மீண்டு (ம்) வருவேன்...... விரைவில்

Author: தோழி / Labels:

நண்பர்களே,

இடைப் பட்ட நாட்களில் சித்தர்கள் இராச்சியம் பதிவை மேம்படுத்தாதது  குறித்து விசாரித்து எழுதப் பட்ட நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்களை இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. தற்போது என் வாழ்வின் மிகத் துயரமான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன். 

சமீபத்தில் நேர்ந்த என் தாயாரின் மறைவு தந்த அதிர்ச்சியினால்  நிலைகுலைந்து  மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த  என் தந்தையாரும் கடந்த வாரத்தில் காலமானார். 

இது போலொரு துயரம் எந்தவொரு மகளுக்கும் வாய்க்கக் கூடாது. எது எப்படியானாலும்  எல்லாம் வல்ல குருவோடும், தெய்வத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட அவர்களின் நினைவைச் சுமந்தபடி  என் பயணம் தொடர்கிறது. 

கூடிய விரைவில் புதிய பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.

புரிதலுக்கு நன்றி.

தோழி (தர்ஷினி)


பதார்த்த குண சிந்தாமணியும்..... வேர்களும்.

Author: தோழி / Labels: , , ,

சித்த மருத்துவத்தில் வேர் முதல் தளிர் வரையிலான மொத்த தாவரத்தையே  "சமூலம்" என்கிறோம். அதாவது  ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை,பூ, காய், கனி, விதை என எல்லா பாகத்தையும் உள்ளடக்கியது சமூலம்.  

சித்த மருந்து தயாரிப்பில் "மூலம்" என்பது வேர்களைக் குறிக்கும் பதம். 

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் வேர்களைப் பற்றியும், அவற்றின் தொகுப்புகளைப் பற்றியும், அவைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளைப் பற்றியும் அருளியிருக்கிறார். 

 "பஞ்சமூலம்" , "சிறு பஞ்சமூலம்", "பெரு பஞ்சமூலம்", "அஷ்டமூலம்", "தசமூலம்" என ஐந்து பெரும் தொகுதிகளாய் வேர்களை வரையறுத்திருக்கிறார். இவை முறையே ஐந்து, எட்டு, பத்து வெவ்வேறு மூலிகை வேர்களின் தொகுப்பாகும். 

இந்த மூலிகை சேர்க்கைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகள், குறிப்பிட்ட  வகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. நோயின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து இந்த மூலிகைகளின் சேர்க்கைகளின் அளவும், விகிதமும் மாறுபடும்.

இன்றைய பதிவில் முதல் வகையான "பஞ்சமூலம்" பற்றிய தகவல்களை பார்ப்போம். இதைப் பற்றி தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.

செவ்வியம் பேரரத்தை சித்திரமூ லஞ்சுக்கோ
டோவ்வுஜண்டு பாரங்கி யோரைந்தும் - வெவ்வினையச்
சண்ணு பஞ்ச மூலமெனத் தாரணியெல் லாம்அறிய
வண்ண மயிலே வழுத்து

- தேரையர்.

பஞ்ச மூலம் என்பது ஐந்து வெவ்வேறு மூலிகை வேர்களின் சேர்க்கை. அவை பின்வருமாறு....

1. திப்பிலி வேர்
2. பேரத்தை வேர்
3. கொடிவேலி வேர்
4. சுக்கு வேர்
5. கண்டு பரங்கி வேர் 

இந்த பஞ்ச மூல வேர்களைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளினால்  வாதம், மகாவாதம், பக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், பித்தம், பித்தசுரம், குடல்பிரட்டல், வாந்தி, மனக்கலக்கம், குழப்பம், கபம், இருமல், சலதோசம், மூக்கடைப்பு, காசம், சுவாசகாசம், இரத்தகாசம், கபாலநீர், நீர்க்கோர்வை ஆகிய நோய்களை தீர்க்க முடியுமாம்.

இந்த மருந்துகளை தயாரிக்கும் முறைகளைப் பற்றி பிரிதொரு தருணத்தில் தனியொரு தொடராய் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் சிறு பஞ்சமூலம் மற்றும் பெரும் பஞ்சமூலம் பற்றிய தேரையரின் தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...