சித்தர்கள் பற்றி அனைவரும் அறியமுடியுமா...?

Author: தோழி / Labels: , ,

சித்தர்கள் இலக்கியங்கள் எளிதாக எங்கள் கைகளில் கிடைப்பதில்லையே? ஏன்? அதற்கும் விளக்கம் அளிக்கிறார் அகத்தியப்பெருமான்.

"கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகிகட்கே
பெரிசுத்த நூலிதுதான் பதனம் பண்ணும்
விதியிலை என்றெண்ணாதே; நூதலைத்தேடு;
விண்டு மிண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;
நிதி பெறுவார் உபசாரம் நீக்கி போடு;
நினைவு கொண்டு சூத்திரத்தின்
நிலையை பாரே"


- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:7 -


“அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
அகங்கடந்த மேஞ்ஞானியருள் பெற்றோர்க்குக்
குறு முகமாய் கொடுப்பதல்லால் மற்றோர் கையில்
கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றி
பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானிகட்கே வெளியிட்டேனால்
கையடக்கமாக வைத்துக் கண்டுதேறே”


- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:23 –

அதாவது ஞானமார்க்கத்தில் நாட்டம் உள்ளவர்கள் குருமுகமாய் அறிந்து கொள்வதற்காகவே பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும், எல்லோருக்கும் பொதுவாக தம்முடைய நூல்களை அவர்கள் இயற்றவில்லை என்றும் இந்தப் பாடல் மூலம் தெளிவு படுத்தியுள்ளார் அகத்தியர்.

சித்தர்களின் பாடல்களில் உவமை, உருவகம் போன்ற இலக்கிய நயம் இல்லாது இருப்பினும் தம் கருத்துக்களை மறைபொருளாக பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்திக் கூறிச் சென்றுள்ளனர். இவை ஓர் அரிய பொக்கிஷம். இதனை நாம் முழுமையாக உணர்ந்து பொருள் புரிந்து கொண்டோமாவெனில் இல்லை என்றே கூற வேண்டும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்...!!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.

இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.

ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஆகவே,
சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே.

அடுத்த பதிவில் சித்தர்கள் பற்றி ஏன் அனைவராலும் அறியமுடிவதில்லை என்பது பற்றி பார்போம்…

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி...."

Author: தோழி / Labels: , ,

கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் பாடிய பாடல் இது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"


மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான்.
ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான்.

தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.

ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர் இந்தப்பாடலில்...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


துறவால் நீர் கண்ட பயன் என்ன...?

Author: தோழி / Labels: ,


பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார்.

அதை கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரை காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங்கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் அமர்ந்திருந்தார்.

அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாக செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாக கேட்டான்.

அவை எல்லாம் இருந்திருந்தால் நான் உம்முன் நின்றிருப்பேன். துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள். இந்த சிறப்பு ஒன்று போதாதா.. !

என்று அமைதியாக பதிலளித்தார் பட்டினத்தார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அஷ்டமாசித்துக்கள்...

Author: தோழி / Labels: ,


அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......

Author: தோழி / Labels:


இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!

சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

அஷ்டமா சித்துக்களையும், யார் அந்த சித்து செய்தார்கள் என்ற விளக்கத்துடனும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...

Author: தோழி / Labels:

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனிதன் வருகிறான்...!

Author: தோழி / Labels: ,

சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் ஜீவ சமாதி அடைந்தவர் ‘தோபா சுவாமிகள்’, அவர் உடம்பில் ஆடையின்றி திகம்பரராய்த் திரிந்த ஒரு சித்த புருஷர். சென்னையிலும், அக்கம்பக்கத்து ஊர்களிலும் அவர் சஞ்சரித்திருக்கிறார்.

ஒருமுறை அவர் சென்னை, திருவொற்றியூரில் ஒரு தெருவோரமாய் அமர்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் அவரவர் குணங்களுக்கேற்ப, “நாய் போகிறது, நரி வருகிறது. கழுதை வருகிறது,பேய் திரிகிறது” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி எல்லோரையும் மிருகங்களாகவும், கீழான பிறவிகளாகவும் வருணித்துக்கொண்டிருந்த தோபா சுவாமிகள் திடீரென, “இதோ மனிதன் வருகிறான்!” என்றார்.

அப்போது அந்த வழியாக வந்தவர் வேறு யாருமல்ல. வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தான்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குருவுக்கு சீடர் உணர்த்திய உண்மை...

Author: தோழி / Labels:

மச்சேந்திரர் என்ற சித்தருக்கு, ‘கோரக்கர்’ சீடனாக இருந்தார். இவர்கள் இருவரும் ஒருநாள் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது தன் சீடனிடம் மச்சேந்திரர், “இந்தக் காட்டில் திருடர் தொல்லை உண்டா?” என்று கேட்டார்.

அதற்கு கோரக்கர் எந்த பதிலும் சொல்லாமல் தன் குருநாதர் ஏன் அப்படிக் கேட்டார் என்று சிந்தித்துக்கொண்டே வந்தார். இருவரும் ஒரு குளக்கரையை அடைந்தனர். மச்சேந்திரர் தன் சீடர் கோரக்கரிடம், தான் கொண்டு வந்த துணி மூட்டையைக் கொடுத்து விட்டு, காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சென்றார்.

அப்பொழுது அந்தத் துணி மூடையைச் சோதித்துப் பார்த்த கோரக்கர் அதில் தங்கக் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டார்! “இதனாலன்றோ நம் குருநாதருக்கு பயம் உண்டாயிற்று?” என்று நினைத்து அந்தத் தங்கக் கட்டியை குளத்தில் வீசி எறிந்தார். பிறகு இருவரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் குருநாதர் மச்சேந்திரர், “இங்கே கள்ளர் பயம் உண்டா என்று கேட்டேன், நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே?” என்றார். அதற்கு கோரக்கர் சொன்னார். “கள்ளர் பயம் குளக்கரையிலேயே நீங்கி விட்டது!”

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மகாமுனி பாபாஜி மகராஜ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் இருந்து...

Author: தோழி / Labels:


லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்; மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்த யோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவ பாபா (சிவ அவதாரங் களின் பட்டங்கள்) முதலியன.

“பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித் தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசையை ஈர்க்கிறான்,” என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.
“பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது அடை யாளம் கண்டுகொள்வதோ சாத்தியம்.

“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத மான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்.

“ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.

“ஐயா, எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.

“அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டும்?”

இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப் படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். “வேதனை நிறைந்த மரணத் திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது" என்றார்.

இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்குரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்க திறனுடன் அவன் ஏறி வந்துவிட்டான்.

“ஐயா, தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்” அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. “செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக் கணக்கில் இடை விடாமல் தங்களைத் தேடிக் கொண்டி ருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.”

மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டு தலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.’

“அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,” பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.

அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத் தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார்.

அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார். அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

“நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்” உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்’என்றார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் என்றால் யார்...?

Author: தோழி / Labels: ,

கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களை சித்தர்கள் என்றும் தேவாரம் வேறு படுத்திக் கூறும்.

ஆகமமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்திகொண்டு அருட்ஷக்தியை வளர்த்து ஆன்ம பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருளை வழங்கி வருகின்ற பெரியோர்களே, மகான்கள் அவர்களே சித்தர்கள் என்று விளக்கம் கூறுகிறார் மீ. ப. சோமசுந்தரனார்.

மூச்சினை அடக்கி யோகா ஆற்றலினால் உடலில் உள்ள மூலாதாரத்தில் மனதை முறையாகக் நாட்டிக் குண்டலினியை எழுப்பி பற்பல அனுபவமும் வெற்றியும் கண்டு அப்பாலுள்ள எல்லாம் என பொருளில் நினைத்து சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவி உள்ளது என அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகிறார்.

இவர்கள் சொல்வது இருக்கட்டும். சித்தர்கள் பற்றிய குறிப்புகளை சித்தர்கள் எப்படி தருகிறார்கள்??

சித்தர்கள் என்ற கேள்விக்கு அவர்களே தரும் பதில் இதோ.....

"ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்" என்று கருவூரர் சொல்கிறார்.

"எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன்"
என்ற சட்டை முனியும்,

"சிந்தை தெளிந்து இருப்பவ ஆர், அவனே சித்தன்"
என்றும்,

"செகமெல்லாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்" என்றும் வான்மீகரும்,


" யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே
" என்றும்,

"சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே"
என்றும் திருமூலரும் சித்தர்களுக்கு விளக்கம் தருகிறார்.

இந்த சித்தர் என்ற திருக் கூட்டத்தினர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் இருந்தமை அவரது திரு வாக்கினாலும் புலனாகிறது.

"மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்"

என்று தொல்காப்பியர் புறத்திணையியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியார், "காமம், வெகுளி, மயக்கம்" இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்" என உரை எழுதிக் கலசயோனியாகிய அகத்தியர் முதலியோரும் அறிவர் என்றுணர்க" என விளக்கம் எழுதியுள்ளார். எனவே தொல்காப்பியர் கூறிய அறிவரைச் சித்தர் என விளக்கம் கூறுகிறார். இதனால் அவர்தம் காலத்து சித்தர்களை "அறிவர்"என அழைக்கப்பட்டது புலனாகும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...