அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...

Author: தோழி / Labels: , ,
பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.

வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.

“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.


விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.

அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”


விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும், ஆகவே, அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

rajsteadfast said...

அருமையான பதிவுகள். மென்மேலும் படிக்க ஆவலாக உள்ளேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். புதிய இடுகைகள் வெளியிடும் போது கீழ்கண்ட முகவரிக்கு தெரிவிக்கும்படி
தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறன்.

நன்றி

rajsteadfast@gmail.com

chandru2110 said...

வேப்ப மரத்தின் ஒவ்வோர் பாகத்தின் நன்மைகளை எழுதவும்.

SivaSubramanian said...

எப்படி உன்ன வேண்டும் என்று கூறுங்கள் தோழி................

Unknown said...

அருமையான பதிவுகள். மென்மேலும் படிக்க ஆவலாக உள்ளேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். புதிய இடுகைகள் வெளியிடும் போது கீழ்கண்ட முகவரிக்கு தெரிவிக்கும்படி
தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறன்.

நன்றி
vsrajasekar2011@gmail.com

Dinesh Nataraj said...

நல்ல தகவல்

Post a comment