சவ்வும் வயநமசி சர்வலோக வாசியாய சிவ சிவ சுவாஹா"

என்ற மந்திரத்தை தினசரி 1008 தடவை வீதம் ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சொல்லி வந்தால் இது சர்வ லோக வசியமாகுமாம். இதை முறையாக செய்பவரை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...

Author: தோழி / Labels: , ,இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.

மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.


என்ற திருமந்திர பாடல் வரிகளில் திரு அம்பலச் சக்கரம் தயாரிக்கும் முறையை தெளிவாகக் கூறுகிறார் திருமூலர். இந்த பாடல் வரிகளைக் கொண்டு உருவாக்கப் பட்ட திருவம்பல சக்கரத்தின் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.


இந்த சக்கரத்தை தங்கத் தகட்டில் அல்லது செப்புத்தகட்டில் கீறி தூய இடத்தில் வைத்து னமும் மாலை வேளைகளில் நமசிவாய என்று 1008 தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு, அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் சொல்லி உருக்கொடுத்தால் இந்த சக்கரம் தொழிற்படத் தொடங்குமாம்.

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

இந்த திருஅம்பலச் சக்கரமே பூமி முழுதும் பரந்துள்ளது, இதுவே இறைவன் நடனம் புரியும் பரந்த வெளியிலும் உள்ளது திருஅம்பலச் சக்கரத்தை எமக்கு நந்தி தேவர் அருளினார், தாயிடமிருந்து கன்று பால் எடுப்பது போல திரு நந்தி தேவர் இறைவனிடமிருந்து பெற்று எனக்கு அருளினார்.

திரு அம்பலச் சக்கரத்திற்கு பல செயற்பாடுகள் உண்டு திருவம்பலச் சக்கரதினுள்ளே ஐந்து வகையான குறிகள், ஐந்து வகையான தொழில்கள் உண்டு.

இந்த திருவம்பல சக்கரம் இறைவனின் கூத்தின் வடிவமாக விளங்கும். இதை வைத்திருப்பவர் பெறும் பயன்கள் எழுத்தில் அடங்காதவை என்கிறார் திரு மூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் யந்திரங்கள்...

Author: தோழி / Labels: ,

ஒலிக்கும் உருவம் உண்டென உணர்ந்த சித்தர்கள், அந்த ஒலியின் மூலமான எழுத்துக்களின் அதிர்வையும், சக்தியையும் தங்களின் தேவைகளுக்கு பயன் படுத்தினர். ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டான அதிர்வை அல்லது சக்தியினை மற்ற எழுத்துக்களோடு சேர்க்கும் போது சக்தி உருவாக்கம் நடக்கிறது. இதை மந்திரம் என்றனர்.

எழுத்துக்கள் மந்திரங்களாக உருவாக்கும் போது அவை உயிர் பெற்று வருகின்றன. அவை தனது சக்தியால் சுற்றுப்புற சூழலிலும் மனிதர்களிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் போன்ற மந்திரங்கள் முழு மனதுடன் உச்சரிக்கும் போது உடலில் உள்ள அவ்வளவு நரம்புகளிலும் ஒரு அதிர்வு உண்டாவதை அவதானிக்கலாம். இந்த மந்திரங்களை நாங்கள் உச்சரிக்காவிட்டாலும் அவற்றை எழுதிய ஓலை அல்லது தகடை அருகில் வைத்திருப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பும் நன்மையையும் உண்டாகும்.

எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் சக்தி உள்ளது என்றும், எழுத்துக்களையும் எண்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சக்கரமாக அமைத்து அதற்க்கு உண்டான குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவில் ஜெபித்தால் அவை தொழிற்பட தொடங்கும் என்பதையும் சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுக் கொள்ளவும் , பில்லி சூனியம் , ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள் எண்களையும் எழுத்துக்களையும் மாறி மாறி இட்டு சக்கரங்களை உருவாக்கினார்கள்.

அவற்றின் மூலம் தாங்கள் அடைந்த பலனையும் சக்கரங்கள் தயாரிக்கும் முறையையும் என்ன சக்கரத்திற்கு என்ன மந்திரம் எத்தனை தடவை சொல்லவேண்டு என்பதையும் அது என்ன என்ன வேலைகளைச் செய்யும் என்பதையும் தங்களின் பாடல்களில் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு அருளப் பட்ட சில யந்திரங்களை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவ காருண்யம்...

Author: தோழி / Labels: , ,

பத்திரகிரியார் ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த கோட்பாடாகவே உபதேசிக்கின்றார். உயிர்களைக் கொன்று அவற்றின் மாமிசங்களைப் புசிப்பதை கண்டிக்கிறார். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பது ஒரு தவம் என்று சொல்கிறார் இவர்.

இராமலிங்க அடிகளாரும் பிற உயிட்களிடம் கருணை காட்டுவதை உயர்ந்த நெறியாக மக்களுக்கு உபதேசித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?


என்கிறார் பத்திரகிரியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புடமிடுதல் - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels: ,

இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.

புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.

இம்முறையில் வரட்டிகள் மெதுவாக எரிவதால், உள்ளிருக்கும் பொருல் தீய்ந்து கருகிவிடாமல் அளவான உஷ்ணத்தை தொடர்ந்து பெற்று வீரியமாகவும், சிறப்பாகவும் தொழிற்படும்.

சித்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப, பலவகையான புட முறைகளை கையாண்டிருக்கின்றன. ஒவ்வொரு புட முறையும் வரட்டிகளின் எண்ணிக்கைகளை வைத்து கூறப் பட்டிருக்கிறது.

"வில்லுகிறேன் புடப் பாகம் செப்பக் கேளாய்
மேலானகா டையொன்று கௌதா ரிமூன்று
தள்ளுவரோ குக்குடமோ எருவீ ரைந்து
சதுர மாம்வரா கபுடம்ஐம் பத்தாகும்
உள்ளபடி ஹஜபுடந் தான் னீரைந்து
உத்தமனே மணல் மறைக்காம்எருத் தொண்ணூறு
அள்ளவே பூப்புடத்துக் கெருவைக் கேளாய்
ஆட்டினொரு நான்குவிர ட்கடை தானே"புட பாகத்தை சொல்கிறேன் கேள் , காடைப் புடம் ஒரு வரட்டியிலும், கௌதாரிப் புடம் மூன்று வரட்டியிலும், செவற்(குக்கூ)புடம் பத்து வரட்டியிலும், வராகப் புடம் ஐம்பது வரட்டியிலும் , கெஜப் புடம் ஆயிரம் வரட்டியிலும், மணல் மறைவுப் புடம் தொண்ணூறு வரட்டியிலும், பூமிப் புடமானது ஆட்டு எருவை நான்கு விரல் கடை அளவு இடுவதன் மூலமும் போடப்படும்.

இந்த அடிப்படைகளை தெரிந்து கொண்டால், சித்தர்கள் எந்த முறையை குறிப்பிடுகிறார்களோ அந்த முறையில் புடமிட்டுக் கொள்வது இலகுவாகும்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...

Author: தோழி / Labels: , ,

பொதுவாக எல்லா சித்தர்களும் மருந்து வகைகளை அரைப்பதற்கும் இரசமணி கட்டுவதற்கும், இரசுத்தி, மூலிகை சுத்தி போன்றவற்றுக்கும் கல்வத்தை பயன் படுத்தினார்கள்.

அந்தக் கல்வம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் அகத்தியர்...


"வாறான குழிக்கல்லின் மார்க்கங் கேளாய்
மைந்தனே பிரம்மாவின் சிரசுபோல
கூரான கலமணி விரல்மு ப்பத்துங்
கொள்கையாம் கலமணி விரல்நா ல்பத்து
வீறானவி ளம்பதுதான் விரலிரண்டு
விதியிலேயா ழமதுவி ரலிரண்டு
போறானயி ருபுறமும் மூக்குமாகும்
பெரிதான குழவியைத்தான் பேசுவேனே"

"பேசுகிறேன் பதினாறு விரற்கடை நீளம்
பெரிது முகவட்ட மணிவிரல் நால்வீதி
ஆககா நேரடி விரற்கடை பத்தாம்
ஆவுடையும் சிவலிங்கமும் ஆனவாறு"


கல்லானது பிரம்மாவின் சிரசு போலவும், அகலம் முப்பது விரல் கடை அளவிலும் , நீளம் நாற்பது விரல் கடை அளவும், விளிம்பானது இரண்டு விரல் கடை அளவும் குழியின் ஆழமும் இரண்டு விரல் கடை அளவும், இந்தக் கல்லின் இரு புறமும் மூக்கு நீண்டபடி இருக்க வேண்டும் (கீழே படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு) என்றும் சொல்லும் அகத்தியர், இதற்க்கு ஏற்ற பெரிதான குழவி பற்றி சொல்கிறேன் கேள் என்று பதினாறு விரல் கடை நீளமும் , கைப்பிடி நான்கு விரல் கடையும், அரைக்கும் பகுதி பத்து விரல் கடை அளவும் இருக்கவேண்டும் என்றும் இது ஆவுடையும் சிவலிங்கமும் போல இருக்கும் என்கிறார்.

ஒரு விரல்கடை என்பது ஒரு இஞ்ச் அளவையே குறிக்கும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels: , ,

"நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு
நலமான சுவாசந்தான் எழுந்திருக்கும்
கோளொன்றி பதினாலாயிரத்து நானூறு
குவித்த மூலாதாரத்துள் ஒடுங்கும்"

"பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம்
பாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னை
ஏளொன்றி இதனையே உட்சுவாசித்தால்
எப்போதும் பாலனாய் இருக்கலாமே"


ஒரு நாளில் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு சுவாசம் உண்டாவதாகவும் அதில் பதினாலயிரத்தி நானூறு சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும், மற்ற ஏழாயிரத்து இருநூறு சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த ஏழாயிரத்து இருநூறுசுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் (பிராணாயாமம்) செய்வதன் மூலம் உட்சாதிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு ,சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என்கிறார் யூகிமுனி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்?

Author: தோழி / Labels: ,

"பாரே நீ தை மாசி மீன மூன்றில்
பலிக்குமே சந்திரனார் விந்தினாலே
சீரேகேள் மண்தனிலே ஜலம் பாய்ந்து
சிக்கியதில் ரேசித்து ஜெனிக்கும் காரம்
வாரே தான் ரவி படவும் பூக்கும் பாரு
வானவர்கள் மெச்சுகின்ற வழலை மைந்தா"

"மீறாமல் மறியலிட்டு மூன்றாநாளும்
விடிந்ததொரு நாலாம் நாள் ரவிக்கு முன்னே
ரவிபடாததட்க்கு முன்னே வாங்கி
நாதாந்த மூர்த்தியைப் பணிந்தெடுத்து
தவியதே இதற்க்கு நிகர் ஒன்றுமில்லை
புவிதன்னில் சொல்லிவிட்டேன் பூநீர்
புத்தியினால் செய்பாகம் அறிந்து கொண்டு"


பூநீரானது தை , மாசி , பங்குனி போன்ற மாதங்களில் இரவு வேளைகளில் பளிச் என்ற தோற்றத்துடன் பூமியின் மேற்பரப்பில் உப்பாய் முளைத்திருக்குமாம்.
பகல் வேளைகளில் இது மண்ணுக்குள் சென்று விடுமாம்.

அந்த பூநீர் முளைத்ததிலிருந்து காத்திருந்து மூன்றாம் நாளிலிருந்து சேகரிக்க தொடங்க வேண்டுமாம். ஒரே நாளில் தேவையான அளவு சேகரிக்கக் கிடைக்காதாம். தினசரி இரவு வேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க வேண்டுமாம்.

இந்த பூநீர் ரெண்டு வகைப் படும் ஒன்று காரம் உள்ளது, மற்றது காரம் அற்றது, இரவில் எடுக்கும் பூநீர் காரம் அற்றது என்றும் அதிகாலையில் எடுக்கும் நீர் காரமுள்ளது என்றும் காரம் அற்றதே பூநீர் என்றும், காரம் உள்ளது பூநீறு என்றும் சொல்கிறார்.

ஆக, பூநீரும் பூநீறும் ஒரே தாவரத்திலிருந்து பெற்றாலும் குணத்தால் வேறு படுகின்றது. ஆகவே, பூநீரும் பூநீறும் வேறு வேறானவையே.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூநீருக்கான வேறு பெயர்கள்..

Author: தோழி / Labels:

வள்ளுவர் நாயனார் தனது பாடல் ஒன்றில், சித்தர்கள் பூநீரின் வேறு பெயர்களை தங்களின் பாடல்களில் எப்படி கூறியிருக்கின்றனர் என விளக்குகிறார்,

"அறியாத சாரத்தின் அருமை நன்மை
அறைகுறேன் ஏலசிங்க மறிந்து கொள்ளே
கொள்ளவே ஆதியில் உதித்த நாதம்
குணமான சுத்த ஜலம் இதற்க்குப் பேரு
வள்ளவே வழலை என்றும், பாழைஎன்றும்
வாங்கான வஸ்து வென்றும் தேன்பா லென்றும்
விள்ளுவர் வெண்சாரை பனங்கள் லென்றும்
விபரமுள்ள பூநீர் சஞ்சீவி என்றும்
கல்லான பாறை என்றும் விந்துவென்றும்
கானாகத்து கானாகத்து சாரை என்றும் பாடினரே"


இப்பூநீரை கானகத்து சாரை விந்து, சஞ்சீவி, வெண்மையான சுண்ணாம்புப் பாறை , சுத்த ஜலம், வழலை, பால் , பாழை , தேன், வெண்சாரை, பனங்கள் என்று வெவ்வேறு பெயர் வைத்துப் பாடினார்கள் என்கிறார்.

இந்த பூநீரை எப்படி எடுப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூநீர் என்பது என்ன?...

Author: தோழி / Labels: , ,

பூநீர் என்பது ஒருவகைத் தாவரம் என்கிறார் அகத்தியர்.

"புதிய மரம் ஒன்று கண்டேன் பூநீரப்பா
பூக்காமல் கதிர் வாங்கும்
பதி கண்டேன் புதுமை கண்டேன்
காய் காணேன் கனி காணேன்
இலைகள் கண்டேன் பாங்கான
கொட்டியது தானும் கண்டேன்
மதிரிந்தோர் தமை எல்லாம்
வினவிக் கேட்டேன் வகையறிந்து
கூருதட்க்கு மாந்தர் காணேன்
என் மனதிலே அறிந்து கொண்டேன்
அப்பனே பரமன் அன்று பணியலாமே"


பூநீர் என்றொரு மரத்தினை கண்டதாகவும், அதில் பூக்காமல் கதிர் வந்த புதுமையும், அத்தோடு காயோ கனிகளோ இல்லையென்றும், ஆனால் இலையும், விதையும் கண்டதாக சொல்லும் அகத்தியர், இந்த அதிசய பூநீர் மரத்தைப் பற்றி தெரியுமா என்று மற்றவர்களிடம் கேட்டும் யாரும் தக்க பதில் சொல்லவில்லை என்பதால், இம் மரத்தின் காட்சி தனக்கு சிவனின் அருளால காணக் கிடைத்தது என்று சொல்கிறார்.

இந்த பூநீருக்கான வேறு பெயர்கள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.

Author: தோழி / Labels: , ,

அகத்தியர் தனது மாணவரான புலதியருக்கு சொன்ன முப்பூ முறை...

"சொல்கிறேன் புலத்தியனே முப்பூகாண
சூடான நவச்சார லவண பூநீர் எடப்பா
துடியான கல்லுப்பு எட்டுங் கொண்டு
ஊடவே அமுரிதனில் கலக்கிக்கொண்டு
உத்தமனே படிஎட்டுத் தெளிவை வாங்கு
சாலவே காச்சி எடு ரவியில் போடு
சாந்தமாய் திங்களில் வெண்மையாகும்
வாடவே வேண்டன்கான் வதி சொன்னேன்
மகத்தான பெரியோர்க் கெய்தும் பாரே"


முப்பூவில் முதல் உப்பு பூநீர் என்றும், இரண்டாவது தூய கல்லுப்பு என்றும், மூன்றாவதாக அமுரியும் சேர்த்து காய்ச்சி வெய்யிலில் காய வைக்க முப்பூ கிடைக்கும் என்று சொல்லும்
அகத்தியர், இது மகத்தான பெரியவர்களுக்கே சரியாகக் கிட்டும் என்கிறார்.

அது என்ன பூநீர்? பூநீரும் பூநீறும் ஒன்றா? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2

Author: தோழி / Labels:

முப்பூ என்பது மூன்று உப்புக்கள் சேர்ந்த கலவை என்பதை எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் அவை எந்த மூன்று உப்புக்களின் கலவை என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள்.

கறியுப்பு , வெடியுப்பு, இந்துப்பு என்கிற மூன்றின் கலவை தான் முப்பூ என்கின்றனர் ஒரு சாரார்.

பச்சைக் கற்பூரம், இந்துப்பு, பூநீர் இவைகளின் கூட்டே முப்பூ என்கின்றனர் இன்னொரு பிரிவினர்.

இல்லவே இல்லை! பூநீர், இந்துப்பு, வெடியுப்பு இவற்றின் கலவையே முப்பூ, இது ஒரு பிரிவினர்..

நீர், நெருப்பு , காற்று இந்த மூன்று பூதங்களின் கூட்டே முப்பூ என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

ஆக முப்பூ வில் சேர்க்கப் பட்டிருக்கும் மூன்று பொருட்கள் இன்னதென அறுதியிட்டு கூறுவதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றது.

சித்தர்கள் என்னதான் சொல்லியிருக்கின்றனர் என பார்த்தால்.... அகத்தியர் வாதகாவியம், கொங்கணநாதர் சூத்திரம்,மச்ச முனி சூத்திரம், உரோமரிஷி ஞானம் 500, நந்தீசர் முப்பூ சூத்திரம், ஆகிய நூல்களில் முப்பூ பற்றிய விவரங்கள் சொல்லப் பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் மறைமொழியில் சொல்லப் பட்டிருப்பதால் ஆய்வாளர்கள் ஆளுக்கொரு கருத்தினை முன் வைக்க நேரிடுகிறது.

முப்பூவின் உண்மையான மூலப் பொருட்கள் இதுதான் என்பதை அறுதியிட்டு சொல்ல இயலாத நிலைதான் இன்றைய நிதர்சனம். குருவருள் சித்திக்கப் பெற்றவர்களுக்கு இவற்றை அறியும் ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.

அடுத்த பதிவில் முப்பூ பற்றிய பாடலைப் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் தனித்துவமான உத்திகளில் ஒன்று முப்பு. இதில் தேர்ந்தவர்களால் மட்டுமே ரசவாத முறையில் எதனையும் செய்திட முடியும்.இரசவாதக் கலையின் உயிர் நாடியே முப்பூ என்றால் அது மிகையாகாது.

இதையே வசிட்டர்,

"அண்டரண்டம் நிறைந்த பொருள் முப்பூவப்பா
ஆறாப்பிணிகள் நீக்க ஒரு குருவுமாச்சு
அண்டரண்டம் நிறைந்த பொருள் தனைத் தொட்டு
ஆடலாம் வெகுகோடி வித்தை தன்னை
கண்ட கண்ட விதமாக உலகத் தோர்கள்
கருவறிந்து மருந்து செய்யத் தெரியாமற்றான்
கண்ட கண்ட மருந்துகளை தானே வாங்கி
கடை கெட்டுப்போய் வீணாய் கலங்குவரே"


என்று சொல்கிறார்.

மனிதன் யோகம் பயில குருவானவர் எத்தனை அவசியமோ அதே போல, உயர்வான ஒரு கோடி சித்துக்கள் செய்திடவும், தீர்க்க முடியாத நோய்களை தீர்த்திடவும், அழியும் உடலை அழியாது பேணிடவும், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாய் மாற்றிடவும் தேவையானது முப்பூ.

"முப்பூ வதுலாகம் முடிந்ததொரு காரியமாம் என்னையா
அப்பூவை விட்டு அலைந்தால் வாதம் வருமோ
தொட்டவிடம் பட்டவிடம் தொல்புவியும் பொன்னாகும் - என்னையா
பட்ட பகல் போலே பக்குவமாய் சொல்லி விட்டேன்"


என்று முப்பூவின் சிறப்பை சொல்கிறார் நாதநாதச் சித்தர்.

முப்பூக்களையும் கண்டு கொள்பவனே உண்மையான சித்தனாவான், இவனுக்கு ரசவாதம் எல்லாம் சின்ன விசயமாகிவிடும், இவனால் அட்டமாசித்திகளையும் கொண்டு விளையாட முடியும்.

இந்த முப்பூ என்பது மூன்று உப்புக்களின் கலவையாகும், அந்த மூன்று உப்புக்கள் என்ன என்பதில்தான் தற்கால ஆய்வாளர்கள் ஒருவருக்கொருவர் முரண் படுகிறார்கள்.

அப்படி என்னதான் முரண்பாடு என்பதை அடுத்த பதிவில் விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காணிக்கை நன்மனமே...

Author: தோழி / Labels: , ,

"மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்கு
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே."


- குதம்பைச்சித்தர் -

நமது அண்டத்தில் சூரியனைப் போல பல ஒளி வீசும் பல மூலங்கள் இருந்தாலும் இதெற்கெல்லாம் ஆதியும் முலமுமானவன் இறைவன். ஒளி விசும் மாணிக்கமே மலையாக இருந்தாலும் அதனினும் மிகுந்த பேரொளியாய் இருப்பவன் இறைவன். இந்த பேரொளியின் அருளும், கருணையும் ஈடு இணையில்லாதது. இதை அடைய நாம் தர வேண்டியது நமது தூய மனமேயாகும் என்கிறார் குதம்பைச்சித்தர்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அங்கிசச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"காட்டவே பிரயதிகச் சித்துச் சொன்னேன்
கருவான அங்கிசச் சித்து சொல்வேன்
பூட்டான மின்மிநியாம் பூச்சிதனை
போருக்கியொரு சிரங்கை பீங்கானிலிட்டு
எரண்டத்தெண்ணெவிட்டு ரவியில் வைக்க
உருகிநல்ல அரக்கு நிற மைஎனவே
அன்பான மையெடுத்து சிமிழில் வைத்து
நிம்பாமல் நீ இருந்து திலகம் போட்டு
சம்பிரமாய் பூமிதனை பார்க்கும் போது
தட்டாத பாதாளம் கெசமாய் தோன்றும்
மனது பயமாகவே தான் தோன்றும் பாரே"மின்மினிப் பூச்சி ஒரு சிரங்கை எடுத்து, அதனை பீங்கானில் இட்டு அத்துடன் எரண்டத்தெண்ணை சேர்த்து, குருவினை மனதில் தியானித்து வெய்யிலில் வைக்க அது அரக்கு நிறமுள்ள மையாகும். இதனை சிமிழில் சேகரித்து வைத்து, தேவையான பொழுதில் திலகமாய் இட்டுக் கொள்ள, பூமியின் ஆழத்தில் உள்ளவைகள் தெரியும்,அப்படி பார்க்கும் போது பயமாக இருக்கும். இதைத்தான் அங்கிசச்சித்து என்கிறார் அகத்தியர்.

இதுவரையில் ஆறு வகையான சித்துக்களை பார்த்தோம், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சித்துக்களை பற்றிய பதிவுகளைத் தொடர்கிறேன்.

அடுத்த பதிவில் புதிய தகவலொன்றுடன் சந்திக்கிறேன்.

இப்பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். சித்தர்களின் மகத்துவம் தமிழறிந்த அனைவருக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும் என்பதே எனது நோக்கம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அதிமோகச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"புதுமையென்ர மாமோகச் சித்து சொன்னேன்
பொருந்துகின்ற அதிமோகச்சித்துக் கேளு
மெதுவாக கவுதும்பைச் சாபம் தீர்த்து
மேன்னிரவி தனித் தொழுது வேரை வாங்கி
மெதுவான பால்தனிலே திலகம் போடு
மைந்தனே கண்டவர்கள் மோகம் செய்வார்
சாதுவான சமர்தினத்தில் சென்றாயானால்
தாகமுடன் அதிகமோக மாவார் தானே"


தும்பைச் செடியினை சாபம் போக்கி, சூரியனை வணங்கி வேரைப் பறித்து, செடியின் வேரினை பால் விட்டு அரைத்து திலகமாய் தீட்டிக் கொண்டால் காண்பவர் அனைவரும் மயங்குவர் இதுதான் அதிமோகச் சித்து என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


விகுர்தரச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"கருவான விகுர்தரச் சித்துக்கேளு
பேணவே வேம்பின் சமூலம் கொண்டு
பிரளவே நொறுக்கி அதில் வகை கேளு
நாணவே குழித்தைலம் வாங்கு வாங்கு
நன்மையுள்ள தைலமத்தில் வகை கேளு
வகையென்ன கற்பூர சுண்ணம் போட்டு
மத்தித்து ரவிமுகத்தில் வைத்துப் போற்றி
திகையில்லா தைலமதை நாவில் தீத்தி
செப்பக் கேள் தின்பண்டமேல்லாம் திங்க
நகையாதே தின்றதேல்லாம் தித்திக்கும் பாரே
நன்மையுள்ள செலங்கலேல்லாம் அமிர்தமாகும்
பகையான பகையெல்லாம் தன்மையாகும்
பக்குவமாய் இகருவை பகரெண்ணாதே"நூறு வயதைக் கடந்த வெப்ப மரத்தின் வேரினைக் கொண்டு குழித் தைலம் எடுத்து அத்துடன் கற்பூர சுண்ணம் சேர்த்து வெய்யிலில் வைத்து, அதனை நாவில் தடவிக் கொண்டு எதை பருகினாலும் இனிக்கும். நஞ்சு கூட அமிர்தம் போலிருக்கும். இதனை விகுர்தரச் சித்து என்றும் இதை யாருக்கும் சொல்லாதே என்றும் சொல்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிறையதிகச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
பண்பான பிறையதிகச் சித்துசொல்வேன்
காரப்பா திக்கப் பூண்டு தனைக்கருக்கி
கருவானா எரண்டத்தெண்ணெவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்திலாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்ப சிமில்தனிலே பதனம் பண்ணித்
திருவான பதிநோக்கி திலாகம் போடே"

"போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
போக்குடனே நாலுதிக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிகமாகத் தோன்றும்
நாரான மானிடர்க்கு அப்படியே காணும்
வாட்டமுடன் இடதுகண்ணை மூடிப்பார்த்தால்
வலமான சூரியன் போல வரிசை காணும்
காட்டாதே உலகத்தி லிந்த நூலை
கர்மவிதி தீர்ந்தவர்க்கு காட்டு காட்டு"


திகைப் பூண்டை கருக்கி எரண்டத்தெண்ணை விட்டு கல்வத்தில் அரைக்க மைப் போலாகும். இதனைச் சிமிழில் பதனம் பண்ணி, திலகமிட்டுக் கொண்டு அமாவாசையில் இருட்டில் பார்க்க நாலு திசையும் வெளிச்சம் தெரியும்.இடது கண்ணை மூடி வலதுகண்ணால் பார்க்க சூரிய ஒளியில் பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படித் தெரியும்.

ஆனால் இந்த நூலை உலகத்தவருக்குக் காட்டாதே, கர்ம வினை அறுந்தவர்களுக்கு மட்டும் கொடு என்கிறார் அகத்தியர்.

இதுதான் பிறையதிகச் சித்து எனப்படும். அடுத்த பதிவில் வேறொரு சித்தினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் ரசவாத தங்கத்தின் நுட்பம் தேடி ஆண்டாண்டு காலமாய் அலைந்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர், அத்தனை மகத்துவம் வாய்ந்த ரசவாத முறையில் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் ஒன்றின் படத்தினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஒன்பது கிராம் நிறையும், 14 மில்லிமீட்டர் விட்டமும் உடைய இந்த நாணயம் பதினெட்டு கேரட் தங்கமாகும். இதன் ஒரு புறத்தில் ஸ்ரீசக்கரமும், மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பல சக்கரமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.

ரசவாத முறையில் தயாரிக்கப் பட்ட தங்கம் மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாகவும், அதை வைத்திருப்போர் வாழ்வில் நலம் பல உண்டாகுமென்கிறார்கள்..

இந்த தங்கத்தை பயன்படுத்தி செய்யப் படும் தெய்வ விக்கிரகங்களும், எந்திரங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்கிற கருத்தும் உள்ளது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இதமதிகச் சித்து...

Author: தோழி / Labels: , , ,

"வரிசையென்ன இதமதிகச் சித்துச் சொல்வேன்
வால் நீண்ட கருங்குருவி பிச்சு வாங்கி
உரிசையுள்ள யேரண்டத்தெண்ணெவிட்டு
ஓமெனவே மதித்து ரவியில் வைக்க
முரசதிரத் திருவேறி மையாய்ப் போகும்
மூர்க்கமுள்ள மையதனைச் சிமிழில் வைத்து
குருபதியை நோக்கி மையைப் போட்டுக்
கும்பித்து நிற்பதனால் குணத்தைக் கேள்"

"கேளப்பா நாலுறு சனங்கள் கூட்டி
கம்பிரமா யிருக்கும் கூட்டத்தேகி
கோளப்பாமிகப்பேசி சண்டை செய்வார்
குணமாக நீயடக்கப் போகும் போது
வேலப்பா மதன்ரதி போலிணங்கி நிப்பர்
வேடிக்கை பார்க்கவும் நீ பின்பு சென்றால்
காலப்பா மிகஓங்கி மிதித்துக் கொண்டு
கடினமுள்ள சண்டையிட்டு ஓடும்பாரே"


வால் நீண்ட கருங்குருவியின் பிச்சு வாங்கி விளெக்கெண்ணை விட்டு மத்தித்து வெயிலில் வைக்க மையாகும். இதை சிமிழில் பதனம் செய்து, அதனை பொட்டாக இட்டுக் கொண்டு சண்டைக்குச் சென்றால் எதிரிகள் அடங்கி நிற்பார்கள்.நீ அந்த இடத்தை விட்டு அகன்றால் மீண்டும் மிகச் சத்தமிட்டு சண்டையிடுவர்.இதைத்தான் இதமதிகச் சித்து என்கிறார் அகத்தியர்.

நண்பர்களே!, அடுத்து வரும் பதிவு, இந்த வலைத் தளத்தின் நூறாவது பதிவு. காண்பதற்கரிய ஒரு புகைப்படத்துடன் நூறாவது பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிரவதிகச் சித்து...

Author: தோழி / Labels: , , ,

"உண்டான சித்துவகைக்கு குவமை கேளு
உறுதியுள்ள புலத்தியனே உனக்காய் சொல்வேன்
செண்டான ஊர்க் குருவி பிச்செடுத்து
செந்தேனும் கருன்தேனும் விட்டு மைந்தா
நன்றாக மத்திக்கும் போல் மைந்தா
நன்மையுள்ள மைபோல நலமாய்க் காணும்
குன்றாத சிமிழ் தனிலே பதனம் பண்ணி
குருவான பத்தி நோக்கி திலகம் போடே"


"போட்டவுடன் ரேசகமும் பூரகமும் பண்ணி
புனிதமுடன் கும்பகத்தில் நின்றால் மைந்தா
நாட்டமுடன் நாலுதிக்கில் உள்ள சேதி
நலமாய் தோணுமடா நலாமாய் மைந்தா
தொட்டமுடன் இந்த முறை சித்து தானும்
திறமான பிர வதிகச் சித்து மாகும்
வாட்டமில்லா மனதடங்கி நில்லு நில்லு
மைந்தனே இன்னுமொரு வரிசை கேளு"


நாம் அறிய இருக்கும் அறுபத்தி நான்கு சித்துக்களையும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதைப் போலவே அமைந்திருக்கிறது.

ஊர்க் குருவிப் பிச்செடுத்து அதில் செந்தேனும் கருந்தேனும் விட்டு மத்திக்க மை போலாகும். அதை சிமிழில் அடைத்து சேமித்து வைத்துக் கொண்டு, தேவைப் படும் போது உன் குருவை நினைத்து கும்பிட்டு திலகமாக நெற்றியில் இட்டுக் கொண்டு கும்பித்து நிற்க நாலு திசைகளின் செய்திகளையும் உன்னால் உணர முடியும்.

இது தான் பிரவதிகச் சித்து என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் இன்னுமொறு சித்து முறையினை காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...

Author: தோழி / Labels: , , ,

அகத்தியர் அருளிய அறுபத்திநாலு சித்துக்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அந்த சித்துக்களின் பெயர்களை அகத்தியரின் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.

"சித்தான அறுபத்தி நாலுக்கும் பேர்
செப்புகிறேன் புலத்தியனே தெளிந்து கேள்
முத்தான பிரவதிக சித்துவொன்று
சுத்தமான சுக்கிலத்தின் சித்துவொன்று
சுகமான பிரம்குலச் சித்துவொன்று
பத்தான பிறையதிகச் சித்துவொன்று
பாங்கான அங்கிசத்தின் சிதொன்றாச்சே"

"ஒன்றான பெண்மயமாம் சித்துவொன்று
வொடுங்காத பவமூலச் சித்துவொன்று
பன்றான ஈசற்குலச் சித்துவொன்று
பராபரமாம் தாதுவெனும் பரம சித்து
குன்றான அசுரமேனும் சித்துவொன்று
குறையாத தானியமாம் சித்துவொன்று
சென்றகன்ற பிரமாதிச் சித்துவொன்று
திறமான அனுமாதிச் சித்தொன்றாச்சே"

"ஆச்சப்பா விக்கித குலச் சித்துவொன்று
அடங்காத சித்திரமாம் சித்துவொன்று
மூச்சப்பா சிவநிதியாம் சித்துவொன்று
முறையான அருணவலுச் சித்துவொன்று
காச்சப்பா பருத்திஎனும் சித்து வொன்று
கரைகாணா அதி ரூபச் சித்துவொன்று
பாச்சப்பா சருவ குலச் சித்துவொன்று
பண்பான மோகினியாம் சித்துவாமே"

"ஆமப்பா வினோதமய சித்துவொன்று
அசையாத விகுர்த்திஎனும் சித்துவொன்று
நாமப்பா காரூபச் சித்துவொன்று
நாதமெனும் அன்புநிலைச் சித்துவொன்று
காமப்பால் விசயமெனும் சித்துவொன்று
கருணைபெறும் செயரூபச் சித்துவொன்று
தாமப்பா மதன சித்துமொன்று
தருகாத தும்பிவனச் சித்தொன்றாமே"

"சித்தான பரிநகுலச் சித்துவொன்று
திறமானா நரிபரியம் சித்துவொன்று
வித்தான வகாரமயச் சித்துவொன்று
விதமான சாந்த விதச் சித்து மொன்று
சுத்தமான தாம்பிரமாம் சித்துவொன்று
தொலையாத சலபேதிச் சித்துவொன்று
முத்தான அசுபதியாம் சித்தொன்று
முறையான சிங்கமுகச் சித்துவொன்றே"

"சித்திக்கும் ரிஷபமுகச் சித்தொன்று
சிவசிவா சித்துமாகச் சித்தொன்று
பத்திக்கும் பரமபரச் சித்தொன்று
பகர் பஞ்சி கர்ண சித்து அதிக வித்தை
உத்திக்கும் உத்திகரு உரிமைச் சித்து
உருவான மறைப்பினிலே அனந்த சித்து
வெற்றிக்கும் வெற்றி முனை சித்து வொன்று
வேடிக்கை மதுரகெளிச் சித்துவோன்றே"

"மதுராதி மாமோகச் சித்துவொன்று
மங்கையர்கள் அதிமோகச் சித்துவொன்று
விதனமுடன் விதானம் வரும் சித்துவொன்று
வேடிக்கை காலத்தில் அதிக சித்து
சுகாமான சலத்தம்ப சித்து வொன்று
சுருக்கமான அக்கினியில் லனந்தம் சித்து
அதமான மாரனத்தில் லனந்தம் சித்து
ஆக்கையுறு மாறாட்ட மான சித்தே"

"மாறாட்ட மான பேதனமாம் சித்து
வையகத்தோர் தனை மயக்கும் வாடைச்சித்து
நீறாட்டமானதிலே நனையாச் சித்து
நிஷ்டையிலே தம்பிக்கும் வாயுத்தம்பம்
கோறாட்ட விநோததந்தி லதிக சித்து
குமரி விளையாடு கின்ற கோலச் சித்து
பாராட்டம் பண்ணுகின்ற அரவின் சித்து
பகைத்தவர்த்த மதியகற்றும் பாரிச் சித்து"

"பாரப்பா முத்தி தரப் படைக்கும் சித்து
பார்க்கையிலே தீஎரிந்து பறக்கும் சித்து
நேரப்பா தீ அவிக்கும் சித்து
நிமைக்கும் முன்னே காதவழி நெருங்கும் சித்து
வீரப்பா செய்யாமல் அடங்கும் சித்து
வெகுகோடி சித்துக்கள் விபரமாக
ஆரப்பா அறிவார்க ளறுபத்து நாலு
மடக்கமுட னாடு நீதான் பாரே"


இனி வரும் பதிவுகளில் இவை ஒவ்வொன்றாய் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...

Author: தோழி / Labels: , ,

'அகத்தியர் கலைஞானம் 1200' என்கிற நூலில் அறுபத்தி நாலு வகையான சித்துக்களைப் பற்றி அகத்தியர் விளக்கியுள்ளார். நூலின் துவக்கத்தில் இப்படிச் சொல்கிறார்.

"நீதான் சித்தாடுகின்ற வகையைக் கேளு
நீள்புவியில் இக்கருவைச் சொன்னாயானால்
கோதறவே வாதத்தால் பிடிக்கப் பட்டு
கொடும் பிணிகள் சூழ்ந்து கொடுமையாகி
வேதாளமாகி பூதமாய்ப் போவாய்
வேதாந்த சத்தியமாய் நின்றாயானால்
தலைவனாய் உலகில்லுள்ளோர்க் காவாயப்பா
தண்மையுள்ள புலத்தியனே கேளுகேளே!"


மென்மையான மனத்தைக் கொண்ட என் மாணவனே!, புலத்தியனே!, சித்தாடுவதை சொல்கிறேன் கேள், பூமியில் உள்ளவர்களுக்கு இதை நீ சொன்னால், வாதம் முதலான பல நோய்களினால் பீடிக்கப் பட்டு , வேதாளமாகி , பூதமாகி போவாய், வேதாந்த சத்தியத்தைக் கடைப்பிடித்து, இந்த சித்துக்களைக் கொண்டு உலகிலுள்ளவர்களுக்கு எல்லாம் நீ தலைவனாகலாம். என்று கூறி சொல்லத்தொடங்குகிறார் அகத்தியர்.

இனி வரும் பதிவுகளில் அவர் சொன்ன அந்த 64 சித்துக்களை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?

Author: தோழி / Labels: , ,

"மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்போர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?
அலையாமல் அகத்தினை அதன் பால்வைத்தோர்
அழியார் என்றே நீ துணிந்து ஆடு பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

அதிக பொருள் சேர்த்து வைத்திருக்கும் யாருமே இறக்கும் போது அவற்றைக் கொண்டு செல்வதில்லை. உலக இன்பங்கள் எல்லாமே வெறும் மயக்கங்களே தான். உண்மையிலேயே அழிவில்லாதது பரம்பொருள் ஒன்று மட்டுமே, அந்தப் பரம் பொருளின் மீது நம்பிக்கை வைத்து அதனை நாடி நின்றவர்களுக்கு என்றுமே அழிவு வருவதில்லை. உலக இன்பங்களில் மனதை அலையவிடாமல், இறைவனை நினைத்திருப்பவர்கள் நிலையான பேற்றைப் பெறுகிறார்கள் என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


என் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ!

Author: தோழி / Labels: , ,

புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக்கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்கு தாராயோ!

- அழுகுணிச் சித்தர் -

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் பாடல்கள் ஆழமான மறை பொருள் கொண்டு விளங்குபவை. பொதுவாகவே சித்தர் பாடல்களின் கருத்து இது தான் என்று அறுதியிட்டுக் கூறுவது மிகவும் கடினமாகும். சித்தர் பாடல்களுக்கு உரை சொன்னவர்களும், பாடல் எங்கே நெருடுகிறதோ அந்த இடங்களை மழுப்பலாகவே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

சில பாடல்களில் வருகின்ற வார்த்தைகள் நமக்குப் பழக்கமான பொருள் குறிப்பது போல இருந்தாலும், உண்மையில் அந்தச் சொற்களுக்கு அழமான வேறு பொருள் உள்ளதை நம்மால் உணரமுடியும், உணரும் அந்தப் பொருளை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுத்தில் வடிப்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது.

கீழே உள்ள இரண்டு குதம்பைச் சித்தர் பாடல்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.

"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?"

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?"


நான் அறிந்த வரையில் இந்தப் பாடல்களின் முழுமையான விளக்கத்தை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோகம் பயில உகந்த காலம் எது?

Author: தோழி / Labels: , ,

"நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்
சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே".


- சிவவாக்கியார் -

இரவின் நாலாம் சாமத்தில் துவங்குவதுதான் பிரம்ம முகூர்த்தம் அல்லது அதிகாலை எனப்படும் பொழுது.

பிரம்ம முகூர்த்தத்தில் சிவமும்,பிரம்மமும் கூடிக்கலந்த உயர்ந்த பிரம்ம சக்தி முழுமையாக நிறைந்திருக்கிறது. இது மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி ஒருவர் மேன்மை அடைய அடித்தளமிடும் காலமாகும்

எனவே, மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி மேன்மை அடைய விரும்புவோர் யோகப் பயிற்சிகள் செய்ய இதுவே சிறந்த நேரம் என்கிறார் சிவவாக்கியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி தைலக் கிணற்றின் கதை!

Author: தோழி / Labels: ,

சிருங்கேரிக்கு அருகில் வாலைபுரம் கிராமத்தில் சிறந்த சிவபக்தனான வாமதேவன் என்னும் பிரபலமான வணிகன் ஒருவன் இருந்தான்.தனது கிராமத்திலேயே சிவனுக்கு மிகப் பெரிய ஆலயம் ஒன்று அமைக்க வேண்டுமென விரும்பினான்.

தேர்ந்த சிற்பிகளையும், கட்டிடகலை வல்லுனர்களையும் வரவழைத்து, ஒரு நல்ல நாளில் ஆலயப் பணிகளைத் துவங்கினான்.

ஆகம விதிகளின் படி கோவில் கட்டுவது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? அவனது சேமிப்புக்கள் எல்லாம் செலவு செய்தும் ஆலயப் பணிகள் நிறைவடைய வில்லை.

இதனால், ஆலயப் பணியை நிறைவு செய்ய வேறு பல செல்வந்தர்களின் உதவியை நாடினான். இங்கேதான் அவனுக்கு சோதனைகள் ஆரம்பமாகியது.

செல்வந்தனாய் இருந்தவன் தற்போது மிகவும் வறிய நிலையில் இருப்பதனால், தான் இழந்த செல்வங்களை நன்கொடை என்ற பெயரில் மீட்டுக் கொள்ள முனைவதாக எண்ணிய அவர்கள் நன்கொடை தர மறுத்து விட்டனர்.

எவ்வாறு கோவில் பணிகளை பூர்த்தி செய்வதென்று வருந்தியிருக்கையில் அந்தக் கிராமத்திற்க்கு ஒரு முனிவர் வந்திருப்பதாக அறிந்து அவரிடம் சென்று தனது நிலைமையைக் கூறினான்.

அதற்க்கு அந்த முனிவர், "நீ ஆலயத்தைக் கட்டி முடிக்கவே பொருள் தேடுவது உண்மை என்றால், பெருமை பொருந்திய சதுரகிரி மலையில் தவத்தில் இருக்கும் சித்தரான காலங்கி நாதரிடம் சென்று உனது குறையைக் கூறு, அவர் உனக்கு வழிகாட்டுவார்" என்றார்.

தனது துயரம் தீர வழிகிடைத்த மகிழ்ச்சியில் முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு, சதுரகிரி மலைக்குச் சென்றான்.அங்கு காலங்கி வனத்தில் புலித்தோலாசனத்தில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருந்த காலங்கி நாதரைக் கண்டு வணங்கி நின்றான்.

கண்விழித்த காலங்கி நாதரும் வாமதேவனை கண்டு, அவன் யாரென்றும், வந்த காரணம் என்னவென வினவினார். அவனும் தான் மேற்கொண்ட கோவில் திருப்பணி பற்றிச் சொல்லி அதை கட்டி முடிப்பதற்கான உதவி வேண்டி அவரை சந்திக்க வந்ததாக கூறினான்.

சித்தருக்கு அவனின் வார்த்தைகளில் உள்ள உண்மை தெரிந்தும், அவனைச் சோதிக்க எண்ணி மௌனமாக இருந்தார்.

சித்தரின் மௌனத்தை பார்த்த அவன் அவருக்கும் தன மேல் நம்பிக்கை இல்லை என்று எண்ணி, அவர் உதவும் வரை அங்கேயே இருப்பது, உதவி கிட்டவில்லை என்றால் அவர் காலடியில் உயிர் துறப்பது என்று முடிவு செய்து அங்கேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து வரலானான்.

அவனின் திருப்பணி மீதுள்ள பற்றையும்,தீவிரத்தையும்,தூய உள்ளத்தையும் கண்ட சித்தர் அவனுக்கு பொருள் வேண்டி ரசவாதம் செய்யத்தொடங்கினார்.

உரோம வேங்கை, உத்திர வேங்கை, கருநெல்லி உட்பட பல மூலிகைகளையும், முப்பத்திரண்டு வகைப் பாஷாணங்களையும், முப்புக்களையும் கொண்டு வகாரத் தைலம் தயாரித்து, அதன் மூலம் உலோகங்களை தங்கமாக்கி வேண்டியமட்டும் வாம தேவனுக்குக் கொடுத்து, ஆசிவழங்கி வழியனுப்பினார். அவனும் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பி கோவில் திருப்பணியினை சிறப்பாக முடிவித்தான்.

ஆலயப் பணிக்காக அதிகளவு பொன் வேண்டி தயாரிக்கப் பட்டதால் வகாரத் தைலம் மீதம் இருந்தது. காலங்கிநாதர் மீதமிருந்த தைலத்தை, அங்கு பூமிக்கு கீழ் கற்கிணறு ஒன்றை அமைத்து அதில் ஊற்றி கற்பலகையால் மூடி நான்கு திசைகளுக்கும் நான்கு தேவதைகளைக் காவல் வைத்தார். பொருளாசை கொண்டோர் எவரும் அந்தக் காவலை மாந்திரீக பூசை முறை மூலம் துஷ்ட தேவதைகளைக் கொண்டு முறியடித்து திருட்டுத் தனமாக அந்தத் தைலத்தை யாரும் கொண்டு போகக் கூடாது என்று கருப்பண்ண சாமியிடமும் , பேச்சி அம்மனிடமும் தலைமைக் காவல் பொறுப்பைக் கொடுத்தார்.

சதுரகிரியில் பிலாவடிக் கறுப்பர் ஆலயத்தின் பின்புறம் இன்றைக்கும் அந்த வகாரத் தைலக் கிணறு உள்ளது என்றும், நம் போன்ற சாமானியர்களுக்கு அது தெரியாது என்றும் சொல்கிறார்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புத்தாண்டும், புதிய துவக்கமும்...

Author: தோழி /

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த குறுகிய காலத்தில், எனது ஆக்கங்களுக்கு நீங்கள் அளித்துவரும் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.

நீங்கள் அளித்த இந்த அளவிட இயலாத உற்சாகத்தின் வெளிப்பாடாய் இந்த பதிவினை எனது சொந்த தளத்திற்கு மாற்றியிருக்கிறேன். இனி www.siththarkal.com என்கிற தளத்தில் இந்த பதிவினை வாசிக்கலாம்.

உங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் siththarkal@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டுகிறேன்.

எல்லோருக்கும் இப்புதிய ஆண்டில் குருவருளும், திருவருளும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்.

என்றென்றும் நட்புடன்,
உங்கள் அன்புத்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆலமுண்ட கண்டராணை...

Author: தோழி / Labels: , , ,

"மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாடி உம்முள்ளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே".


- சிவவாக்கியார் -

இந்தப் பாடலில் குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்கிறார் சிவவாக்கியார். நம்முள் அடங்கியுள்ள மூலாதார சக்தி குண்டலினி சக்தியாகும். அந்த குண்டலினி யோகத்தை பயின்று படிப்படியாக அதை மேலே உயர்த்தி புருவமத்திக்கு யாரால் கொண்டு செல்ல முடியுமோ, அவரால் இளமையோடு நீண்டகாலம் வாழ்வதோடு , பரப்பிரம்மமாகாவும் இருக்கலாம் என்று ("ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே") சிவன்பெருமான மீதும் பார்வதி தேவியார் மீதும் ஆணையிட்டுச உறுதியாகச் சொல்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குழித்தைலம் தயாரிப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் பல பயன்பாடுகளுக்காக மூலிகைகளில் இருந்து குழித்தைலம் தயாரித்து பயன் படுத்தினார்கள். அப்படி தாங்கள் பயன் படுத்திய குழித்தைலங்களையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும், எப்படிப் பயன் படுத்துவது என்பதையும் சித்தர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லிச் சென்றுள்ளனர்.

அந்தக் குழித்தைலம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

பூமியில் ரெண்டடிக்கு ரெண்டடி என்ற அளவில் ஒரு குழியை வெட்டிக் கொள்ளவேண்டும். (ஆழமும் ரெண்டடி இருக்கவேண்டும்). குழியின் உள்ளே தரையில் மையத்தில் ஒரு வாயகன்ற பீங்கான் பதியும் படி சிறு குழியும் தோண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் பீங்கானை அந்தக் குழியில் வைத்து விடவேண்டும்.

ஒரு பானை எடுத்து அதன் அடியில் எட்டு அல்லது பத்துத் துளைகளை போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் தைலம் எடுக்கவேண்டிய மூலிகையை இடித்து அந்த பானையில் போட்டு, பானையின் வாய்க்கு மூடி இட்டு சீலை மண் செய்து உலர்த்திக் கொண்டு, குழியில் உள்ள பீங்கானில் பானையின் அடியில் போட்ட துளைகள் அனைத்தும் அடங்குமாறு வைத்துப் பானையைச் சுற்றியும், பானைக்கு மேலாகவும் குழியை நன்கு மூடும் படி வரட்டி அடுக்க வேண்டும். (கீழே படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு).

வரட்டி சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும். இப்படி எரியும் நேரத்தில் உஷ்ணத்தால் பானையில் இருக்கும் மூலிகையிலிருந்து தைலம் ஓட்டை வழியாக அடியிலுள்ள பீங்கானில் வடியும். பின்னர் நன்றாக சூடு ஆறியதும். மிக அவதானமாக சாம்பல்கள் எல்லாவாற்றையும் நீக்கிவிட்டு, பானையையும் அவதானமாக எடுத்து விட்டு பீங்கானில் உள்ள தைலத்தை சேமித்துத், தேவையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலே சொல்லப் பட்ட சீலை மண் செய்வது எப்படி?

பானையை மூடும் முடிக்கும் (அதுவும் மண்ணால் ஆனது) பானைக்கும் இடையிலான இடைவெளியை இல்லாது செய்ய துணியும் களிமண்ணும் சேர்த்து ஒரு கலவையாக செய்து அதனைக் கொண்டு அந்த இடைவெளியை ஒட்டுவதையே சீலை மண் செய்வது என்று சொல்லப் படுகிறது.

இங்கு குழித்தைலம் தயாரிக்கும் முறையை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.. அது உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு பயன்படும். எந்த மூலிகையில் எடுக்கும் குழித்தைலம் எதற்க்குப் பயன்படும் என்பதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...

Author: தோழி / Labels: , ,


மனைவியானாலும், பிள்ளைகளானாலும், நம்முடைய உதவி பெறும் வரை தான் நம்மேல் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவி இல்லை என்றால் அவர்களும் நம்மை வெறுத்திடுவார்கள். உயிருக்குயிரான மனைவியோ, பிள்ளைகளோ கணவன் இறந்ததும் உயிரை விட்டிருக்கிறார்களா? எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர்? இந்த உண்மையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

கட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும்,
. . . . காலன் தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை
. . . . வீழ்த்தி விட்டால்
கொட்டி முழங்கி அழுவார்; மயானம்
. . . . குறுகி, அப்பால்
எட்டி அடிவைப் பரோ? இறை வா!கச்சி
. . . . ஏகம்பனே
!

இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. உலகில் உண்மையாகவே தினமும் நடை பெறும் சம்பவம். ஒருவன் இறந்த பிறகு அவனைக் கொண்டுபோய்ச் சுடுகாட்டில் கொளுத்துவார்கள் அல்லது புதைப்பார்கள் அதோடு சரி அவனின் மனைவியோ, பிள்ளைகளோ அதற்குமேல் அவனுடன் செல்லப் போவதில்லை.இந்த உண்மையைச் சொல்வதன் மூலம் பட்டினத்தார் நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.

"புகழ் பெற்று வாழுங்கள், எல்லோருக்கும் நன்மையே செய்யுங்கள், எல்லா மக்களையும் உற்றோராகக் கொண்டு உதவிபுரிந்து, நன்னெறி தவறாது வாழுங்கள் அதனால் வரும் நன்மையையும் புகழும் தான் இறந்த பின்னும் உங்களுடன் வரும்" என்பதே அது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...

Author: தோழி / Labels: , ,

கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி தான் சித்தர்கள் கணித்திருக்கிறார்கள். கணிக்கும் விரல்களையே அவர்கள் கருவியாகக் கொள்கிறார்கள். ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் பரீட்சிக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள்.

"குறியாய் வலக்கரங் குவிந்த பெருவிரல்
வறியாவதன் கீழ்வைத்திடு மூவிரல்
பிரிவை மேலேறிப் பெலத்தது வாதமாம்
அறிவாய் நடுவிரலமர்ந்தது பித்தமே"


- திருமூலர் நாடி -

"பித்தத்தின் கீழே புரண்டதையமாம்
உற்றுப் பார்க்கிலோர் நரம்பே யோடிடும்
பத்தித்த மூவரும் பாய்கின்ற வேகத்தால்
மதித்த நாளம் போல் வழங்கும் நரம்பிதே"


- திருமூலர் நாடி -

"வழங்கிய வாதம் மாத்திரை ஒன்றாகில்
தளங்கிய பித்தம் தனிலரை வாசி
அழங்குங் கபந்தானடங்கியே காலோடில்
பிறங்கிய சீவர்க்கு பிசகொன்றுமில்லையே"


- திருமூலர் நாடி -

ஆகவே, ஒரு மனிதரின் கையில் வாதம் ஒரு மாத்திரையும், பித்தம் அரை மாத்திரையும், கபம் கால் மாத்திரையும் எந்தப் பிசகும் இல்லாமல் ஓடினால் நோயற்று அந்த மனிதர் இருக்கிறார் என்றும், இந்த அளவுகள் வித்தியாசப் பட்டால் நோயால் பீடிக்கப் பட்டுள்ளார் என்று அறிந்து கொள் என்று கூறுகிறார் திரு மூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஒலிகளுக்கும் உருவம் உண்டு...

Author: தோழி / Labels:


ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"


பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.


ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை -
கருத்தோசை.

3, பைசந்தி -
நினைவோசை.

4, பரை -
நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருமூலர் சொல்லும் யோக சித்தி...

Author: தோழி / Labels: , ,திருமூலர் தனது திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகத்தில் யோகப் பயிற்சிகளை மிகவும் எளிமையாக விளக்குகிறார்.


"பன்னிரண்டானைக்குப் பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்குப் பகல் இரவில்லையே!"

- திருமந்திரம் -

என்ற பாடலில்,

பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல், இரவு என்ற காலங்கள் இருக்கின்றன, மூக்கில் இருந்து தொண்டை வழியாக பிராணவாயு கீழ் நோக்கி இறங்குவதை சிரசில் உள்ள ஆன்மா (உயிர்) அறிவதில்லை.

ஆனால் பிராணவாயு மேல் நோக்கி செலுத்தப்பட்டால் அதை ஆன்மா அறியும், அப்படி ஆன்மா வாகிய சூரியன் அறிந்ததும் அதற்க்கு இரவு பகல் இல்லாத பிரகாசநிலை கிடைக்கும்.

பன்னிரண்டானை :- பன்னிரண்டு அங்குலம் ஓடும் பிராண வாயு.

பாகன் அறிகிலன் :- பிராணன் சுவாசப்பையை நோக்கிக் கீழ்ச் செல்லும் போது ஆன்மாவால் அதை உணரமுடியாது.

பாகன் அறிந்தபின் :-
பிராணன் சிரசை நோக்கி செல்லும் போது ஆன்மா அதை அறிந்து கொள்ளும்.

பகல் இரவில்லையே :- இப்படி பிராணனை சிரசிடம் போக செய்தவருக்கு பிறப்பு இறப்பு இல்லை.

இவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்லவைப்பதே யோக கற்பம் என்றும் யோக காய சித்தி என்றும் சொல்லப் படுகிறது.

இவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்ல வைப்பதால் கிடைக்கும் சித்தியே யோக சித்தியாகும்.

ஆகவே, யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள் யோகப் பயிற்சி கஷ்டம் என்று விட்டு விலகாமல், பிறவாமை வேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தைக் கடைப் பிடித்தால் இப்பயிற்சி எளிதாக சித்தியாகும் என்பதில் ஐயமில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உயர்ந்த மனிதன் யார்?

Author: தோழி / Labels: ,பட்டினத்தார் பாடல்களில் உலக இயற்கையாய், உலக மக்களின் இயல்பை, அவார்கள் உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டும் பாடால்கள் பல உள்ளன.

"அறந்தான் இயற்றும் அவனிலுங்
. . கோடி அதிகம் இல்லம்
துறந்தான்; அவனின் சதகோடி
. . உள்ளத் துறவுடையோன்;
மறம் தான் அறக்கற்று அறிவோடு
. . இருந்துஇரு வாதனையற்று;
இருந்தான் பெருமையை என்சொல்லு
. . வேன்? கச்சி ஏகம்பனே!"


பல அறங்களைத் தவறாமல் செய்யும் இல்லற வாழ்க்கை உடையவன் சிறந்தவன், அவனை விடவும் இல்லறம் துறந்து துறவரம் கொண்டவன் உயர்ந்தவன். அவன் இல்லறத்தானையும் விட உயர்ந்தவன்.

இல்லற இன்பத்தை துறந்து துறவு கொண்டவனையும் விட உண்மையான உள்ளத் துறவு கொண்டவன் உயர்ந்தவன். மனதால் எந்த எண்ணமும் எண்ணாமல் தன்னலந் துறந்து வாழ்பவன் உயர்ந்தவன்.

சொல்லமுடியாதளவு பெருமையுடையவன் யாரென்றால் சொல்கிறேன் கேளுங்கள் குற்றமற்ற கல்விகற்று, அறநெறியிலே நின்று நல்வினை தீவினைப் பயன்களைப் பற்றி எண்ணாமல் தன கடமையைச் செய்து வாழ்பவனே எல்லோரிலும் அளவிடமுடியாத உயர்ந்தவனாவான் என்கிறார் பட்டினத்தார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நூலால் இரும்பு அறுப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"பீங்கானோடு பொடிசெய்து சீலைவடிகட்டி
ஊமைத்தைச் சாத்தில் விட்டு மூணு
கிளை திரிச்சு தோச்சு இரும்பறப்பா"பீங்கான் ஓடுகளை நன்றாக தூள் செய்து அதை சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஊமத்தை இலையின் சாறுவிட்டு குழைத்து, அதில் மூன்று இழை கொண்ட நூலை சிறிது நேரம் ஊறவைத்து பின்ன்ர் அதை நன்கு காய வைக்கவும்.

இந்த நூலைக் கொண்டு இரும்பு அறுக்கலாம் என்கிறார் ஆகத்தியர்.

இத்துடன் இந்த ஜால வித்தைகள் பற்றிய பதிவுகளை நிறுத்திக் கொள்வோம்... அடுத்து வேறு ஒரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி?

Author: தோழி / Labels: ,

"பாவட்டக் கொழுந்து வடக்கே
போரவேர் ஆலங்குச்சி கொண்டு
கெல்லிப்பிடுங்கி பாம்பின் முன்
பிடியப்பா ஆடாது பாரே"


பாவட்டச் செடியின் வேர்களில் வடக்குப் பக்கமாக செல்லும் வேரை ஆலமரத்தின் குச்சியைக் கொண்டு தோண்டி அதைப் பிடுங்கி எடுத்து பாம்பின் முன் நீட்டினால் பாம்பு அசையாது என்கிறார் அகத்தியர்.


இனி அடுத்த பதிவில் நூலால் இரும்புத்துண்டை அறுப்பது எப்படி என்று பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தீயின் மேல் நடப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"வடதுத்திஷ சாகத்தில் லலலலல
லலல யென்று ஓதியெடுத்துதாம
வார்த்து காலில் தடவு ஆக்கி னியில்
நடக்கலாமிது அக்கினி ஸத்தம்பனமப்பா"


வடதுத்திச் செடியினை விசாக நட்சத்தன்று, “லலலலலலலல” என்கிற மந்திரத்தைச் சொல்லியாவாறே பிடுங்கி, தாம விட்டு அரைத்து காலில் பூசிக் கொண்டு அக்கினியின் மேல் நடந்தால் சுடாது இது அக்கினி வசியம் என்கிறார் அகத்தியர்.

இனி அடுத்த பதிவில் பாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...

Author: தோழி / Labels: ,

"மருக்கலம் வேரரைத்து ஆவெண்ணெயில்கொ
ளப்பிகையில் தடவு மழுவேடுக்கலாமே பாரு"


மருக்கலம் வேரைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாக அரைத்து எடுத்து, பின்னர் பசுவின் வெண்ணெய்யில் குழைத்து கையில் பூசிக் கொண்டு காய்ச்சிய இரும்பைக் கையால் தூக்கினால் சுடாது என்கிறார் அகத்தியர்.


இனி அடுத்த பதிவில் தீயின் மேல் நடப்பது எப்படி என்று பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.....

Author: தோழி /

நண்பர்களே !

சித்தர்களின் படைப்புகளை இயன்றவரையில் மிகைப் படுத்தாமல் அவர்களின் மொழியில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவல், குருவருளால் சாத்தியமாகி இருக்கிறது. இதுவரையில் கிடைத்த ஆதரவும் ஊக்கமும் நான் சிறிதும் எதிர்பாராதது. இனிவரும்நாட்களில் இந்த சிறியவளின் முயற்சியில் ஏதேனும் பிழையிருந்தால் பொறுத்தும், திருத்தியும் வழிநடத்த வேண்டுகிறேன்.

சித்தர்கள், இயற்கையோடு இனைந்த தற்சாற்பு வாழ்வியல் நெறியினை பின்பற்றியவர்கள். தமது தேவைகள் அனைத்தையும் தான் வாழும் சூழலில் இருந்தே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையும், ஞானமும் கொண்டிருந்தனர். .தங்களின் கண்டுபிடிப்புகள் அல்லது வழிமுறைகள் எப்போதும் நல்லவற்றுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயன் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர்.ஆசையே அத்தனை அழிவுக்கும் மூலாதாரம் என்பதை, புத்தருக்கு முன்னரே உறுதியாய் சொன்னவர்கள்.

இந்த வகையில் சித்தர்கள் நமக்கு அளித்துள்ள அரிய, எளிய நுட்பங்கள் சிலதை பகிர விரும்புகிறேன். இந்த நுட்பங்களை வித்தைகள் என்றும் கூறலாம். அரிய மூலிகைகளைப் பயன்படுத்தி செய்யப் படும் இந்த வித்தைகள் சமகால தொழில் நுட்பங்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு வெறும் நூலால் இரும்பினை அறுக்கும் வித்தையைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் தங்களின் பாடல்களில் மறைபொருளாய் பதிந்து வைத்திருக்கின்றனர். இனி வரும் பதிவுகளில் இத்தகைய சில நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறேன்...

இந்த வித்தைகள் எல்லாமே, குருவருளால் மட்டுமே சித்தியாகும். குருவை மிஞ்சிய வித்தை இல்லை.

குருவின் தாளடி பணிந்து தொடர்கிறேன்......

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜலதோஷத்திற்கு மருந்து...

Author: தோழி / Labels: ,

"ஒருபலம் கருஞ்சீரகம் யிருபலம் கழற்சிப்
பருப்பு மஞ்சள் ஒருபலம் ஒருசேர இடிச்சு
பொடி செய்து ஆறாவகுந்து நாளுக்கு
இருவேளை கொடப்பா தீரும்பாரே"


- அகத்தியர் குணபாடம் -

கருஞ்சீரகம் ஒருபலம், கழற்சிப்பருப்பு இருபலம், மஞ்சள் ஒருபலம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து ஆறாக பிரித்து காலை மாலையும் என மூன்று நாட்கள் உண்ண ஜலதோஷம் குணமாகுமாம். இதற்க்கு எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.

இனி சித்தர்கள் மூலிகைகள் மூலம் செய்த சில வித்தைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தலை முடி வளர...

Author: தோழி / Labels: ,

"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".


- அகத்தியர் குணபாடம் -

கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தலை முடி கறுக்க...

Author: தோழி / Labels: ,

"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"


நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.


"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".


பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஒத்தத் தலை வலிக்கு...

Author: தோழி / Labels: ,

"ஒருதலை வலிக்கு பூண்டரைச்சி
மெழுகுருகி அதிட் போட்டு
வலிச்ச பிறத்திலே பூசப்பா
நொடியில் நிக்கும் கேள்"


- அகத்தியர் நயன விதி -

பூண்டேடுத்து அரைத்து , மெழுகை அணலில் உருகவைத்து அதில் அரைத்த பூண்டைப் போட்டு கலக்கி வலிக்கும் இடத்தில் பூச நொடியில் ஒத்தத் தலைவலி நிற்க்குமாம்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சிறுநீரகக் கல் கரைய மருந்து...

Author: தோழி / Labels: ,

"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி
லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்
அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி
இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".

- அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 25 கிராம்
நெரிஞ்சி வேர் - 25 கிராம்
மாவிலங்கம் வேர் - 25 கிராம்
சிறு பூனை வேர் - 25 கிராம்

இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும் மருந்து...

Author: தோழி / Labels: ,

"அன்பது சங்கம் பழம் சுக்கு தேனுகடுகு
காசடை கலை வெள்ளுள்ளி பல்லு பூண்டு
பிடி இடித்து சேர நன்றா யரைத்து
உண்டை நிழலுலர்த்திக் கொள்வாயே
பாம்புகடி உயிர்போனாலும் சவத்திக்கு
ஒருகண்ணும் ஒருநாசியும் விடுவாயப்பா
ஒண்ணரை நாளிகை பாத் திரு
கண் மழிக்கும் னாசிகாத்திப் பரியும்
மறுனாசி கண்ணிலிட உயிர்வரும்கேளே"


- அகத்தியர் நயன விதி -

சங்கம் பழம் - 50 பழம்
சுக்கு - 35 கிராம்
கடுகு - 165 மில்லி கிராம்
வெள்ளுள்ளி - முப்பது பல்லு
பூண்டு - ஒருகைப் பிடி அளவு

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து உருண்டையாக செய்து நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். அதை உலர்ந்த கொள்கலன்களில் அடைத்து உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு தேவைப்படும் பொது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே செய்துவைத்துள்ள உருண்டையை தண்ணீரில் கரைத்து பாம்பு கடித்து இறந்த உடலின் ஒரு கண்ணிலும், அந்த கண்ணின் பக்கத்தை சேர்ந்த நாசித்துவாரத்திலும் மூன்று சொட்டு வீதம் விடவும். பிறகு ஒன்றரை நாளிகை கழித்துப் பார்த்தால் மருந்து விட்ட கண் இமைக்கும் ,நாசித்துவாரத்திளிருந்து லேசான சுவாசம் தெரியும், உடன் மேலே சொன்னது போலவே மறு கண்ணுக்கும் மறு நாசித்துவாரத்திற்கும் மருந்தை மூணு சொட்டுக்கள் வீதம் விட பின் ஒன்றரை நாளிகையில் மற்ற அவயங்களிலும் அசைவு வந்து போன உயிர் மீண்டு வந்து விடுமாம்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இருமலுக்கு மருந்து...

Author: தோழி / Labels: ,

"வெள்ளைக் காக்குறட்டான் வேர் ரகம்சக் கரைகாக்கு
றட்டான் கால்விரா நடை யுரைச்சி நெய்வார்த்து
விளக்கிலே சுண்டக் காச்சி அதிலே மருந்தை
உரைசிக் கொடப்பா புளிப்பு கைப்பு ஆகாது கேள்".


- அகத்தியர் நயன விதி -

வெள்ளைக் காக்குறட்டான் வேர் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
சர்க்கரை - 10 கிராம்


வெள்ளைக் காக்குறட்டான் வேர், சீரகம், சர்க்கரை, ஆகியவற்றை மேற்சொல்லப்பட்ட அளவுகளில் வாங்கி வேரையும் சீரகத்தையும் நெய்யில் வறுத்து, இடித்து தூளாக்கி சக்கரையை அத்துடன் கலந்து ஆறு பங்காகப் பிரித்து தினம் காலையும் மாலையும் என மூன்று நாட்கள் உண்டுவந்தால் இருமல் குணமாகிவிடும். இந்த மருந்து உண்ணும் பொது புளிப்பு, கசப்பு கொண்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்து பாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும் மருந்து பற்றி பார்ப்போம்...>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி?

Author: தோழி / Labels: ,

மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"


- அகத்தியர் நயன விதி -

நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன்.


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"

- அகத்தியர் நயன விதி -

உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.


"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"


- அகத்தியர் நயன விதி -

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.

"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"

- அகத்தியர் நயன விதி -

பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.

சித்தர்கள் சொல்லிச் சென்ற எளிய சில மருத்துவ முறைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நோய் வர முன் காப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

உடலை நிலை நிறுத்துவதற்க்காகப் பயன்பட்ட பொருட்கள் உடல் தாதுக்கள் என்று சொல்லும் சித்தர்கள், ஐம் பூதங்களின் சேர்க்கையே உடல் தாதுக்கள் என்கிறார்கள்.

உடலைப் பேணிப் பாதுகாப்பவைகளை மூன்றுவிதமாகப் பிரித்து, அவற்றை வாதம், பித்தம், கபம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இவை உடலில் சமநிலையில் இருக்கவேண்டும் என்று சொல்லும் அவர்கள், இவை முறையே 4:2:1 என்பதே சரியான அளவு என்றும் குறித்துள்ளனர்.

அகம் அல்லது புறத் தன்மைகளின் வேறுபாடுகளாலும், உணவு வேறு பாடுகளாலும், வாழக்கை முறை மாறுபாடுகளாலும் இந்த அளவுகளில் ஏற்படும் மாற்றமே நோயாகிறது என்கிறார்கள்.

இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வராதிருக்க "வருமுன் காப்போம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் சித்தர்கள் நோய் வராதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

நோய் வராதிருக்கும் வழியைக் காட்டும் பாடல்...

"பாலுண்போம் எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல் புணரோம் பகல் துயிலோம் பருவ முத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றைவிட்டோம் இடதுகையில் படுப்போம்
மூலஞ்சேர் கறிநுக ரோம் மூத்த தயிர் உண்ணோம்
முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்
நாலந்தான் அடைந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்குமிடத்தே"


பாலை அதிகளவில் பருக வேண்டும், எண்ணெய்த் தன்மையான உணவுகளைச் சாப்பிடும் நாளில் மட்டும் வெந்நீரில் குளித்து , பகலில் புணர்ச்சி நீக்கி, பகலில் தூங்காது, இள வெய்யிலில் இருக்காது, இருவேளை உண்டு, ஒருவேளை உணவைத் தவிர்த்து, மூலத்தை அதிகப் படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்து, புளித்த தயிரையும் தவிர்த்து, முதல் நாள் சமைத்த உணவுகள் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாது, பசிக்கும் போது மட்டுமே உணவருந்தி இருந்தால் எமனுக்கு நாம் இருக்கும் இடத்தில் வேலை இருக்காது என்பது பொருள்.

என்று நோய்வராதிருக்கக் கடைப் பிடிக்கவேண்டியவற்றைச் சொல்லும் இவர்கள்.

உடல் அவயங்களில் ஏற்படும் சில மாற்றங்களைக் கொண்டு மரணம் வருவதையும் முன்கூட்டியே கணிப்பது எந்த மருத்துவத்திலும் இல்லாத தனிச் சிறப்பாக சித்த மருத்துவம் விளங்கக் காரணமாகிறது. ஏன் எனில் மரணம் வருவதை முன்கூட்டியே அறிந்தால் தடுப்பது சுலபமல்லவா?

மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி? பார்க்கலாம் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்த மருத்துவம்...

Author: தோழி / Labels: ,

"மருந்து" என்பது பிணி போக்கும் பொருள். குறை நீக்கியாகும்.

அக, புற நிலையின் எவ்வகையிலும் மருந்து ஒன்றே சிறப்பாக வாழ வழியாகும்.

"வீர மருந்தொன்றும் விண்ணோர் மருந்தொன்றும் வொன்
நாரி மருந்தொன்றும் நந்தி அருள் செய்தான்
ஆதி மருந்தொன் றறிவா அகலிடஞ்
கொத்தி மருந்திது சொல்லவொண்ணாதே"


என்ற திரு மூலரின் பாடல் மருந்தின் தன்மைகளையும் அதன் தகமைகளையும் உணர்த்துகிறது.

கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் மருந்து கொண்டுவர அனுமான் புறப்படும் போது அதன் தன்மைகளை ராமன் அனுமானுக்கு சொல்வதாக இந்தப் பாடல் அமைகிறது...

"மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
...........மெய்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒருமருந்தும்,
...........படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
...........மெய்ம்மருந்தும், உள"


மக்கள் வாழும் சூழல், வாழ்க்கை முறைக் கேற்ப அவரவர்கள் மருத்துவ முறைகளும் வேறுபடும்.

நம் தமிழ் நாட்டவர்களால் உருவாக்கப் பட்டு இன்றுவரை போற்றிப் பாதுகாத்துப் பயன்படுத்தப் பட்டு வரும் மருத்துவமுரையே சித்தமருத்துவ முறையாகும்.

இந்த சித்த மருத்துவ முறையில் மாண்டவருக்கு உயிர் கொடுக்கக் கூட முடிந்தது என்றால் அதன் சிறப்பு எத்தகையது என்று சொல்லத்தேவையே இல்லை.

சித்த மருத்துவம் இவ்வளவு சிறந்ததாயின், அதை உருவாக்கியவர்கள் எவ்வளவு சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சித்த மருத்துவத்தை தந்தவர்களையே இன்றுவரை சித்தர்கள் என்று போற்றி வணங்குகின்றனர் தமிழர்கள்.

நோயைச் சோதித்தறிய சித்த மருத்துவத்தில் எட்டு வகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அவையாவன, நாடி, நா, மொழி, மலம், பரிசம், நிறம், விழி, சிறுநீர் போன்றவையாகும்.

இது தவிர எளிய வழியாக,

ஒரு கண்ணாடிக் குடுவையில் (குவளை) விடியக்காலைச் சிறுநீர் பிடித்து அதில் இரண்டு சொட்டு எள் எண்ணெய் விடவேண்டும்.

1, மோதிரம் போல் இடைவிட்ட வட்டத் தோற்றம் கொண்டால் - வாத நோய்.

2, எண்ணெய்த்துளி பாம்பு போல் தொற்றங்க்கொண்டால் - பித்த நோய்.

3, முத்துப் போல் திரண்டு நின்றால் - கப நோய். என்று முடிவு செய்யலாம் என்கிறார் போகர்.

சித்த மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை முறை உள்ளது என்பதற்கு ஆதாரமாக கீழ்வரும் பாடலைத் தருகிறேன்...

"குத்துங் காச முத்துப் போல்
கூடிப் பிரியும் குன்றாமல்
சற்றுங் களிம்போன்றில்லாமல்
தாம்பிரச் சாலகை முப்பதாம்
முற்றும் ஆறு விரல் நீளம்
மூன்றும் பின்னும் விரல் நீக்கி
மற்ற நிலையை வத்தனைத்தும்
வைத்துக் கட்டிக் குறை தீரே"


இந்தப் பாடல் காச நோய்க்கான சத்திர சிகிச்சை பற்றி விளக்குகிறது.

இவ்வளவு சிறப்புப் பெற்ற சித்த மருத்துவ முறைகளில் நாமே செய்து கொள்ளக் கூடிய எளிய சில மருத்துவ முறைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குருவை அடையாளம் காண்பது எப்படி?

Author: தோழி / Labels:

இந்த ஆன்மா பரம் பொருளில் இருந்து வந்தது. அந்தப் பரம் பொருளிலேயே சென்று ஒடுங்க வேண்டும். ஆனால் இது தன்னை "தான்" என்று கருதி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறது. அந்த இன்னல்களில் இருந்து விடுபட்டு தன்னை அறியவும், பரம்பொருளை அறியவும் ஞானம் பெறவேண்டும். அந்த ஞானத்தை அடைய வழிகாட்டுபவரே குரு என்பவர்.

குரு இன்றி ஞானம் இல்லை, ஞானம் இல்லை என்றால் முக்தி இல்லை.

"கு" என்ற எழுத்து இருளைக் குறிக்கும். "ரு" என்ற எழுத்து ஒளியைக் குறிக்கும், அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞான ஒளி தருபவர் குரு.

"சத்குருவின் அருளால் மனதைச் சும்மா இருக்க செய்தாலன்றி எல்லாரும் விரும்பும் அமைதியை எவ்வழியிலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் எவராலும் அடைய முடியாது" என்பார் ரமணர்.

தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம்.

போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்ளுவார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழு மாறே"


- திருமந்திரம் -

"ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே"

- திருமந்திரம் -

'வீணான நினைவுகளை விடாமல் எண்ணுபவர் செய்யும் உபதேசத்தில் சிவத்தியானம் சிறந்து வெளிப்படாது தீமைகளே வெளிப்படும். அவுபதேசத்தைக் கேட்பவர் அறிவு கெடும். அக்குருவால் வாழும் நாட்டுக்கும் அரசுக்கும் தீங்கு வரும்' என்கிறார் போலிக் குரு பற்றி திருமூலர்.

குரு ஒளியாயிருக்கிறார், சீடனுக்கு ஒளியை வழங்குகிறார், சீடனின் மனதில் இருக்கும் இருளை போக்குகிறார், சீடனை ஒளிமயமாக்குகிறார். ஆகவே எவர் சிந்தனைகள், சொற்கள் உன்னை தெளிய வைக்கிறதோ அவரே உனது குரு ஆவார் என்கிறார் சட்டைமுனி.

ஆகவே, உங்களைத் தெளிய வைப்பவரை உணர்வது உங்கள் உள்ளுணர்வேயாகும். அந்த உள்ளுணர்வு உங்கள் குருவை உங்களுக்கு அடையாளம் காட்டும் என்கிறார் சட்டைமுனி.

இனி சித்தர்கள் சொன்ன சிறு சிறு மருத்துவ முறைகளைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோக காயகற்ப முறை...

Author: தோழி / Labels: ,

மருத்துவ முறையிலான காய கற்பத்திற்கும், யோக முறையிலான காய கற்பத்திற்கும் பல வேறுபாடுகள் உண்டு, மருத்துவ காயகற்பம் உண்டவர்கள் அதை சாப்பிட்டதன் மூலமாக மரணத்தைத் தள்ளிப் போடலாம், ஞானம் இல்லாமல் உலக விஷயங்களில் ஈடுபடலாம்.

ஆனால், யோக முறையில் காய கற்மானது, நான், எனது என்கிற ஆணவங்களை அழித்து மனதை அடக்கும். உடலை அருள் தேகமாக்கும்.

யோக கற்ப முறையில் மனத்தைக் கட்டுவதே அதாவது மனதை அடக்குவதேயாகும்.எவரால் பிராணவாயு கட்டப் படுகிறதோ, அவரால் மனமும் கட்டப்படும், அதேபோல் எவரால் மனம் கட்டப் படுகிறதோ, அவரால் பிராணவாயுவும் கட்டப்படும். ஏன் எனில் மனம், பிராணன் இவற்றுள் எதாவது ஒன்றைக் கட்டினால் மற்றொன்று கட்டப்படும். இதுவே யோக கற்பமாகும்.

இதை திருமூலர் திருமந்திரத்தில் தெளிவாகச் சொல்கிறார்.

"ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியதுவாமே"


- திருமந்திரம் -

அப்படியானால் எல்லோராலும் இந்த யோக கற்பம் அடைய முடியாதா? அதற்க்கு என்ன தான் வழி? அதையும் திருமூலரே சொல்கிறார்.

"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே"


- திருமந்திரம் -

அதாவது ஒரு குரு மூலமாகவே இதை அடைய முடியும் என்கிறார் திருமூலர்.

அப்படியானால் எங்களுக்கு உரிய குருவை அடையாளம் காண்பது எப்படி? இது எல்லோர் மனதிலும் பொதுவாக எழும் கேள்வி. அந்தக் குருவை அறிவது எப்படி என்பது பற்றி சித்தர்கள் என்ன சொல்லி இருக்காங்க என்று அடுத்தபதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயகற்பங் கொண்ட சித்தர்கள்...

Author: தோழி / Labels: , ,

"கேளப்பா அகத்தீசர் கற்பம் நூறு
கிருபையுள்ள நந்தீசர் கற்பம் நூறு
நாளப்பா போகமுனி நாதர் கற்பம்
நாற்பத்து நாலுகற்பம் நன்றாய்க்கொண்டார்
வேளப்பா சட்டை முனிதின்ற கற்பம்
மேதினியில் லிருபத்தோர் கற்பமாகும்
ஆளப்பா கொங்கண ரீரெட்டாக
அருந்தினார் கற்பமிக அருந்தினாரே"

"அருந்தினார் திருமூலர் அறுபத்தாறு
அற்புதமாய் கற்பன்களன்பாய்க் கொண்டார்
பொருந்தியதோர் கோரக்கநாதர் தானும்
பூதலத்தில் தொண்ணூறு கற்பங்கொண்டார்
திருந்தியதோர் ரோமரிஷி கூகைக்கண்ணர்
செப்பமுள்ள மச்சமுனி இராமதேவர்
வருந்தியே எழுபத்தோர் கற்பங்கொண்டார்
மானிலத்தில் சாகாவரம் பெற்றாரே"


சித்தர்கள் அவரவர் அனுபவித்தபடி கற்ப முறைகளைக் கூறியுள்ளார்கள் என்றும் அவரவர் கொண்ட கற்ப எண்ணிக்கைகளைத் தேரையர் பட்டியலிடுகிறார்.
அகத்தியர் 100, நந்தீசர் 100, போகர் 44, சட்டைமுனி 21, கொங்கனவர் 16 , திருமூலர் 66, கோரக்கர் 90, ரோமரிஷி 71, மச்சமுனி 71,ராமதேவர் 71. இப்படிக் கற்பம் சாப்பிட்டவர்கள் அநேகம் பேர் தெரியாமலும் இருக்கிறார்கள். வள்ளல் பெருமான் இவர்கள் காலத்துக்குப் பிந்தியவர், ஆனால் வள்ளலார் மருத்துவ காயகற்ப முறைகளை விட யோக காயகற்ப முறைகளையே பின்பற்றினார்.

அது என்ன யோக காயகற்ப முறை? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...

Author: தோழி / Labels: , , ,

"நிசமான கற்பங்கள் தின்னும் போது
நிசமான சடத்திற்கு வருத்த மேது
பாசமான கற்பமுண்போன் பத்திம்விட்டு
புசமான பெண்ணோடு புணர்ச்சிகொண்டால்
பேரான சயரோகம் சண்ணும் பாரு
வேளப்பா கற்பமுண்போன் புளிதின்றாக்கால்
மிடுக்கான பெரு வயிறு யுப்பலாகி
காளப்பா கால்கடுப்புமா குந்தானே
"

- போகர் -

உண்மையான கற்பங்கள் உண்ணும் போது உண்பவரது உடலுக்கு எந்த வருத்தமும் இருக்காது, கற்பம் உண்பவன் பத்தியம் கடைப்பிடிக்க தவறி பெண்ணோடு புணர்ச்சிகொண்டால் சயரோகம் உண்டாகும், கற்பம் உண்பவன் புளி தின்றால் அவன் அழகான வயிறு வீங்கி, கால் கடுப்பும் உண்டாகுமாம்.

"தானென்ற கற்பமுண்போன் கிழங்கு தின்றால்
தன்னுடம்பில் சோகையோடு பாண்டுவாகும்
மீனென்ற மாமிசங்கள் மீறித் தின்றால்
மிக்கன மயக்கமொடு சுரமுமாகும்
மோனென்ற தாகத்தால் மோருகொண்டால்
மிகையான குன்மாவலி மிடுக்குமாகும்
பானென்ற பச்சையுப்பு தின்றாயானால்
பட்டுதடா கண்ணிரெண்டும் பரிந்துகாணே"

- போகர் -

கற்பம் உண்பவர் கிழங்கு சாப்பிட்டால் தன்னுடம்பில் சோகையோடு பாண்டு என்ற வருத்தமும் உண்டாகும், மீன், மாமிசங்கள் சாப்பிட்டால் அதிக மயக்கத்துடன் காய்ச்சலும் உண்டாகும், தாகம் என்று சொல்லி மோர் அருந்தினால் அதிகளவான வயிற்றுவலி வரும், உப்பு சாப்பிட்டால் கண்கள் இரண்டும் பார்க்கும் சக்தியை இழந்து விடுமாம் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பத்தியமில்லா காயகற்பமுறை...

Author: தோழி / Labels: , , ,

"வடிவான கிளி மூக்கு மரமதொன்று
மகாஉயர்த்தியாயிருக்கும் மகத்தானமரம்
இடிவான யிலையதுவும் அரிசிபோலிருக்கும்
ஏத்தமாம் பூப்பூத்த மற்றநாள் பழமாம்
படிவான பழத்தையுண்டால் சாமத்தில்பற்பமாகும்"


- போகர் -

கிளி மூக்கு என்று ஒரு வடிவான மரம் உள்ளது, அது மிகவும் உயரமாக இருக்கும், அந்த மரத்தின் இலை அரிசி போல இருக்கும், அந்த மரமானது பூப்பூத்த அடுத்த நாளே பழமாகி பழுத்து விடும். அந்தப் பழத்தை உண்ட அன்று இரவே காய கற்பம் ஆகும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயகற்ப முறை - 04

Author: தோழி / Labels: , , ,

"உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி
உகந்துமே மண்டலம் தான் கொண்டாயானால்
வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம்
மேனியில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும்
தண்மையாய் சடந்தானும் கற்பாந்தகாலம்
சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும்
ஒண்மையா இருட்டறையி லிருந்தாயானால்
உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும்பாரே"


- போகர் -


கருவேம்பின் பட்டை, வேர் இவைகளை எடுத்து உலர்த்தி காய வைத்து, தூளாக்கி தினமும் மாலை வேளையில் ஒரு பலம் அளவு எடுத்து ஒருமண்டலத்திட்கு உண்டு வந்தால் உடம்பில் உதிர்ந்த ரோமமெல்லாம் சீராக மீண்டும் வளரும், இந்தக் கற்பம் உண்ணும் காலத்தில் சமாதியிலே இருக்கலாம் அது சிறப்பாகக் கைகூடும், இந்த கற்ப மருந்து உண்ணும் காலத்தில் இருட்டறையில் இருந்தால் உடம்பானது சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்குமோ அது போல ஒளி வீசும் என்கிறார் போகர்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...